பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/775

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

710

இந்தியா

இந்தியாவில் கிடைக்கக்கூடிய நிலக்கரியின் அளவு 2,000 கோடி டன்கள் என்று மதிப்பிடப்பட்டிருந்தபோதிலும், 500 கோடி டன்களே உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தவை. இவையும் இரும்பு, எஃகு காய்ச்சுவதற்கு இன்றியமையாதவையாதலின் அவற்றுக்கென்றே ஒதுக்கி வைக்கவேண்டியிருக்கிறது. இந்தியாவிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்தும், தென் ஆர்க்காடு, கட்சு ஆகிய இடங்களிலுள்ள லிக்னைட்டுப் படிவங்களிலிருந்தும் ஏராளமாகக் கிடைக்கும் மட்டரக நிலக்கரியை மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பான்மை பீகாரிலும், மேற்கு வங்காளத்திலும், சிறுபான்மை அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், ஐதராபாத் ஆகிய இடங்களிலும் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. நிலக்கரிச் சுரங்கங்கள் அருகில் இருந்தாலன்றி அதினின்று மின்சார உற்பத்திச் செலவு மிகுதியாகும். பெட்ரோலியமும் அதிகமாகக் கிடைக்கவில்லை. இந்தியாவில் செலவாகும் அளவில் 5 சதவீதமே அஸ்ஸாமில் கிடைக்கிறது.

இந்தியாவில் நீர்த்திற வசதிகளுக்குக் குறைவில்லை. நீர் மின்திறன் சக்தி 4 கோடி கிலோவாட்டுக்கள் என்று ஐந்தாண்டுத் திட்டம் மதிப்பிட்டிருக்கிறது. இவைகள் நிலக்கரி கிடைக்குமிடங்களுக்கு வெகுதூரத்தில் அமைந்திருப்பது ஓர் அனுகூலமாகும். எப்பொழுதும் பனியோடியங்கும் இமயமலைத்தொடர்கள் நீர்ப்பெருக்கை ஒழுங்காக அளிக்கும் இயற்கைச் சாதனமாக இருப்பதோடு, எந்த எந்திர நிபுணனாலும் கட்டமுடியாத மிகப் பெரிய நீர்த்தேக்கமாகவும் அமைந்திருப்பதால், அளவுக்கு மேற்பட்ட மின்திறன் உற்பத்தி செய்யத்தக்க இடங்கள் பல அங்கு உள்ளன.

இவ்விடங்களிற் பல பெரிய ஆற்றங்கரைகளில் மக்கள் நிறைந்த சமவெளிகளுக்கு வெகு தொலைவிலே அமைந்துள்ளன. ஆகவே மத்திய அரசாங்கத்தார் பக்ரா நங்கல் போன்ற திட்டங்களுக்குப் பணம் உதவி செய்யும்வரை அவை அபிவிருத்தி அடையவில்லை. அடுத்த படி மிகுதியாக உள்ளது மேற்கு மலைத்தொடர்களில், பம்பாய்க்கருகிலிருந்து ஆனைமலைகள், நீலகிரி மலைகள் உட்பட, தென் திருவிதாங்கூர் வரை வியாபித்துள்ள பகுதியாம். இங்கு மலைச்சரிவுகள் செங்குத்தாய் உள்ளன. தொடர்களும் மிகவும் உயரமானவை. ஆகையால் பல நீர்வீழ்ச்சிகளுக்குக் காரணமாகின்றன. காற்று வரவுப் பக்கமாயுள்ள சரிவுகளிலும், மலைத் தொடர்களின் உச்சியிலும் கனத்த மழை பெய்வதால் நீர் எப்போதும் மிகுந்த சக்தியோடு ஓடுகின்றது. தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் இரண்டு பருவக்காற்று மழைகளும் ஆண்டுதோறும் பல மாதங்கள் பெய்வதால் நீருக்குக் குறைவில்லை. வடகிழக்குப் பகுதியில் மலைப்பிரதேசமாயிருத்தலால் தென்மேற்குப் பருவக்காற்று மழைபெய்து நீர் மின்திறன் வளர்ச்சிக்குப் பெரிதும் வாய்ப்பு ஏற்படுகிறது. மற்ற இடங்களிலும் ஆறுகளுக்கு அணைகட்டிப்பெரியதேக்கங்களில் நீர் நிறைத்து, அவைகளின் அருகிலேயே, மேட்டூர், கங்கைக் கால்வாய்கள் போன்ற பல இடங்களில் மின் உற்பத்தி செய்ய எளிதிற்கூடும். நீர்வீழ்ச்சிகள் 3 அடிக்கும் குறைவாக உள்ள இடங்களிலும் நீர் மின்திறனை உற்பத்தி செய்துகொள்ள இதனால் முடிகின்றது. நாளடை வில் இத்தகைய தாழ்ந்த தலைப்பு உள்ள நீர் மின்திறனிடங்கள் பல நாட்டில் உண்டாவதற்கு வசதிகள் உள்ளன.

மின்சார நிலையங்களிற் பல முக்கிய நகரங்களிலுள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகவே முதன் முதல் நிறுவப்பட்டன. பணமுடக்கத்தால் நாடெங்கும் நிலையங்களை ஏற்படுத்தக்கூடவில்லை. எனினும் நகரமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யப் பல தனிப்பட்ட கம்பெனிகள் முன்வந்தன. மின்சாரம் முதன்முதல் கல்கத்தாவுக்குத்தான் வழங்கப்பட்டது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி இரண்டு தலைமுறைகளாகத்தான் மற்றும் பல பெரிய நகரங்களில் மின்திற நிலையங்கள் தோன்ற லாயின. 1902-ல் மைசூரிலுள்ள சிவசமுத்திரம் என்னுமிடத்தில் தான் முதல் நீர் மின் நிலையம் நிறுவப்பட்டது. இந்தியாவிலுள்ள நீர் மின் நிலையங்கள் பலவற்றிலும் பம்பாயில் டாட்டா கம்பெனியாரின் நிலையமே மிகப் பெரியது. 1920 வரை மின்திறன் மக்களின் தேவையின் அளவுக்குக் கிடைக்கவில்லை; இப்போதோ விரைவாக நாடெங்கும் கிடைக்கக் கூடியதாயுள்ளது. 1950-ல் மின்திறனின் மொத்த அளவு 23 இலட்சம் கிலோவாட்டுக்கள் என்று கணக்கெடுத்திருக்கின்றனர். நிலக்கரியிலிருந்து 60 சதவீதமும், நீர்த்திறனிலிருந்து 32 சதவீதமும், எண்ணெய் எரி கருவிகளிலிருந்து எஞ்சிய பகுதியும் கிடைத்தன.

இந்தியாவின் மற்ற பாகங்களைவிடப் பம்பாய், மைசூர், மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் மின் திறனுற்பத்தி மிகுதியாக இருக்கின்றது. ஒரிஸ்ஸா, அஸ்ஸாம் ஆகிய இடங்களில் மிகக்குறைவு. வங்காளத்திலும் பீகாரிலும் மின்திறன் பெரும்பகுதி நிலக்கரியிலிருந்து கிடைக்கிறது. பம்பாய்க்கும் தென்னிந்தியாவிற்கும் தொலைதூரத்திலிருந்தே நிலக்கரி வரவேண்டியிருப்பதால் நீர் மின்திறன் உற்பத்தியே பெரும்பாலும் அபிவிருத்தி அடைந்துவருகிறது.

இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 40 சதவீதம் பம்பாய், கல்கத்தா ஆகிய இரண்டு நகரங்களிலேயே செலவாகிவிடுகிறது. 50,000 மக்களடங்கிய எல்லா நகரங்களுக்கும், 20,000 மக்களுள்ள நகரங்களிற் பெரும்பாலனவற்றுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் மின்சார வசதி சிறிதுதான் பரவியுள்ளது. இந்தியாவிலுள்ள 5,60,000 கிராமங்களில் 31,000 கிராமங்களில்தான் மின்சார வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் ஏறக்குறைய 2,500. கிராமங்கள் சென்னையிலும் மைசூரிலுமே உள்ளன. 1956க்குள்ளே இன்னும் பத்து இலட்சம் கிலோவாட்டுக்கள் அதிகமாக வேண்டுமென்றும், திட்டத்தின் மற்றெல்லா அமிசங்களும் நிறைவேறுங் காலத்தில் மொத்தம் 14 இலட்சம் கிலோவாட்டுக்கள் ஆகியிருக்க வேண்டுமென்றும் ஐந்தாண்டுத் திட்டம் வகுத்திருக்கிறது. இந்த மின்சக்தியில் பெரும்பகுதி கைத்தொழில்களுக்கும், கிராமங்களின் மின்சார வசதிக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படும். பீ. எம். தி.

கைத்தொழில்கள்

புராதன முறையில் நடைபெறும் கைத்தொழில்கள் பலவும், நவீன முறைகளைப் பின்பற்றும் பெரிய எந்திர சாலைகளும், இந்தியாவில் அடுத்தடுத்திருப்பதைக் காணலாம். ஒவ்வொரு கிராமத்திலும் குயவர், தச்சர், கருமார், மேதரவர் முதலியோர் அக்கிராம மக்களுக்குத் தினசரி உபயோகத்துக்கு வேண்டிய பாத்திர பண்டங்கள், தட்டுமுட்டுச் சாமான்கள் முதலியவற்றைச் செய்து வருகின்றனர். அவ்வக்கிராமத்தாரின் தேவையின் அளவுக்கே தொழில்கள் நடைபெறுகின்றன. ஆங்காங்கு அருகிற் கிடைக்கும் பொருள்களைக் கொண்டே தொழிலை நடத்த வேண்டியிருப்பதாலும் குலமுறையாகப் பெற்ற தொழில் திறமை குன்றி வரு-