பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இம்மென்கீரனார்

4

இமயமலை

செக்யூரிட்டிகளின்மேல் பணம் கொடுப்பதும், ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்டியல்கள், புரோநோட்டுக்கள் முதலியவற்றிற்குப் பணம் கொடுப்பதும், இந்தப் பாங்கின் முக்கியமான தொழில்களாம். அன்றியும் அரசாங்கத்திற்கு வேண்டிய பாங்குத் தொழில் முழுவதையும் இந்தப் பாங்கே நடத்தி வந்தது. அரசாங்கப் பொதுக் கடனையும் நிருவகித்தது. இந்தப் பாங்கு இந்திய வாணிக நலன்களுக்கு உகந்ததாகவும் உதவியாகவும் இல்லையென்றும், ஐரோப்பியர் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தது என்றும் குறை கூறப்பட்டது. 'பாங்கர்களின் பாங்கு' என்னும் நிலையில் இருக்கவேண்டிய இந்தப் பாங்கு இந்தியப் பண மார்க்கெட்டிற்கு மிகுதியும் பயன்படாமல் சாதாரண பாங்குகளின் அலுவல்களைச் செய்து வந்ததால், இது ஏற்பட்ட பிறகும் மார்க்கெட்டிற்கு அதிக வசதிகள் ஏற்படவில்லை.

ரிசர்வ் பாங்கு மத்தியப் பாங்காக நிறுவப்பட்டபின் இம்பீரியல் பாங்கின் நிலைமை மாற வேண்டியதாயிற்று. இதற்கு ஏற்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 1943-ல் நிறைவேற்றப்பட்ட இம்பீரியல் பாங்கு (திருத்தச்) சட்டப்படி இம்மாறுதல் ஏற்பட்டது. இப்போது ரிசர்வ் பாங்கின் ஏஜண்டாக இம்பீரியல் பாங்கு இருந்துவருகிறது; இவ்வேலைக்காக இம்பீரியல் பாங்கு ஒரு கமிஷன்பெறுகிறது.

இம்மென்கீரனார் கடைச் சங்கப் புலவர். இவர் இயற்பெயர் கீரனார் என்றும், இப்பெயருடையோர் பலர் இருத்தலின், வேறு பிரித்தறிய 'இம்மென்' என்னும் அடைமொழி கொடுத்தனரென்றும் அறிய முடிகிறது. 'இம்மென் றலமரல்' என்னுந் தொடர் இவர் பாட்டில் உள்ளது. அதனால் இவர் இப்பெயர் பெற்றார் போலும் (அகம். 398).

இமயமலை இந்தியாவின் வடக்கெல்லையாக அமைந்திருக்கும் மலைத்தொடர். ஹிமாலயம் என்னும் வடசொல் பனியின் இருப்பிடம் என்று பொருள்படும். இது சுமார் 73° கி. அட்சரேகையிலிருந்து 95° கி. அட்சரேகை வரை 1,500 மைல் நீளமும், 100லிருந்து 150 மைல்வரை அகலமும் கொண்டு, திபெத்தையும் இந்தியாவையும் பிரிக்கும் பெரிய மதில் போல் அமைந்துள்ளது. மத்திய ஆசியாவின் மிகப்பெரிய பீடபூமியின் தெற்குப்புறத்திலுள்ள செங்குத்தான சரிவு என இதைக் கூறலாம். இந்தியாவின் பக்கத்தில் இது அடிவாரம் வரை மிகச் செங்குத்தாக அமைந்துள்ளது. மத்திய ஆசியாவின் பக்கத்தில் சரிவு மிகச் சாய்வாக உள்ளது.

இமயமலையை இடைவெளிக ளற்ற ஒரே மலைத் தொடர் என்று கருத முடியாது. இது இணையாக உள்ள பல தொடர்களையுடையது. தெற்கிலிருந்து வடக்கே இவற்றை ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கலாம். (1) சிவாலிக் மலைகளும் அவற்றின் பின்புறத்தில் உள்ள நீண்ட பள்ளத்தாக்குக்களும். (2) சிறிய இமயமலைத் தொடர்கள். இவற்றின் உயரம் 6.000 அடியிலிருந்து 13,000 அடிவரை இருக்கும். (3) பெரிய இமயமலைத்தொடர்களின் கிளை மேடுகள் (Spurs). இவற்றின் சராசரி உயரம் 15,000 அடி. (4) பெரிய இமயமலைத் தொடர்கள். உலகில் உயரமான பல சிகரங்கள் இப் பகுதியில் உள்ளன. இவற்றில் சில எவரஸ்ட் (உலகிலேயே மிக உயரமானது: 29,141'), காட்வின் ஆஸ்ட்டின் (22,250'),கஞ்சன் ஜங்கா (28,146'), தவளகிரி (26.795') ஆகியவை. இப்பகுதியின் சராசரி உயரம் 20.000 அடி. (5) சிந்து பிரமபுத்திரா பள்ளம். இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 12,000 லிருந்து 14,000 அடி வரை உள்ளது. இதையடுத்து இமயமலை க் கப்பாலுள்ள தொடர்கள் திபெத்துப் பீடபூமியின் விளிம்பில் உள்ளன. கைலாசச் சிகரம் (21,982') இப் பகுதியில் உள்ளது. இதுவும் இதன் அருகில் உள்ள மானசரோவர் ஏரியும் மேற்கேயுள்ள நங்கபர்வதமும் மற்றும் திருக்கேதாரம், பதரிகாச்சிரமம் முதலியனவும் புனிதமாகக் கருதப்படும் இடங்கள்.

காச்மீரத்திற்கு வடக்கிலும் வடமேற்கிலும் உள்ள பெரிய நீர்ப்பிரிவு இந்தியாவை நோக்கி வரும் ஆறுகளையும், மத்திய ஆசியாவை அடையும் ஆறுகளையும் பிரிக்கிறது. இந்தியாவை அடையும் ஆறுகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையிலுள்ளவை மலைகளை அறுத்துக்கொண்டு நேரே சமவெளியை அடைகின்றன. இரண்டாம் வகையிலுள்ளவை பீடபூமியின் மேலேயே எதிரான திசைகளில் சென்று மலைத்தொடரின் இரு முனைகளின் வழியே கீழிறங்குகின்றன. ஆறுகள் மலைகளைக் கடந்து வருவதால் உண்டாகும் பள்ளத்தாக்குக்கள் உலகிலே பெரிய மலையிடுக்குக்கள் ஆகும்.

புவியின் மேற்புறணி மத்திய ஆசியப் பீடபூமியின் தெற்கு விளிம்பில் வலிவாக மடிந்து இமயமலைத் தொடர்கள் தோன்றியிருக்கவேண்டும். இடைப் பிராணி யுகத்தில் இது டெதிஸ் (Tethys) என்னும் பெருங்கடலின் ஒரு பகுதியாக இருந்திருக்கவேண்டும். கிரிட்டேஷஸ் காலத்தின் இறுதியில் காரக்கோரம்