பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/805

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தோனீசியா

740

இந்தோனீசியா

யத்தை எழுதினார் (1104). கிரதஜயனுடன் இவ்வமிசம் முடிந்தது (1222). பிறகு ராஜசன் என்பவனால் தொடங்கப்பட்ட ஒரு புதிய வமிசம் ஆள ஆரம்பித்தது. அவன் குமாரன் கிரதநகரன் (1268-1292) சாத்திரம் வல்லவன். இவன் மாப்பிள்ளையான கிரத ராஜஸன் (1294-1309) பல பௌத்தாலயங்களையும் சிவாலயங்களையும் கட்டினான். அவன் மகன் ஜயநகரன் (1309-1328) சுந்தர பாண்டிய விக்கிரமோத்துங்கதேவன் என்ற பட்டப்பெயர் பூண்டான். இது பாண்டிய அரசர்களுடன் தொடர்பைக் குறிக்கிறது. 15ஆம் நூற்றாண்டில் இந்த இராச்சியம் வலுக்குறைந்தது. இதே நூற்றாண்டில் முஸ்லிம் மதம் ஜாவாவில் பரவியது.

பாலித் தீவில் முதல் இந்து இராச்சியம் கி. பி. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிற்று. 10ஆம் நூற்றாண்டில் ஆண்ட உக்கிரசேனன் மிக்க புகழ் பெற்றவன். 15ஆம் நூற்றாண்டில் ஜாவாவில் முஸ்லிம் மதம் பரவியபின், அங்கிருந்து பலர் பாலித் தீவில் குடியேறினர். ஆகையால் இன்றும் பாலித் தீவு இந்து மதத்தைப் பின்பற்றுகிறது. போர்னியோவில் கி.பி. முதல் நூற்றாண்டிலேயே இந்துக்கள் குடியேறினர். 4ஆம் நூற்றாண்டிலாண்ட மூலவர்மன் ஒரு யாகம் புரிந்தான். அதைக் குறிக்கும் கல்வெட்டுத் தென்னிந்தியப் பல்லவ லிபியிலிருக்கிறது. போர்னியோவி லகப்பட்ட இந்துமதச் சிலைகளில் நான்கு கைகள் கொண்டு இரு மருங்கிலும் கருடன்களைக் கொண்ட ஒரு விஷ்ணு உருவம் குறிப்பிடத்தக்கது. செலிபீஸ் தீவில் அமராவதி சிற்பத்திற்கு ஒப்பான புத்தரின் வெண்கலச்சிலை கிடைத்திருக்கிறது.

போர்ச்சுச்கேசியர் 16ஆம் நூற்றாண்டில் இப் பிரதேசத்தில் தங்கள் வர்த்தகத்தையும் அதிகாரத்தையும் பரப்பினர். ஆனால், டச்சுக்காரர்முன் அவர்கள் பின் வாங்கினர். 1602-ல் ஏற்பட்ட டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி தன் ஆதிக்கத்தை இங்கு வளர்த்தது. 1619-ல் ஜாவாவிலுள்ள ஜகார்ட்டாவை டச்சுக்காரர் படேவியா எனப் பெயர் மாற்றித் தமது அரசின் தலைநகராக்கினார். ஆனால், சுதேச மக்களுடன் பல முறை போர் புரியவேண்டியிருந்தது. 1811-ல் ஒரு பிரிட்டிஷ் கடற்படை இந்தியாவினின்றும் சென்று ஜாவாவைக் கைப்பற்றியது. ஆனால், ஜாவா 1815-ல் டச்சுக்காரர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது. 1838-ல் வட மேற்கு போர்னியோ பிரிட்டிஷ் வசமாயிற்று. நியூகினியின் மேற்குப் பகுதி டச்சுக்காரரிடமிருக்கிறது. 1884-ல் நியூகினியின் கிழக்குப் பிரதேசத்தில் ஒரு பகுதி பிரிட்டிஷ் வசமாயிற்று.1839-ல் டச்சுக்காரர் பாலித் தீவில் ஆதிக்கத்தை ஏற்படுத்தினர். கடைசி இந்து அரசன் சுத்த வீரனாகப் போரிட்டு மடிந்தான் (1908).

டச்சு ஆதிக்கத்தை எதிர்த்து உதயமான சுதந்திர இயக்கத்தை டச்சுக்காரர் பலத்த அடக்குமுறைகளால் அழிக்கப் பார்த்தனர். ஆனால் அது மறையவில்லை. இரண்டாம் உலக யுத்த காலத்தில், ஜப்பானியர் இந்தோனீசியாவைக் கைப்பற்றினர் (1942). 1945-ல் ஜப்பானியர் தோற்கடிக்கப்பட்டபின் இந்தோனீசிய மக்கள் ஒரு சுதந்திரக் குடியரசை நிறுவினர். 1927 ஆம் ஆண்டு முதல் சுதந்திர தலைவராயிருந்த டாக்டர் சுக்கர்னோ அதன் தலைமையை மேற்கொண்டார். யுத்த முடிவில் டச்சுப் படைகள் டச்சு ஆதிக்கத்தை மீண்டும் நிறுவ முயன்றன. இதன் விளைவாகப் போர் நிகழ்ந்தது. 1949-ல் ஆசிய நாட்டுப் பிரதிநிதிகள் டெல்லியில் கூடி இந்தோனீசியச் சுதந்திரத்தை ஆதரித்தனர். ஐக்கிய நாட்டுச் சபையும் இதை யாதரித்ததால், டச்சுக்காரர் இந்தோனீசியருடன் சமாதானப் பேச்சுத் தொடங்கவேண்டி வந்தது. 1950-ல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி இந்தோனீசியா ஒரு குடியரசாயிற்று. ஆனால், அது பெயரளவில் டச்சு அரச வமிசத்தினரின் தலைமையை ஏற்றுக்கொள்ளும். டச்சுக்காரர்கள் தாங்கள் ஆண்டுவரும் நியூகினிப் பிரதேசத்தை இந்தோனீசியர் வசம் கொடுக்க மறுப்பதால், இந்தோனீசியாவிற்கும் டச்சு நாட்டிற்கும் இன்னும் (1953) சமரசம் ஏற்படவில்லை. 1950 செப்டெம்பரில் ஐக்கிய நாடு ஸ்தாபனத்தில் உறுப்பாக ஆகியுள்ளது. டி.கே.வெ.

அரசியல் அமைப்பு: 1949 ஆகஸ்டு 23 லிருந்து நவம்பர் 2 வரையில் நடந்த வட்டமேஜை மாநாட்டின் முடிவாக முழு ஆட்சி அதிகாரம் இந்தோனீசிய ஐக்கிய நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆயினும், நியூகினி தீவின் டச்சுப் பகுதியின் அரசியல் நிலையை மேலும் பேச்சுவார்த்தைகள் மூலம் நிருணயிப்பது என்று ஒத்துக்கொள்ளப்பட்டது. 1952 மார்ச்சுவரை ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படவில்லை. அம் மாநாட்டில் டச்சுநாடுகளும் இந்தோனீசியக் குடியரசும் ஒத்துழைப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இவ்விரு நாடுகளின் ஐக்கியத்திற்குத் தலைமை வகிப்பவர்கள் டச்சு அரசியான ஜூலியானாவும் அவளுடைய சந்ததியாரும்.

1946-48-ல் தயார் செய்யப்பட்ட கூட்டாட்சி ஏற்பாடு 1950-ல் கைவிடப்பட்டது. இந்தோனீசிய ஐக்கிய நாடுகள் என்னும் பெயர் இந்தோனீசியக் குடியரசு என்று மாற்றப்பட்டது. இந்தோனீசியாவில் ஓர் ஒற்றையாட்சிக் குடியரசு நிறுவப்பட்டது. இக்குடியரசில் நியூகினியிலுள்ள டச்சுப் பகுதியைத்தவிர சுமாத்ரா, ஜாவா, செலிபீஸ் முதலிய ஏனைய பிரதேசங்களெல்லாம் அடங்கியுள்ளன. 1950 ஆகஸ்ட் 14-ல் இந்தோனீசிய அசெம்பிளி அவ்வரசியல் அமைப்பை ஏற்றுக்கொண்டது. அதன்படி இந்தோனீசியக் குடியரசில்

இந்தியக் கலையை தழுவிய பழைய ஓவியம்
உதவி: இந்தோனீசியாச் செய்தி இலாகா, புது டெல்லி.

பத்து மாகாணங்கள் அடங்கியுள்ளன. 1950 செப்டம்பர் 28-ல் இந்தோனீசியா ஐ.நா.சங்கத்தின்