பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்பு நுரையீரல்

84

இரும்புப் பெட்டிகளும், பாதுகாப்பு...


இரும்பு நுரையீரல் (Iron Lung) இளம் பிள்ளைவாதம், தொண்டையடைப்பான் (Diphtheria) போன்ற சில நோய்களில் மூச்சுத் தசைகள் தமது இயக்க சக்தியை மெல்ல இழந்து விடுகின்றன. இதனால் மார்பின் இயக்கம் அநேகமாக நின்றுபோய், நோயாளி மூச்சு விட முடியாமல் இறக்க நேரிடலாம். இத்தகைய நோயாளிகள் செயற்கை முறையில் மூச்சு விடுமாறு செய்யும்சாதனங்களில் இரும்பு நுரையீரலும் ஒன்று. பாஸ்டன் நகர மருத்துவரான டிரின்கெர் (Drinker) என்பவர் இதை 1928ஆம் ஆண்டில் அமைத்தார். இது ஒரு பெரிய உலோகத் தொட்டி போல் இருக்கும். தலை மட்டும் வெளியே இருக்குமாறு நோயாளி இதற்குள் படுக்கவைக்கப்படுகிறான். மின்சாரத்தினால் இயங்கும் பம்பு ஒன்று நிமிடத்திற்கு 15-30 முறை தொட்டியிலுள்ள காற்றை வெளியே அகற்றி அதன் அழுத்தத்தைக் குறைக்கிறது. இப்போது நோயாளியின் மார்பு அகன்று, நுரையீரல்களுக்குள் காற்று நிறைகிறது. வெளியேறிய காற்றை மீண்டும் உள்ளே செலுத்தினால் மார்பு குறுகி நுரையீரல்களிலுள்ள காற்று வெளியேறுகிறது. இவ்வகையில் நோயாளி மூச்சுவிட முடிகிறது. ஒரே சமயத்தில் நான்குபேர் வரை படுக்க ஏற்றவாறு அமைந்த பெரிய கருவிகள் உண்டு.

இரும்பு நுரையீரல்

உதவி : ஜெனரல் ஆஸ்பத்திரி, சென்னை

இதைவிட எளிய அமைப்பொன்றைப் பிராகு, பால் என்னும் இரு அறிஞர்கள் அமைத்தார்கள். இது நோயாளியின் மார்பைச் சுற்றி இணைக்கப்படும் ரப்பர் பையொன்று. ஒரு பம்பின் உதவியால் இதற்குள் காற்றை உட்புகுத்தியும், வெளியேற்றியும், மார்பை மாறிமாறி அழுத்தியும், அகலச் செய்தும், நோயாளியை மூச்சு விடச் செய்யும்.

இச்சாதனங்களால் நோயாளிகளைப் பல வாரங்களும் சில சமயங்களில் சில ஆண்டுகளும் மூச்சு விடச் செய்து பிழைக்கவைத்து, மூச்சுத் தசைகள் மீண்டும் தாமாக இயங்குமாறு செய்கிறார்கள்.

இரும்புப் பெட்டிகளும், பாதுகாப்பு அறைகளும் ( Safes and Strong Rooms) : உள்ளிருக்கும் பொருள்கள் திருட்டுப் போகாமலும், தீயினால் எரிந்துவிடாமலும் பத்திரமாகப் பாதுகாக்கும் பெட்டி இரும்புப் பெட்டி எனப்படுகிறது. இரும்புப் பெட்டி செய்யும் தொழில் நெடுங்காலமாகவே சென்னையில் நடைபெற்று வருகிறது. உறுதியான மரப் பலகைகளின்மேல் தடித்த இருப்புத் தகடுகளை அடித்து இவற்றைக் கொண்டு வலிமையுள்ள பெட்டிகளைச் செய்கிறார்கள். இப்பெட்டிக்குள் எஃகு அறைகள் இருக்கும். இப்பெட்டியில் உள்ள தாழ்ப்பாள்களைப் போட்டபின் அவற்றை அசைக்க முடியாதபடி பூட்டிவிடலாம்.

பழங்காலத்தில் செய்யப்பட்ட இரும்புப் பெட்டிகள் சாமான்கள் திருட்டுப்போகாமல் பாதுகாப்பளித்தன. ஆனால், அவை தீயை எதிர்க்கும் திறனைப் பெறவில்லை. 1801-ல் ரிச்சர்டு ஸ்காட் என்பவர் தீயிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் பெட்டியை அமைத்தார். பெட்டியின் பக்கங்களையும், கதவையும் இரண்டு தகடுகளால் அமைத்து, இவற்றினிடையே வெப்பத் தைக் கடத்தாத பொருளொன்றை இவர் இட்டு நிரப்பினார். இப்பொருள் வெப்பத்தைக் கடத்தாததோடு ஈரத்தை வெளியீடுவதாகவும் இருக்கவேண்டும். இதன் பின்னர் சப்ஸ் என்பவர் 1839-ல்பரப்பைக் கடினமாக்கிய எஃகின் தகடுகளால் இரும்புப் பெட்டிகளைச் செய்து அவற்றின் வலிமையை அதிகமாக்கினார்.

தற்கால இரும்புப் பெட்டி: தற்காலத்தில் இரும்புப் பெட்டியின் பக்கங்களும், மேற்புறமும், அடிப்பாகமும் ஒரே எஃகின் தகட்டை வளைத்துச் செய்யப்படுகின்றன. இதன் பின்புறத் தகட்டை இதனுடன் இணைத்துப் பொருத்துகிறார்கள். தகட்டின் உட்புறத்தில் வெப்பத்தைக் கடத்தாத பொருள் அமைக்கப்பட்டிருக்கும். தீயை எதிர்த்து, ஈரத்தை வெளிவிடும் பொருள்கள் பெட்டிக்குள் ஒரு சிறு அறையில் இருக்கும். காரக்கரைவொன்றோ, படிக்காரம், சிலாசத்து ஆகிய இரு பொருள்களின் கலவையோ இதற்குள் இருக்கும். இப்பொருள்கள் வெப்பத்தை ஏற்றால் நீராவியை வெளிவிட்டுப் பெட்டியை ஈரமாக்கி இது தீப்பிடிக்காமற் செய்யும். பெட்டியில் வைக்கப்படும் பொருள்களின் மதிப்பிற்கேற்ப இரும்புத் தகட்டின் தடிப்பு 1/16 அங்குலத்திலிருந்து 3/4 அங்குலம் வரை இருக்கலாம். பெட்டியின் கதவு இதன் பக்கங்களைவிட வலிவாக அமைக்கப்படுகிறது. கதவின் உட்புறத்தில் தாழ்ப்பாள்களைப் போடும் சாதனமும், போட்ட நிலையில் இவற்றைப் பொருத்திவைக்கும் பூட்டும் இருக்கும். கதவைத் துளைத்து இவற்றைத் திறந்துவிடாமற் செய்ய, இவற்றின் மேல் இன்னும் சில எஃகின் தகடுகள் அடிக்கப்படுகின்றன.

தீயினால் விளையும் தீங்கைத் தடுக்கத் தீ யெதிர்க்கும் பொருள் உள்ளே அமைக்கப்படுவதோடு வேறு சில எச்சரிக்கைகளும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இரும்புப்பெட்டி உள்ள கட்டடம் தீப்பிடித்துக்