பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்புப் பெட்டிகளும், பாதுகாப்பு...

85

இரும்புப் பெட்டிகளும், பாதுகாப்பு...

கொண்டு இடிந்து மேலே விழுந்தாலும், இது அதைத் தாங்க ஏற்ற வலிமை கொண்டிருக்கவேண்டும். எரியும் கட்டடத்திற்குள் இது பல நாட்கள் இருந்தாலும் அதன் தகடுகள் கெடாமலும், வளைந்து கொடுக்காமலும் இருக்கவேண்டும். பெட்டிக்குள் தீ பரவாமல் இருக்க, அதன் கதவு அழுத்தமாக மூடி இருக்கவேண்டும். ஆகையால் எளிதில் உருகாத உலோகக் கலவைகளைக் கொண்டு பெட்டிகள் செய்யப்படுகின்றன.

இரும்புப் பெட்டியை உடைக்க வரும் தற்காலத் திருடன் பல்வேறு வகைப்பட்ட ஆயுதங்களோடு வருகிறான், இந்த ஆயுதங்களின் தாக்குதலைச் சமாளிக்கும் வகையில் இது அமைக்கப்பட வேண்டும். இதில் பயன்படும் தகடுகள் வலிவான துரப்பணங்களாலும், வெட்டும் ஆயுதங்களாலும் தொளையிட முடியாதவாறு இருக்கவேண்டும். ஆக்சி - அசிட்டிலீன் ஊதுகுழலின் (த. க.) உயர்ந்த வெப்பத்தையும் அவை தாங்கி நிற்கவேண்டும். இத்தகைய விசேஷப் பண்புகள் கொண்ட எஃகைக் கொண்டு இரும்புப் பெட்டிகள் அமைக்கப்படுகின்றன. தடித்த செப்புத் தகடுகளைக்கொண்டு ஜப்பானில் இரும்புப் பெட்டிகளைச் செய்கிறார்கள். செம்பு வெப்பத்தை எளிதில் கடத்துவதால் இதைக் கொண்டு செய்யப்பட்ட பெட்டியின் மேல் பல மணி நேரம் ஆக்சி-அசிட்டிலின் ஊதுகுழலைக் கொண்டு தாக்கினாலும் அது உருகுவதில்லை.

இரும்புப் பெட்டி நிலவறையின் கதவு
உதவி : கோத்ரெ கம்பெனி, பம்பாய்,

இரும்புப் பெட்டியின் பூட்டின் அமைப்பையும் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். சாவித்தொளையின் வழியே ஆயுதங்களை விட்டு இதைத் திறக்க முடியாத வகையில் இதை அமைக்கவேண்டும். ஆயுதங்களாலோ வெடிமருந்தினாலோ பூட்டை ஓரிடத்தில் தகர்த்தாலும் அது இன்னோரிடத்தில் பூட்டிக் கொள்ளுமாறு செய்யும் பாதுகாப்புச் சாதனங்களும் தற்காலத்தில் அமைக்கப்படுகின்றன. தொளைகளற்ற வட்டமான முகப்புள்ள எண் பூட்டுக்கள் தற்காலத்தில் அதிகமாக வழக்கத்தில் உள்ளன. குறிப்பிட்ட காலத்தில் மட்டும் திறக்கக்கூடிய காலப் பூட்டுக்களையும் இரும்புப் பெட்டிகளுக்குப் பூட்டுவதுண்டு.

பாதுகாப்பு அறைகள்: திருடர்கள் நுழைய

இரும்புப் பெட்டி பாதுகாப்பு நிலவறை
உதவி: கோத்ரெஜ் கம்பெனி, பம்பாய்,

முடியாதவாறு வலிவாகக் கட்டப்பட்ட அறைக்குள் பல சிறு இரும்புப் பெட்டிகளை வரிசை வரிசையாக அமைத்து, இப்பெட்டிகளைப் பொதுமக்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள். அவர்கள் இவற்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தம்மிடமுள்ள மதிப்புமிக்க பொருள்களை இவற்றில் வைக்கலாம். ஓர் இரும்புப் பெட்டியை வாடகைக்கு எடுத்தவரும், பாதுகாப்பு அறையின் அதிகாரியும் சேர்ந்து இருக்கும்போது மட்டுமே திறக்க முடியும் வகையில் இதன் பூட்டை அமைக்கலாம். இந்த அறையின் சுவர்கள் சில அடி தடிப்புள்ள கான்கிரீட்டு சுவர்களையும், உட்புறத்தில் எஃகின் தகடுகளையும், எளிதில் உருகாத கலவைகளான பலகைகளையும் கொண்டவை. இதன் கதவுகள் பல டன் நிறையுள்ளவை. இக்கதவுகளில் நான்கு அல்லது ஐந்து எண் பூட்டுக்களும், காலப் பூட்டும் இருக்கும். கதவை மூடிவிட்டால், அறையில் காற்றுப் புகாதவாறு அது அமைந்திருக்கும். அறையின் தரையையும் சுவர்களையும் குடைந்து கொண்டு உள்ளே பிரவேசிக்க முடியாதவாறு இவற்றை அமைப்பார்கள். மின்சாரத்தினால் இயங்கித் திருட்டைப் பற்றி