பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல்பூக்கம்

13

இயல்பூக்கம்

தேவையால் தீர்மானிக்கப்படுகிறதென்று கொள்வதற்கில்லை. பறவை பறப்பது இயக்க நாட்டத்தாலோ, உணவு நாட்டத்தாலோ, கலவி நாட்டத்தாலோ, அல்லது இவற்றின் சேர்க்கையாலோ உந்தப்படுவதால் நிகழலாம். அன்றியும் உணவின் தேவையால் உந்தப்பட்ட கோழிக்குஞ்சு தானியங்களை அலகால் கொத்துகிறது; கன்றுக்குட்டி ஊட்டுகிறது; மாடோ தழை மேய்கிறது. ஆகவே உந்தல்களும் இயல்பூக்கங்களும் வேறுவேறேயாகும்.

கலவி நாட்டமும் காதலூக்கமும்: உயரிய பிராணிகளனைத்துக்கும் கலவி நாட்டமுண்டு. கலவி சம்பந்தமான பல மறிவினைகளுமுண்டு. ஆனால் அவையனைத்துக்கும் காதலூக்கம் உண்டாவென்று, சில உளவியலறிஞர் கேட்பர். எலிபோன்ற பாலூட்டி விலங்குகளுக்கு இத்தகைய காதலூக்கம் உண்டு. இரண்டு மாதத்தில் பக்குவமடையும் ஆண் எலி ஒன்று தனிமையாக வளர்க்கப்படுகிறது. வேறு ஆண் எலி, பெண் எலிகளையோ அவற்றின் செய்கைகளையோ பார்க்க வசதியில்லை. ஆயினும் இரண்டு மாத காலமானவுடன் அது முன்னிருந்ததைவிடச் சுறுசுறுப்பாகக் காணப்படுகிறது. ஒரு பெண் எலியை அருகில் கண்டதும் அதைச் சுற்றுகிறது. எலி இனத்துக்கு வழக்கமான செயல் முறைகளுக்கேற்ப நடந்துகொள்கிறது; இங்குக் காதலூக்கம் இருக்கிறதென்பதில் ஐயமில்லை. ஆனால் குரங்கினத்திலோ நியதியான காதலூக்கம் ஒன்றிருக்கிறதென்பதற்கில்லை என்று யேல் (Yale) பல்கலைக்கழக ஆராய்ச்சிகளிலிருந்து முடிவு கட்டியுள்ளனர். ஏனெனில் காதல் நடத்தைமுறை குரங்குக்குக் குரங்கு மாறுகிறது; ஒரே குரங்கினிடத்தும் தடவைக்குத் தடவை மாறுதல் உண்டாகிறது. மனிதர்களிடம் பல வேறு மாறுதல்கள் உள. கேள்வியாலும் காட்சியாலும் முயன்றுந் தவறியும் கற்குமுறையாலும், பயிற்சியாலும் மாறுபாடுகள் ஏற்படுவன பற்றி நியதியான காதலூக்கம் மனிதரிடமிருப்பதாகக்கொள்ள ஏதுவுண்டா என்று சிலர் கேட்கிறார்கள். மேல் பிராணிகளிடத்து உந்தலுண்டு; ஆனால் இயல்பூக்கம் இல்லையென்பர். அங்ஙனமே மகவூக்கம் மற்ற ஊக்கங்கள் பற்றியும் உந்தல்களுண்டு. ஆனால் இயல்பூக்கங்களில்லையென்பர். எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு நடத்தை முறை கிடையாது. சிக்கலான செயல்கள் அனைத்தும் கற்கப்பட்ட செயல்களென்பர். இயல்பூக்கங்களை முக்கியமாகக் கருதும் மக்டூகல் என்ற உளவியலறிஞரும் பின்வருமாறு மனிதனுடைய ஆற்றல்கள் என்னும் நூலில் கூறுகிறார். "இயல்பூக்கச் செயல் கீழ்ப் பிராணிகளுக்கே சிறப்பியல்பு, அசாமானிய இலட்சணம். இப்பதத்தை மனிதனிடம் பிரயோகிப்பதால் குழப்பமும் விவாதமும் ஏற்படுகின்றன. கீழ்த்தரச் செயல்களுக்கும் உயர்தரச் செயல்களுக்குமுள்ள தொடர்பும் நன்கு விளக்கம் பெறுவதில்லை."

இயல்பூக்கம் குருட்டுச் செயலா? மேலே கூறிய குளவி கூடு கட்டும் உதாரணத்தில் வெட்டுக்கிளி பெரியதாயிருந்தால் குளவியானது கூட்டின் வாயைப் பெரிது பண்ணுகிறது. அல்லது வெட்டுக்கிளியை நசுக்குகிறது, முறுக்குகிறது, திருப்புகிறது; கூட்டை அடைத்துவிட்டுப் போய் இறக்கிறது. தோல்விக்கும் வெற்றிக்குமுள்ள மாறுபாட்டையறிந்து, தோல்வியை அகற்றி வெற்றியைப் பெற விரும்புகிறது. குளவியின் செயல்கள் வெகு நாட்களுக்குப் பிறகு வரும் இலக்கைப் பெறுவதற்குத் திட்டமான பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றன. தெளிவான நோக்கமில்லாவிடினும் இயல்பூக்கம் முற்றிலும் குருட்டுச் செயல் ஆகாது. சிலர் இயல்பூக்கம் விருப்பத் தொழிலே யாகாது; அதற்கு வெகு நாட்பட்ட நோக்கமோ, உடன் நோக்கமோ கிடையாதென்பர். இயல்பூக்கச் செயலனைத்தும் இணைக்கப் பெற்ற மறிவினைத் தொடரே (Chain reflex) யென்பர். இயல்பூக்கம் ஒரு தனிவகைச் செயலன்று என்பர். அதில் ஒவ்வொரு துலங்கலும் அடுத்த துலங்கலுக்குத் தூண்டலாகும். இம்மறிவினைத் தொடர்க் கொள்கையை எப்போது ஒப்புக்கொள்ள வேண்டுமெனில், இயல்பூக்கம் மாறாத செயல் தொடராயிருந்தால், அதாவது, பொறியியக்கம்போலிருந்தால்தான் நாம் அதை ஒப்புக்கொள்ளவேண்டியவர் ஆவோம். ஆனால் இயல்பூக்கத்தின் முக்கிய அமிசம் மாறும் முயற்சிகளோடு கூடிய பிடிவாதப் போக்கு என்பதாகும். கூடு கட்டுதல் போன்ற இயல்பூக்கச் செயலை, கட்டும் இடம், கட்டப் பயன்படுத்தும் பொருள் (வாழை நார், வைக்கோல், தென்னந்தும்பு, பன்னாடை). கூடு அடைந்திருக்கும் நிலை ஆகியவற்றிற்கும் ஏற்றவாறு குருவி அமைத்துக்கொள்கிறது. நுண்ணறிவுக் குறிகளோடும் மாறும் முயற்சிகளோடும் கூடியதுமான இத்தகைய பிடிவாதச் செயலை, எந்திரப் போக்கானதும் மாறாததுமான மறிவினைத் தூண்டல் துலங்கல் தொடர் என எங்ஙனம் விளக்க முடியும்? மறிவினை போலல்லாமல் இயல்பூக்கம். அனுபவத்தால் மாறுபாடடைகிறது. கட்டும் கூட்டைப் பற்றிய எண்ணமோ, விம்பமோ குருவிக்குக் கிடையாதென்றும், அது எடுத்து வைக்கும் அடுத்த சுள்ளிக்கு மேல் அது பார்ப்பதில்லையென்றும் சொல்லுவது சரியன்று. வெகுநாள் கொண்ட நோக்கமின்றி இச்செயலை விளக்கமுடியாது. ஆனால் இந்நோக்கம் குருவிக்கு எங்ஙனம் கிடைத்தது? தன் பெற்றோரது கூட்டின் நினைவாலென்பதற்கில்லை. ஏனெனில், தன் இனத்தை விட்டு வேறு இனப் பறவையின் கூட்டில் பொறிக்கப்பட்ட குருவி தன் இனத்திற்கேற்பவே கூடு கட்டுகிறது. இதிலிருந்து இயல்பூக்கச் செயல் மிகவும் சிக்கலான பிரச்சினையென்று காண்கிறோம். இரையின்மேல் பாயப்போகும் புலிக்கு இரையைக் கடித்துத் தின்பதுபற்றிய முன்னறிவு இல்லையென்று சொல்ல முடியுமா? ஆகவே, இயல்பூக்கம் பொறியியக்கம் போன்ற குருட்டுப் போக்கான செயலாகாது.

மனிதனும் இயல்பூக்கமும்: விலங்குகளின் செயல்கள் முற்றிலும் இயல்பூக்கச் செயல்களே. மக்களின் செயல்களில் இயல்பூக்கச் செயல்கள் அவர்களது சிந்தனா சக்தியால் மாறுதல்களடைகின்றன. பசித்தவுடன் உணவை விரும்பவும், திகிலடைந்ததும் ஓடவும், ஆராய்வு ஆசை எழுந்ததும் ஆராயவும் நம்முடைய இயல்பூக்கங்கள் தூண்டுகின்றன. ஆனால் இவையொன்றையும் நாம் செய்தே தீரவேண்டுமென்பதில்லை. நம் இயல்பூக்கங்கள் உள்ளத்தின் ஆதிக்கத்துக்குட்பட்டவை; மாறும் தன்மையும் வாய்ந்தவை. இயல்பூக்கம் இறுதி இலக்கைத் தருகிறது. ஆனால் நுண்ணறிவு இவ் விலக்கைப் பெறும் வழிவகைகளைத் தீர்மானிக்கிறது. ஒரு தாய் தன் குழந்தையின் நலத்தை இயல்பூக்கத்தின் பயனாக விரும்புகிறாள் என்றாலும், அவள் தன் நுண்ணறிவினால் அந்நலத்தை மீனெண்ணெயைக் கொண்டோ, இலேகியத்தைக் கொண்டோ பெறுகிறாள். நுண்ணறிவு இறுதி இலக்கைக்கூட மாற்றி வேறு பயனை நாடச்செய்யும் ஆற்றலுடையது. இதையே உயர்மடைமாற்றம் (Sublimation) என்பர். யானை மரங்களைப் பிடுங்கி. மனிதர்களைக் கொல்லும். ஆனால் அதன் பலத்தை நல்வழியிற் பழக்கிவிட்டால் அரிய பெரிய வேலைகளைச் செய்யும். ஒருவன் தன் போரூக்-