பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயக்கர்

6

இயல் எண்கள்

தொடர்ச்சியாக உள்ளது போலவே தெரியும். ஆகையால் இயங்கும் பொருள் குறிப்பிட்டதொரு இயக்க நிலையிலுள்ளபோது மட்டும் கண்ணுக்கு நேரே தொளை வந்து அமையுமாறு, சக்கரத்தின் சுழற்சியைச் சரிப்படுத்திவிட்டால், இயங்கும் பொருளானது தொடர்ச்சியாக ஒரே நிலையில் நிலைத்து நிற்பதுபோல் தென்படும். ஆனால் தொளைகள் பெரியனவாக இருந்தால் இயங்கும் பொருள் தெளிவாகத் தெரியாது.

மற்றொருவகை இயக்கங்காட்டியில் இடைவிட்டுத் தோன்றும் ஒளியில் பொருளைப் பார்க்குமாறு செய்யும் அமைப்பு இருக்கும். வாயு ஒளிர் விளக்கு ஒன்றை ஒரு சுழலும் சாவியுடனும், ஒரு மின் கண்டென்சருடனும் இணைத்துவிட்டால் சாவியானது ஒவ்வொரு சுற்று வரும்போதும் விளக்காவது வினாடி எரிந்து அணையும். சுழலும் சாவியின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, ஒரு வினாடியில் நிகழும் மின்னல்களின் வீதத்தைக் கட்டுப்படுத்தலாம். இத்தகைய இடைவிட்ட ஒளியில் ஓர் இயங்கும் பொருளைப் பார்க்கும்போது அது ஒரே இயக்க நிலையில் உள்ளவாறு மின்னல்களின் வேகத்தைச் சரிப்படுத்திப் பொருள் அசையாது நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம்.

எந்திரங்களின் இயங்கும் உறுப்புக்களில் தேவையற்ற இயக்கங்கள் நிகழலாம்; அல்லது அவற்றின் இயக்கத்தினால் எந்திரத்தில் விகாரங்கள் தோன்றலாம். இவற்றை ஆராய்ந்து, இக்குறைகளை நீக்க இயக்கங்காட்டி இன்றியமையாதது. அலையியக்கம் போன்ற பௌதிக விளைவுகளை ஆராயவும் இயக்கங்காட்டி பயன்படுகிறது. வேகமாக இயங்கும் பொருள்களைப் படம் பிடிக்கும் துறையில் இயக்கங்காட்டியின் மின்னல் அமைப்புப் பயன்படுகிறது.

இயக்கர் பதினெண்கணங்களுள் ஒருவகையினர். பிரமன் படைப்பில் உண்டானவர்களுள் பிரமனைப் பட்சிக்க வேண்டுமென்றவர் இராக்கதர் எனவும் ,இரட்சிக்க வேண்டுமென்றவர் இயக்கர் எனவும் பெயர் பெற்றனராம். இயக்கர் குபேரனுடைய கணங்கள்.

இயக்கவியல்: பார்க்க: எந்திரவியல்.

இயங்கும் படிக்கட்டு (Escalator) : மாடியேறும் மக்களைத் தானாக இயங்கி மேலும் கீழும் கொண்டு செல்லும் சாதனம் மேனாடுகளில் வழக்கத்தில் உள்ளது. ஆகையால் இதன்மேல் ஒருவர் ஏறி நின்றுகொண்டால் அது இயங்கும் திசைக்கேற்ப அவர் மேலே செல்லலாம் அல்லது கீழிறங்கி வரலாம். இதன் படிகள் முடிவற்ற ஒரு சங்கிலியில் பொருத்தப்பட்டிருக்கும். விளிம்பில் தடிகளைக்கொண்ட சக்கரங்களால் இச்சங்கிலி இயக்கப்படுகிறது. இச் சக்கரங்களை வலிவான மின்சார மோட்டார்கள் ஓட்டுகின்றன. ஒவ்வொரு படியும் நான்கு உருளைகளின்மேல் இயங்கும் வண்டிபோல் அமைக்கப்பட்டிருக்கும். படிக்கட்டைத் தேவைக்கேற்றாற்போல் மேலோ கீழோ செல்லுமாறு அமைக்கலாம். பெரிய அலுவலகங்களில் உள்ள இயங்கும் படிக்கட்டுக்கள் காலை நேரத்தில் மேனோக்கிச் செல்லுமாறும், மாலையில் கீழிறங்குமாறும் அமைக்கப்பட்டிருக்கும். பலவேறு வயதும் உடல்நிலையும் கொண்ட மக்கள் இப் படிக்கட்டைப் பயன்படுத்துகிறார்கள். ஆகையால் அதன் வேகம் மிக அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கக்கூடாது. இது நிமிடத்திற்குச் சுமார் 100 அடி செல்லும். இதன் சரிவு சாதாரணமாக 30°. இதன் அகலம் இரண்டிலிருந்து நான்கடி இருக்கும்.

ஒரு படிக்கட்டு உச்சியை அடைந்ததும் அதன்மேல் நிற்பவர் அதிலிருந்து இறங்குவதற்கு ஏற்றவாறு உச்சியில் அதன் சரிவைச் சரிப்படுத்த இரண்டு அல்லது மூன்று படிகள் சமதளமாகவும் கிடையாகவும் இருக்குமாறு செய்யப்படுகிறது. படிக்கட்டில் உள்ளவர் அப்படியும் அதிலிருந்து இறங்காவிட்டால் அது நகரும் திசைக்குச் சாய்வாக உள்ள ஒரு தடை அவரை மெல்லத் தள்ளி அதிலிருந்து இறக்கிவிடும். படிகளின் இரு புறங்களிலும் நெகிழ்வுள்ள கைப்பிடிக் கம்பிகள் இருக்கும். இவையும் படிக்கட்டின் வேகத்துடன் இயங்குகின்றன. ஆகையால் படியில் ஏறி நின்றுகொண்டு இதைப் பிடித்துக்கொண்டால் மேலே செல்லும்வரை அதை விடவேண்டியதில்லை. படிக்கட்டு இயங்கிக் கொண்டிருக்கும்போது சங்கிலி அறுந்தோ, அது எதிர்த் திசையில் திரும்பியோ போய் ஆபத்து விளைய்லாம். எதிர்பாராத இந்த விபத்துக்களைத் தவிர்க்கக் கோளாறு நேரும்போது தாமாக வேலை செய்து படிக்கட்டை நிறுத்தும் தடைகள் அமைக்கப்படுகின்றன.

இயங்கும் படிக்கட்டுகள் உயர்த்திகளைவிட (Lifts ) அதிகமான மக்களை ஏற்றிச் செல்கின்றன. ஒரு படிக்கட்டு ஒரு மணியில் சுமார் 8,000 மக்களை ஏற்றிச்செல்லும். இதை இயக்க ஆகும் செலவும் குறைவு. ஆகையால் இது பூமிக்கடியில் ஓடும் ரெயில் நிலையங்களிலும், அலுவலகங்களிலும், பெரிய கடைகளிலும், சினிமா அல்லது நாடகக் கொட்டகைகளிலும், தொழிற்சாலைகளிலும் அமைக்கப்படுகின்றது.

இதே தத்துவத்தில் வேலை செய்யும் இயங்கும் நடைப் பாதைகளும் உண்டு. இவற்றின்மேல் ஏறும் ஒருவர் தேவையான இடத்திற்கு நடக்காமலே செல்லலாம்.

இயல் எண்கள் (Algebraic Numbers) : முழு எண் கெழுக்களையும் (Co-efficients) ஒரே மாறியையும் (Variable) கொண்ட பல்லுறுப்பிச் சமன்பாட்டின் மூலமாக வரும் எண் 'இயல் எண்' எனப்படும்.

1. எண்களின் இனம்: எண்களைச் சில இனங்களாகப் பிரித்து ஆராய்வது வழக்கம். இவ் வினங்களிற் சில வருமாறு:

i. இயற்கை முழு எண்கள் (Natural or positive integers). இவை 1, 2, 3..... முதலியவை.

ii. முழு எண்கள் (Integers): இந்த இனத்தில் இயற்கை முழு எண்களோடு வேறு முழு எண்களும் அடங்கியுள்ளன. இம் முழு எண்கள் 0, 1, ―1, 2, ―2, 3, ―3,......... என்பவை. இம் முழு எண்கள் a, b என்னும் இயற்கை முழு எண்களைக் கொண்டு வரும் (a-b) என்பனவாகக் கருதலாம். உ-ம்: 6=7―1=8―2,......; 0=1―1=2―2........;

iii. பகு அல்லது விகிதமுறு எண்கள் (Rational numbers) : இந்த இனத்தில் மேற்கூறிய இயற்கை முழு எண்களும், முழு எண்களும், வேறு வகைப்பட்ட எண்களும் அடங்கி யிருக்கின்றன. இப்பகு எண்கள் a, b என்ற முழு எண்களைக் கொண்டு வரும் a/b என்னும் உருவில் இருக்கும். இங்கு b≠ o உ-ம்: 0/1, 0/7, 0/(-2), 1/1, 6/6. 10/(-10), 21/2..........

2. இயற்கை முழு எண்கள்: இவைகளுள் எந்த இரண்டைக் கூட்டினாலும் வரும் கூட்டுத் தொகையும் ஓர் இயற்கை முழு எண்ணே. இதே மாதிரியே இவைகளுள் எந்த இரண்டை எடுத்துக்கொண்டு பெருக்கினாலும் வரும் விடையும் ஓர் இயற்கை முழு எண்ணே. இவ் வுண்மையைக் கூட்டல், பெருக்கல்-