பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்பு

83

இரும்பு

நிகழும் மாறுதல் புறவேற்றுமை மாற்றமே அன்று என்றும், அது காந்த மாறுதலே என்றும் கருதுகிறார்கள். இக்கருத்தின்படி பீட்டா இரும்பு என ஒரு தனி வடிவம் இல்லை.

இரும்புக் கூட்டுக்கள்

இரும்பு இருவகை உப்புக்களைத் தரும். அவை அயச உப்புக்கள் என்றும் அயக உப்புக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அயச உப்புக்களில் இரும்பின் அணு வலுவெண் இரண்டு. அயக உப்புக் கரைவுகள் பொதுவாக நிறமற்றோ இலேசான பச்சை நிறமாகவோ இருக்கும். இவை மையின் சுவையை உடையவை. இவை எளிதில் ஆக்சிகரணித்து அயக உப்புக்களாக மாறும். அயக உப்புக்கள் மஞ்சள், சிவப்பு, ஊதா அல்லது பழுப்பு நிறமுள்ளவை.

ஆக்சைடுகளும் ஹைடிராக்சைடுகளும் : அயச ஆக்சைடு, அயக ஆக்சைடு, அயசோ-அயக ஆக்சைடு என மூன்று ஆக்சைடுகள் உண்டு. அயச ஆக்சலேட்டைக் காற்றுச் சேராமல் 160°இல் சூடேற்றியோ, அயக ஆக்சைடை ஹைடிரஜனின் உதவியால் குறைத்தோ அயச ஆக்சைடைப் பெறலாம். இது நீரிற் கரையாத கரிய திண்மம். இது அமிலங்களில் கரைந்து அயச உப்புக்களைத் தரும். இது எளிதில் ஆக்சிகரணிக்கும்.

அயக ஆக்சைடு இயற்கையிற் கிடைக்கும் இரும்புத்தாது. சுட்ட சுண்ணாம்பின்மேல் அயகக் குளோரைடைச் செலுத்தி இதைப் பெறலாம். இது ஒரு பழுப்பு நிறத்தூள். இது ஒரு நிறப்பொருளாகவும் உலோக மெருகாகவும் பயன்படுகிறது. நுண்ணிய தூளான நிலையில் இது அமிலங்களில் மெல்லக் கரையும்.

அயசோ-அயக ஆக்சைடு (Fe3O4) : பழுக்கக் காய்ச்சப்படும் இரும்பின் மேற்பரப்பில் தோன்றும் பொருக்கு இந்த ஆக்சைடினால் ஆனது. இது வலிவான காந்த இயல்புள்ளது. அயக ஆக்சைடை 400° வெப்ப நிலைக்குச் சூடேற்றி, அதன்மேல் ஹைடிரஜனையும் நீராவியையும் செலுத்தி, இதைத் தூய நிலையில் பெறலாம். இது அமிலங்களில் கரைந்து, ஓர் அயச உப்பு. ஓர் அயகவுப்பு ஆகிய இரண்டின் கலவையைத் தரும். ஓர் அயச உப்பின் கரைவுடன், அம்மோனியம் அல்லது சோடியம் ஹைடிராக்சைடை வினைப்படுத்தி, அயச ஹைடிராக்சைடைப் பெறலாம். வெண்மையான படிவாகத் தோன்றும் இப்பொருள் மிக எளிதில் அயச ஹைடிராக்சைடாக ஆக்சிகரணிக்கும். இது அமிலங்களில் கரையும். இது குறைக்கும் தன்மையுள்ளது. அயக ஹைடிராக்சைடு [Fe (OH)3] செம்பழுப்பு நிறமும், ஊன்பசை போன்ற தோற்றமும் உள்ளது. அயக உப்பை அம்மோனியம் அல்லது சோடியம் ஹைடிராக்சைடுடன் வினைப்படுத்தி இதைப் பெறலாம்.

உப்பீனிக் கூட்டுக்கள்: அய்ச குளோரைடு (Fe Cl2): இரும்பை ஹைடிரோ குளோரிக அமிலத்தில் கரைத்து, நீலப் பச்சை நிறமுள்ள படிகங்களாக இதைப் பெறலாம். இரும்பைச் சூடேற்றி, அதன்மேல் ஹைடிரஜன் குளோரைடைச் செலுத்தி, இதை நீரிலியாகப் பெறலாம். நீரிலி வெண்மையான தகடுகளாகக் கிடைக்கும். அயச குளோரைடின் நீரிலி ஆல்கஹாலிலும் ஈதரிலும் கரையும். இது 1.000° வெப்ப நிலையில் ஆவியாகும். இது எளிதில் கசியும் தன்மை கொண்டது. அயச புரோமைடும், அயச அயோடைடும் தனிமங்களிலிருந்து பெறப்படுகின்றன. இரும்பை ஹைடிரோ புளோரிக அமிலத்தில் கரைத்து புளோரைடைப் பெறலாம்.

அயக உப்புக்களிலேயே முக்கியமானது அயக் குளோரைடு (Fe Cl3). சுமார் 1,000° வெப்பநிலையிலுள்ள இரும்பின் மேல் குளோரினைச் செலுத்தி இதை நீரிலியாகப் பெறலாம். இது பச்சை நிறத்துடன் ஒளிரும் கரிய படிகங்களாகக் கிடைக்கும். இது அதிகமாகக் கசியும் தன்மையுள்ளது. இது நீரிற் கரைந்து மஞ்சள் அல்லது பழுப்பு நிறக் கரைவை அளிக்கும். அயக குளோரைடுக் கரைவு இரத்த ஒழுக்கைக் கட்டுப்படுத்த மருத்துவத்தில் பயன்படுகிறது.

இரும்பைப் பழுக்கக் காய்ச்சி, அதன்மேல் புரோமினைச் செலுத்தி, அயக புரோமைடை மஞ்சள் நிறப் படிகங்களாகப் பெறலாம். இது அயக குளோரைடையொத்த பண்புகள் கொண்டது.

கந்தகக் கூட்டுக்கள்: இரும்பையும் கந்தகத்தையும் நேரடியாகக் கூட்டி, அயச சல்பைடை மஞ்சள் நிறப்படிகங்களாகப் பெறலாம். இது அமிலங்களில் எளிதிற் கரைந்து ஹைடிரஜன் சல்பைடை வெளிவிடும் இதைக் காற்றில் சூடேற்றினால் முதலில் அயச்சல்பேட்டும், உயர்ந்த வெப்பத்தில் கந்தக டையாக்சைடும் அயக ஆக்சைடும் தோன்றும்.

அயக ஆக்சைடை 100° க்குக் குறைவான வெப்ப நிலையில் ஹைடிரஜன் சல்பைடுடன் வினைப்படுத்தினால் அயக சல்பைடைப் பெறலாம் (Fe, S3). இதுவும் ஒரு மஞ்சள் நிறப் பொருள்.

இரும்புக் கந்தகக்கல் என்ற கனியம் அயக டைசல்பைடு என்ற கூட்டாகும். இது பித்தளையையொத்த மஞ்சள் நிறமுள்ள உறுதியான பொருள். இதன் தோற்றத்தினால் இது 'அறிவிலியின் தங்கம்' (Fool's Gold) என்று அழைக்கப்படுவதுண்டு. இது நீர்த்த அமிலங்களில் கரைவதில்லை.ஆனால் அடர்ந்த நைட்ரிக் அமிலத்தில் இது எளிதிற் கரையும்.

அன்னபேதி (த.க.) என வழங்கும் அயச சல்பேட்டு (Fe SO4) அயசக் கூட்டுக்களிலேயே முக்கியமானது. இது இந்தியாவில் தொன்றுதொட்டே மருத்துவத்தில் பயன்பட்டு வந்துள்ளது. இரும்பை நீர்த்த கந்த காமிலத்தில் கரைத்து இதைப் பெறலாம். கந்தகக் கல்லைக் குவித்துவைத்துக் காற்றில் அது ஆக்சிகரணிக்குமாறு செய்து இது தயாரிக்கப்படுகிறது. இது பச்சை நீறப் படிகங்களாகக் கிடைக்கும். இது கார உலோகங்களின் சல்பேட்டுக்களுடன் இரட்டை உப்புக்களைத் தரும்.

சூடான அய்ச் சல்பேட்டுக் கரைவில் அடர் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து அயக சல்பேட்டைப் பெறலாம். இது நீரில் அவ்வளவாகக் கரையாது. இதைச் சூடேற்றினால் அயக ஆக்சைடும் கந்தக டிரையாக்சைடும் கிடைக்கும்.

மற்றக் கூட்டுக்கள்: அயசகார்பனேட்டு (Fe CO3) சிடரைட்டு என்ற தாதுவாக இயற்கையிற் கிடைக்கிறது. காரக் கார்பனேட்டு ஒன்றை அயச உப்புடன் கலந்து, இதை வெண்மையான படிகமாகப் பெறலாம். ஓர் அயக உப்பின் கரைவில் சோடியம் பாஸ்பேட்டைச் சேர்த்து அயக பாஸ்பேட்டைப் பெறலாம்.

நுண்ணிய தூளான இரும்பின் மேல் 120° வெப்ப நிலையில் கார்பன் மானாக்சைடைச் செலுத்தினால் இரும்பு பெண்டா கார்பனைல் [Penta Carbonyl, Fe (CO)6) என்ற மஞ்சள் நிறத் திரவத்தைப் பெறலாம். நீர்வாயுவை இரும்புக் குழல்களின் வழியே செலுத்தும்போதும், கரிவாயுவை இரும்பு உருளைகளில் சேமித்து வைக்கும்போதும் இக்கூட்டுத் தோன்றி, வாயு விளக்குக்களின் திரியின்மேல் அயக ஆக்சைடைப் படிவிக்கிறது.