பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

682

இந்தியா

கின்றன. இந்த நோக்கத்துடன் 1949-ல் பண்பாட்டுத் தொடர்பு இந்தியக் கவுன்சில் டெல்லியில் அமைக்கப்பெற்றுள்ளது. ஈரான் தலைநகரான டெகரானில் சமஸ்கிருதத் துறையை இந்திய அரசாங்கத்தார் அமைத்துளர். இந்தியப் பண்பாடு, வரலாறு, சமஸ் கிருத இலக்கியம் இவை பற்றிய நூல்களை ஆப்கானிஸ்தானம், பர்மா, இந்தோனீசியா, ஜப்பான், பாரசீகம், துருக்கி ஆகிய நாடுகளிலுள்ள குறிப்பிட்ட நூல்நிலையங்களுக்கு அரசாங்கத்தார் வழங்கியுளர். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பழகும் மாணவர்கள் நூறு பேருக்கு உதவி அளிக்கப்படுகிறது. டாஸ்மேனியா, சான்சிபார், மலேயா போன்ற நாடுகளுக்கு ஆசிரியர்கள் அனுப்பப்பெற்றுளர்.

இந்தியக் கலைப்பொருள்களை ஒன்று சேர்த்துவைத்துத் தேசியப் பொருட்காட்சிச்சாலை அமைக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. சிறந்த கலைப்பொருள்களை வெளி நாடுகளுக்கு அனுப்புவதைத் தடுக்கச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தற்கால இந்தியக் கலைக்காட்சிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. உலகத்தின் பல பாகங்களிலுமுள்ள பல அறிஞர்களைக் கொண்டு கீழ்நாட்டு மேனாட்டுத் தத்துவசாஸ்திர வரலாறு எழுதி, இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்திய ஆண்டில் கல்விக்காகச் செலவான பணம் 20.5 கோடி ரூபாய். ஆனால், 1951-52-ல் அது 47 கோடியாகும். 1948-49-ல் இருந்த பாடசாலைகள் ஆண்களுக்கு 1,69,843; பெண்களுக்கு 13,979; கல்லூரிகள் ஆண்களுக்கு 472. பெண்களுக்கு 65. இந்தியா முழுவதிலும் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர் தொகை ஆண்கள் 1,29,60,532. பெண்கள் 41,32,400. இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் 30-ல் பம்பாயிலுள்ள எஸ். என். டீ. டி. பெண்கள் பல்கலைக்கழகம் பெண்களுக்கு மட்டுமே ஏற்பட்டது.

இதுவரை குருடர்களுக்கும் செவிடர்களுக்கும் அரசாங்கம் பாடசாலைகள் நடத்தவில்லை. இப்போது இந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, குருடர்களுக்காக பிரேல் (Braille) அச்சகம் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனுடன் இக்கல்விக்கு வேண்டிய ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகப் பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.


பொதுச் சுகாதாரம்

பொதுச் சுகாதாரமும் மருத்துவமும் இராச்சியங்களின் பரிபாலனத்தில் சேர்ந்தவை. ஆயினும் இவை பற்றி இராச்சியங்கள் மேற்கொள்ளும் பணியை இணைக்கும் முக்கியமான வேலையை மத்திய அரசாங்கம் செய்கின்றது. இராச்சியங்களில் மருத்துவம், பல் வைத்தியம், தாதி வேலை, மருந்து உற்பத்தி ஆகியவை வளர்வதற்கு வேண்டிய உதவியும் புரிகின்றது. மத்திய அரசாங்கமே சர்வதேச உடல் நல உறவுகளையும், துறைமுகங்களில் “பிரித்து வைக்கும் சாலை”களையும் கவனித்துக்கொள்கிறது.

மத்திய அரசாங்கம் நடத்தும் உடல் நல நிலையங்ககளுள் முக்கியமானவை கல்கத்தாவிலுள்ள பொதுச் சுகாதார அகில இந்திய நிலையம், டெல்லியிலுள்ள மலேரியா நிலையம், கசாலியிலுள்ள மத்திய ஆராய்ச்சி நிலையம், மத்திய மருந்துச்சரக்கு ஆய்வுக்களம் என்பன. கல்கத்தாவிலுள்ள - அகில இந்திய நிலையமே தென் கிழக்கு ஆசியா முழுவதுக்கும் உள்ள ஒரே நிலையம். இது பொதுச் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேண்டிய உத்தியோகஸ்தர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றது.

இராச்சியங்களில் சிற்றூர்ப் பகுதிகளிலுள்ள மக்களுடைய உடல் நலத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, இராச்சிய அரசாங்கம், சிற்றூர்களில் தங்கி இலவசமாகச் சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு உதவிநிதி அளிக்கின்றது. மருத்துவ வண்டிகளும் அடிக்கடி சிற்றூர்களுக்குப் போய் வருகின்றன. சிற்றூர்க் கூட்டுறவுச் சங்கங்களும் தம் உறுப்பினர்க்கு மருத்துவ உதவி அளித்து வருகின்றன. மருத்துவர், தாதிகள் தொகையைப் பெருக்குவதற்காக மருத்துவப் பாடசாலைகளை எல்லாம் மருத்துவக் கல்லூரிகளாக ஆக்கியுள்ளனர். டெல்லிப் பல்கலைக்கழகம் க்ஷயநோய் டிப்ளமோக்கல்வி அளித்து வருகிறது. அதனுடன் அது மருத்துவத் தாதி பீ. எஸ். ஸீ. (ஆனர்ஸ்) பட்டக்கல்வியும் அளிக்கின்றது. டெல்லியிலுள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி ஒன்றே இந்தியாவில் மாணவிகளுக்கு மட்டுமே கல்வியளிப்பதாகும்.

மத்திய அரசாங்கம் பம்பாயில் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் நிறுவுவதற்காக டாட்டா நினைவு மருத்துவச்சாலையார்க்கு உதவிநிதி அளித்துள்ளது. அதுபோல் நாட்டின் பல விடங்களிலும் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சி நிலையங்கட்கும் உதவி அளித்து வருகின்றது. சர்வதேச உடல்நல ஸ்தாபனங்கள் மலேரியா, க்ஷயம், மேக நோய் ஆகியவற்றை ஒழிப்பதற்காக உதவி செய்து வருகின்றது. அன்னிய நாட்டு நிபுணர்கள் வந்து இங்குள்ளவர்க்குப் பயிற்சி அளித்து விட்டுச் சென்றனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 25 இலட்சம் பேர் க்ஷயநோயால் பீடிக்கப்படுகின்றனர். 5 இலட்சம் பேர் இறக்கின்றனர். இதைத் தடுக்கும் பொருட்டுச் சர்வதேச ஸ்தாபனத்தின் உதவி கொண்டு பீ. சீ. ஜீ. ஊசி குத்துதல் 1948-ல் தொடங்கப்பட்டது. சென்னைக்கு அருகிலுள்ள கிண்டியிலுள்ள ஆராய்ச்சி நிலையம் பீ. சீ. ஜீ. மருந்தைத் தயாரித்து வருகின்றது. இங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இந்த மருந்து அனுப்பப்படுகிறது. 1952 இறுதிவரையில் 78 இலட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுளர். 25 இலட்சம் பேர் ஊசி குத்திக்கொண்டனர். க்ஷயத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கற்றுக்கொடுப்பதற்காகப் புதுடெல்லியிலும், பாடலிபுத்திரத்திலும், திருவனந்த புரத்திலும் க்ஷயநோய் நிலையங்கள் நிறுவப்பெற்றுள்ளன. புனாவில் பெனிசிலின் மருந்தும், டெல்லியில் டீடீடி மருந்தும் உற்பத்தி செய்யச் சாலைகள் நிறுவப் பெற்றுள்ளன. குடும்பத்திட்டம் என்னும் பொருள் பற்றி ஆராய்வதற்காகவும் ஏற்பாடாகியிருக்கிறது. கருப்பம் உண்டாகாத பருவம் என்பது பற்றி ஆராய்வதற்காக மூன்று தொடக்க நிலையங்கள் நிறுவப்பெற்றுள்ளன.

இந்தியாவில் போதுமான மருத்துவச்சாலைகள் இல்லை. 1949-ல் நகர மக்கள் 24 ஆயிரம் பேர்க்கு ஒன்று வீதமும், சிற்றூர் மக்கள் 50 ஆயிரம் பேர்க்கு ஒன்று வீதமும் இருந்தன. இங்கிலாந்தில் ஆயிரம் பேர்க்கு ஒரு மருத்துவர் வீதமும், இந்தியாவில் ஆறாயிரம் பேர்க்கு ஒரு மருத்துவர் வீதமும் உள்ளனர்.

ஐந்தாண்டுத் திட்டமானது மருத்துவச்சாலைகளையும் அங்குள்ள வசதிகளையும் பெருக்குவதற்கு வழி செய்துளது: