பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

663

னுக்குக் கீழ்ப்படிந்தனர். இலங்கையிலிருந்து முத்துக்களும் யானைகளும் திறையாகக் கொடுக்கப்பட்டன. காவேரிக்கரையிலுள்ள கண்ணனூர்க் கொப்பம் என்ற ஹொய்சளர் கோட்டை சுந்தரபாண்டியன் வசமாயிற்று. பல ஹொய்சளப் படைவீரர் உயிர் துறந்தனர்; பல பெண்டிர் பிடிபட்டனர்; பண்டாரங்களும் யானை குதிரைகளும் பிடிபட்டன. கடைசியாக அப்போரில் 1262-ல் ஸ்ரீரங்கத்துக்கருகில் சோமேசுவரனே உயிர் நீத்தான். அதன் பிறகு சுந்தர பாண்டியன் சேந்தமங்கலத்தைத் தாக்கிக் காடவனை நடுங்கச் செய்து தன் சிற்றரசனாக்கிக் கொண்டான். மகத நாட்டையும் கொங்கு நாட்டையும் பாண்டிய நாட்டுடன் சேர்த்தான்; கண்ட கோபாலனைக் கொன்று காஞ்சீபுரத்தைப் பிடித்துக்கொண்டான். காகதீய கணபதியுடனும் அவனுடைய தெலுங்கச் சிற்றரசருடனும் நெல்லூர் மாவட்டத்திலுள்ள முடுகூரில் போர் புரிந்து வெற்றியடைந்தான். முடிவில் நெல்லூரில் ஒரு வீராபிஷேகம் செய்து கொண்டான். 1262-64-ல் இலங்கையிலிருந்து சில மந்திரிகள் வேண்டுகோளுக்கிணங்கி, வீரபாண்டியன் அத்தீவின் மீது படையெடுத்துச் சென்று, ஓர் அரசனை வென்று, மற்றொருவனைக் கொன்று, இலங்கையில் ஒரு பகுதியை ஆண்டு கொண்டிருந்த சாவக (மலேயா) அரசன் சந்திரபானுவின் மகனுடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டான்.

விரோதிகளின் தொந்தரவினால் சோமேசுவரன் தன் வாழ்நாளிலேயே தன் இராச்சியத்தை இரண்டாகப் பிரித்து, வடபாகத்தில் மூத்த மகன் III-ம் நரசிம்மனையும், தென் பாகத்தில் இளையவன் இராமநாதனையும் ஆட்சிக்கு நியமித்தான். தன் தகப்பன் காலஞ்சென்ற பின் இராமநாதன் கண்ணனூர்க் கொப்பத்தை மீட்டுக்கொண்டான். சுந்தரபாண்டியன் 1268-ல் மரணமடைந்ததும், மாறவர்மன் I-ம் குலசேகரன் (1268 1308) பட்டம் பெற்றான். அவனும் ஒரு பேரரசன். அவன் காலத்தில் அவன்கீழ்ப் பல பாண்டிய அரசகுமாரர் நாட்டின் பகுதிகளைத் தனித்தனியே ஆண்டு வந்தனர். இது பாண்டிய வமிசத்தில் தொன்று தொட்ட வழக்கம்போல் தோன்றுகிறது. I-ம் குலோத்துங்கன் காலத்திலேயே அவன் ஐந்து பாண்டியரைப் போரில் வென்றதாகச் சாசனங்கள் கூறுகின்றன. குலசேகரன் 1279-ல் இராமநாதனையும் சோழ இராசேந்திரனையும் ஒருங்கே போரில் வென்றான். சோழ நாடும் ஹொய்சளருடைய தமிழ் நாடுகளும் அவன் வசமாயின. அவன் திருவிதாங்கூர் நாட்டில் ஏற்பட்ட சிறு கலகங்களை அடக்கினதுமன்றி, இலங்கைத் தீவு பஞ்சத்தில் வருந்திக்கொண்டிருந்த சமயம் பார்த்துத் தன் மந்திரி ஆரிய சக்கரவர்த்தியை அத்தீவின் மீது படையெடுக்கச் செய்தான். அவன் அங்கே சென்று, பல பாகங்களை அழித்துச் சுபகிரி (யாபகு)க் கோட்டையைப் பிடித்து, புத்தருடைய ‘பல்’ விக்கிரகத்தையும் மற்றும் பொருட் குவைகளையும் எடுத்துக்கொண்டு திரும்பினான். இது I-ம் புவனேகபாகுவின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் நடந்தது. அதற்குப்பின் இலங்கை சுமார் இருபது ஆண்டுகள் வரை பாண்டியனால் ஆளப்பட்டுவந்தது. 1303-ல் பட்டம் பெற்ற III-ம் பராக்கிரமபாகு பாண்டி நாட்டுக்கு நேராகச் சென்று, குலசேகரனிடம் நயந்து பேசிப் புத்தர் பல்லை மீட்டுக்கொண்டான். குலசேகரன் இறந்தபின் ஏற்பட்ட கலகங்களுக்கிடையே இலங்கை தன் சுயஆட்சியை மீட்டுக்கொண்டது. குலசேகரனுடைய கடைசிக்காலத்தில் அவனுடைய மக்களுக்குள் விரோதம் ஏற்பட்டது. குலசேகரன் இளையாள் மகன் வீரபாண்டியனுக்குப் பட்டங்கட்ட ஏற்பாடு செய்தான். ஆகையால் அவன் காலஞ்சென்றதும் அவன் மூத்த மகன் சுந்தரபாண்டியன், வீரபாண்டியனுடன் போர்தொடுத்தான். சுந்தரபாண்டியனே குலசேகரனைக் கொன்றதாகவும் சில ஆதாரங்கள் காணப்படுகின்றது. யுத்தத்தில் வீரபாண்டியன் வென்றான். சுந்தரபாண்டியன் வடநாட்டுத் துருக்கர்களுடைய உதவியை (1310) நாடவேண்டி வந்தது.

இராமநாதன் தமிழ்நாட்டை யிழந்ததும் மைசூருக்குச் சென்று தன் தமையன் நரசிம்மனிடம் நாட்டில் பங்குவேண்டிப் போர் தொடங்கினான். நரசிம்மன் அதே சமயத்தில் யாதவருடனும் காகதீயருடனும்போர் புரிய வேண்டியிருந்தது. இராமநாதன் பெங்களூர், கோலார், தும்கூர் மாவட்டங்களைப் பிடித்துக்கொண்டு, குந்திரணியைத் தன் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தான். நரசிம்மன் 1292-ல் இறந்தான்; அவனுக்குப்பின் III-ம் பல்லாளன் பட்டம் பெற்றான். இராமநாதன் அவனுடன் போர் புரியாவிடினும் அவனுக்கு விரோதமாகவே இருந்து, மூன்று ஆண்டுகளுக்குப்பின் மரணமடைந்தான். அவன் மகன் விசுவநாதனும் சில ஆண்டுகள் பல்லாளனுக்கு விரோதியாக இருந்து பின் எங்கேயோ மறைந்தான். 1300க்கு முன் ஹொய்சள ராச்சியம் மறுபடி ஒன்றுபட்டுப் பல்லாளனால் ஆளப்பெற்றது. பாண்டிய நாட்டில் ஏற்பட்ட உட்கலகத்தின் போது, இராமநாதன் இழந்த தமிழ்நாட்டுப் பகுதிகளைப் பல்லாளன் மீட்டுக்கொள்ள முயன்றான். ஆனால் வடக்கிலிருந்து மாலிக்காபூருடைய படையெடுப்பினால் அவன் எண்ணம் நிறைவேறவில்லை.

வடக்கே யாதவ இராச்சியத்தில் ஜெய்துகிக்குப் பின் அவன் மகன் சிங்கணன் (1210-1247) ஆண்டான். அவன் காலத்தில் யாதவருடைய ஆதிக்கம் மிகச்சிறந்து விளங்கியது. அவன் குஜராத் நாட்டின் மீது 1231-32 லும், 1237-38லும் இருமுறை படையெடுத்தான். தெற்கே ஹொய்சள II-ம் பல்லாளனுடன் போர்புரிந்து, கிருஷ்ணா, மலப்ரபா நதிகளுக்குத் தெற்கேயுள்ள நாடுகள் பலவற்றைக் கவர்ந்தான். II-ம் நரசிம்மனிடத்திலிருந்து சாகம் தாலுகாவையும் பல்லாரி மாவட்டத்தையும் கைப்பற்றினான். ஆனால் நரசிம்மனுக்குப் பின் சோமேசுவரன் யாதவர் நாட்டில் புகுந்து, பண்டரிபுரம் வரை படையெடுத்துச் சென்றான் (1236). யாதவ நாட்டின் தென்பாதியை ஆண்டுவந்த படைத்தலைவன் வீசனன் ஹொய்சளப் படைகளைத் தன் நாட்டிலிருந்து விரட்டியடித்ததுமன்றி, ஹொய்சள நாட்டில் புகுந்து காவேரிக்கரையை (1239) அடைந்தான். கடைசியில் சோமேசுவரன் தன் முன்னோரைவிட அதிக நாடுகளை யாதவருக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்தது. சிங்கணன் காகதீய கணபதியோடும் மாளவ அரசனோடும் வீண் போர்கள் புரிந்தான். வானவியற் புலவர் பாஸ்கராசாரியருடைய பேரனும் முதல் ஜெய்துகியின் பிரதான பண்டிதர் லக்ஷ்மிதரருடைய மகனுமான சங்கதேவர் சிங்கணனுக்கு ஆஸ்தானச் சோதிடராக இருந்தார். தம் பாட்டனாருடைய சித்தாந்த சிரோமணி முதலான நூல்களைப் பயில்வதற்காகப் பாட்னா என்னும் ஊரில் ஒரு கலாசாலையை யேற்படுத்தினார்.

சிங்கணன் மகன் II-ம் ஜெய்துகி அவன் தகப்பனுக்குமுன் இறந்துவிட்டபடியால் அவன் மகன் கிருஷ்ணனே அடுத்த அரசனானான் (1247-60). காகதீய கணபதி அவனிடமிருந்து தெலிங்கானத்தின் ஒரு பகுதியைக் கவர்ந்துகொண்டான். மற்றப்படி சிங்கன் விட்டுப் போன இராச்சியத்தில் ஒரு குறைவும் ஏற்படவில்லை. கிருஷ்ணன் பல யாகங்கள் செய்தான். அவன் மந்திரி ஜல்ஹணன் ஸூக்தி முக்தாவளி என்னும்