பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்பும் எஃகும்

86

இரும்பும் எஃகும்

எச்சரிக்கை செய்யும் பாதுகாப்புச் சாதனங்களும் அறையில் அமைக்கப்படுகின்றன.

இரும்பும் எஃகும் நாகரிகத்தின் அடிப்படையான பொருள்கள். போக்குவரத்துச் சாதனங்களையும், கட்டடங்கள், பாலங்கள் முதலியவற்றையும் எஃகு இல்லாமல் நிறுவ முடியாது. சுத்த இரும்பு என்பது எளிதில் பெற முடியாத அருமையான பொருள். இரும்பு எப்போதும் சிறிதளவு கரிப்பொருளுடன் கலந்தேயிருக்கும். இக்கரி இரும்பின் குணங்களை மாற்றிவிடுகிறது. அதன் வலிமைக்கும் காரணமாகிறது. இரும்புவகைகளை வார்ப்பிரும்பு (Cast Iron), தேனிரும்பு (Wrought Iron),எஃகு (Steel) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

வார்ப்பிரும்பில் சுமார் 4 சதவிகிதம் கரி உள்ளது. இது கடினமானதல்ல, எளிதில் உடையக்கூடியது. இதைச் சூடேற்றிச் சம்மட்டியால் அடித்து நீட்ட முடியாது. உருக்கி அச்சுக்களில் வார்க்கலாம். ஆகையால் இதற்குச் சில பயன்களே உண்டு.

தேனிரும்பு கரி குறைவாக உள்ளது. முற்காலத்தில், இதுவே அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இது பலவித உருவங்களில் காய்ச்சித் தட்ட ஏற்றது. சிறிதுகூடக் கரியில்லாத சுத்தமான இரும்பின் கடினமும் எஃகின் உறுதியும் இதற்குக் கிடையாது. இது விரவினல துருப்பிடிக்காது. தேனிரும்புத் துண்டங்கள் வெண்சூட்டில் ஒன்றோடொன்று இணையும். இக்காரணங்களினால் எஃகு அதிகமாகப் பயனாகும்வரையில் இது மிகவும் சிறந்ததாகக் கருதப்பட்டது.

எஃகு என்பது இரும்பும் கரியும் கொண்ட கலவை. இதில் கரியின் அளவு 1.7% வரையிலிருக்கும். இன்னும் மாங்கனீஸ், கந்தகம், பாஸ்வரம்,சிலிக்கன் ஆகியவைகளும் இதில் இருக்கலாம். இதைச் சிவந்த சூட்டில் காய்ச்சித் தட்டலாம். சாதாரணச் சூட்டில் ஓரளவு உருவாக்கலாம். நன்றாகக் கடினமாவது இதன் முக்கியமான பண்பு. கரிப்பொருளே இதன் கடினத் தன்மைக்கு முக்கிய காரணமாகும். வலிமை இதன் மற்றச் சிறப்பியல்புகளில் ஒன்று.

வரலாறு: இரும்பு கி.மு.4000 முதல் 6000 ஆண்டுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று தெரியவருகிறது. அக்காலங்களில் இது தங்கத்தைவிட அதிக விலையுள்ளதாயும் அருமையாயுமிருந்தது கிரீஸ் தேசத்தில் தோண்டியெடுக்கப்பட்ட சாமான்களில் ஒரு வெள்ளி மோதிரத்தில் இரும்பு முத்திரை யிருந்தது. அம்மோதிரம் கி.மு. 1100ஆம் ஆண்டைச் சேர்ந்தது. அக்காலத்தில் உலைகளின் வெப்பம் குறைவாதலால் இரும்பு மிகச் சிற்றளவிலேயே உருக்கப்பட்டது. பிறகு தோலினாலான துருத்தி கண்டுபிடிக்கப்பட்டதும், அதிக அளவில் இரும்பை உருக்க வழி ஏற்பட்டது. எகிப்தியர்கள் இந்தியர்களிடமிருந்தே இரும்பு உருக்கும் கலையைக் கற்றுக்கொண்டார்கள். 1837-ல் ராயல் ஏஷியாடிக் சொசைடியில் வாசிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் ஹீத் (Heath) என்பவர் தென்னிந்தியாளில் செய்யப்பட்ட எஃகே ஐரோப்பாவிற்கும் எகிப்து தேசத்திற்கும் பண்டை நாளில் அனுப்பப்பட்டது என்று காட்டியிருக்கிறார். இந்துக்கள் இரும்பை உருக்கிப் பயன்படுத்தினார்கள் என்பதற்கு வேதங்களிலும் ஆதாரங்கள் இருக்கின்றன.

அக்காலங்களில், கல்லினாலும் மண்ணினாலுமான சிற்றுலைகளில் இரும்புக் கணியங்களின் பொடியைக் கட்டைக்கரியுடன் சேர்த்து உருக்கி 70-80 இராத்தல் நிறையுள்ள இரும்புக் கட்டிகளை உற்பத்தி செய்தார்கள். மூங்கில் குழாய்கள் கொண்ட துருத்திகளால் ஊதப்பட்ட காற்றினால் உலையில் கரியை எரித்து 10-12 மணி நேரத்திற்குப் பிறகு உலையை உடைத்து, இரும்புக் கட்டியை வெளியே எடுத்தார்கள். அக்கட்டி, பஞ்சுபோல் உருகின கரிச்சாம்பல் முதலிய அசுத்தப் பொருள்களுடன் கலந்திருந்தது. பிறகு அதைக் கரியடுப்பில் காய்ச்சிச் சம்மட்டியால் தட்டி, இரும்புப் பானங்களாகச் செய்தார்கள். 1930-ல் கூட மத்தியப்பிரதேசம், பீகார் பிராந்தியங்களில் காட்டுமக்கள் இவ்வாறு இரும்பை உருக்கி வந்தார்கள்.

இந்திய இரும்பும் எஃகும்: டெல்லியின் சமீபத்திலுள்ள குதுப்மினாருக்கு அருகிலுள்ள இரும்புத்தூண் முற்காலத்தில் செய்யப்பட்ட இரும்புப் பாளங்களை வெண்சூட்டில் இணைத்துச் செய்யப்பட்டது. இது கி.பி.300-ல் அமைக்கப்பட்டது. இவ்வளவு ஆண்டுகளாகக் காற்றிலும் மழையிலும் அடிபட்டும் இது சற்றும் துருப்பிடிக்காது உள்ளது. இந்தூருக்கு 33 மைல் தொலைவிலுள்ள தார் என்னும் இடத்திலுள்ள இரும்புத்தூண் குப்தர்கள் காலத்தில் நிறுவப்பட்டது. இது டெல்லித் தூணைவிடப் பெரியது. சுமார் 1½ அங்குல அளவுள்ள சதுரமான இரும்புக்கட்டிகளைச் சிறு துண்டங்களாக்கிக் கரித்தூளைப் பக்கங்களில் நிரப்பிச் சிறு களிமண் பாத்திரத்தில் வைத்து, அதன் வாயைக் களிமண்ணால் அடைத்துக் கரியடுப்புக்களில் வெண்சூடாகும் வரையில் காய்ச்சிச் சிலமணி நேரங்களுக்குப் பிறகு அப்பாத்திரங்களை எடுத்து ஆறவைத்து, உறுதியும் கடினமுமான எஃகைத் தயாரிக்கும் முறையைப் பழங்கால இந்தியர் அறிந்திருந்தனர். ஆயுதங்கள் செய்ய இது பயன்பட்டது. இந்தியாவில் கி.பி.400-ல் முதன் முதலில் உட்ஸ் (Wootz) என்ற பெயரில் எஃகு செய்ததுடன் ஐரோப்பா முதலிய வெளிநாடு களுக்கும் அதை ஏற்றுமதி செய்தார்கள். இந்த உட்ஸ் எஃகிலிருந்தே உலகப்பிரசித்தி பெற்ற 'டமாசீன்' (Damacene) கத்திகள் செய்யப்பட்டன. எஃகைக் காய்ச்சித் தண்ணீரில் அவித்துக் கடினமாக்கும் முறையையும் மற்ற நாட்டினர் இந்தியரிடமிருந்து கற்றார்கள். சென்ற நூற்றாண்டில் இரும்பையும் எஃகையும் தயாரிக்கச் சில முயற்சிகள் நடந்து கைவிடப்பட்டன. பல தடைகளையும் பொருட்படுத்தாது ஜாம்ஷெட்ஜி டாட்டா இந்தியாவில் இரும்புத் தொழிற்சாலையை நிறுவ முயன்றார். இவருக்குப்பின் ஜாம்ஷெட்பூரில் தொழிற்சாலையொன்று நிறுவப்பெற்றது. 1912-ல் இது உற்பத்தி தொடங்கியது. 1923-ல் மைசூரிலுள்ள பத்ராவதியில் அரசாங்க ஆதரவு பெற்று இரும்புத் தொழிற்சாலை யொன்று நிறுவப்பட்டது.

இரும்புக் கனியங்கள் (Iron ores) : இரும்பு தனி நிலையில் பூமியிலிருந்து கிடைப்பதில்லை. இரும்புக் கனியங்களில் முக்கியமானவை ஹேமடைட்டு (Haema tite Fe2 O3), மாக்னடைட்டு(Magnetite Fe3 O4). நீருடைய கார்பனேட்டான சிடரைட்டு (Fe CO3 .x . H2O) ஆகியவை.

அமெரிக்க ஐக்கியநாடுகள், கானடா, ரஷ்யா இந்தியா முதலிய இடங்களில் பேரளவிலும், பாலஸ்தீனம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பாவின் சில பகுதிகள் முதலிய இடங்களில் சொற்பமாகவும் இக்கனியங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் ஏராளமான அளவில் இரும்புக் கனியங்கள் உள்ளன. பீகார், ஒரிஸ்ஸா பிரதேசங்களில் 8,0000 மிலியன் டன்களுக்குக் குறைவில்லாமல் குறைந்த பட்சம் 60 சதவிகிதம் இரும்பை உடைய கனியங்கள் உள்ளன. ஜம்மு.