பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயேசு கிறிஸ்து

33

இயேசு கிறிஸ்து

குள்ள நகையொன்றை யாருக்கும் தெரியாமல் திருடிக் கொள்வர். இதைத் 'திருட்டுப் பித்து' என்பர். சிலர் தேவையில்லாத பொருளை விலை கொடுத்து வாங்கிய பின் கடைக்கு வெளியே வந்ததும் உடைத்து எறிந்துவிடுவர். சிலர் வீடுகள் முதலியவற்றிற்குத் தீயிடுவர். சிலர் தம்மைத் தாமே கடித்துக்கொள்வர்; கிள்ளிக் கொள்வர். சிலர் எவ்விதக் காரணமுமில்லாமலே தற்கொலையும் செய்துகொள்வர். தகுந்த மனோ சிகிச்சை செய்வதன் மூலம் இவற்றை நீக்கிக் கொள்ளலாம். எஸ். பி. ஆ.

இயேசு கிறிஸ்து : இவர் பாலஸ்தீனத்தின் தென்பகுதியிலுள்ள பெத்லகேம் என்னும் ஊரில் பிறந்து, வடபாகத்திலுள்ள நாசரேத்து என்னும் பட்டணத்தில் வளர்ந்தவர். இவருடைய தந்தை யோசேப்பு; தாய் கன்னி மரியாள். இவருடைய இயற் பெயர் யோசுவா என்பது. இந்த எபிரேயப் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். கிரேக்க மொழியில் இதை ஏசு என்று கூறினர். யூதர்கள் தங்களை விடுவிக்கும் ஒருவர் வருவார் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பதற்குரிய எபிரேய மொழியாகிய மேசியா என்பது கிரேக்கமொழியில் கிறிஸ்து என்று ஆயிற்று. யூதர்கள் எதிர் பார்த்த மீட்பர் இயேசுவே என்று கிறிஸ்தவர் நம்பியபடியால் இயேசுநாதருக்குக் கிறிஸ்து என்னும் பட்டப் பெயரும் வழங்கலாயிற்று, இவருடைய வாழ்க்கை வரலாற்றைக்கூறுவன விவிலிய நூலிலுள்ள நான்கு சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் ஆம்.

இயேசு

கி.பி. 28ஆம் ஆண்டை அடுத்த காலத்தில் பாலஸ்தீன நாட்டில் யோவான் ஸ்நானகன் (John the Baptist) என்னும் தீர்க்கதரிசி ஒருவர் தோன்றி, யூதமக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த கடவு ளுடைய இராச்சியம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்று அறிவித்து, மக்கள் மனம் திரும்புமாறு ஞானோபதேசம் செய்தார். அவருடைய உபதேசத்தைக் கேட்டவர்களில் இயேசுவும் ஒருவர். இவர் கி.பி. 30ஆம் ஆண்டை அடுத்த காலத்தில் தமது கலிலேயா மாகாணத்தில் தாமே தமது தொண்டைத் தொடங்கினார். இத்தொண்டு சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது. இந்தக் காலத்தில் இவர் இரண்டு முறை ஞானோபதேசச் சுற்றுப் பிரயாணம் செய்தார். இவருடைய அருள் மொழிகளும் அற்புதச் செயல்களும் மக்களிடையே பெருங் கிளர்ச்சியை உண்டாக்கின. இவர் சீடர் பன்னிருவர் அப்போஸ்தலர் (அனுப்பப்பட்டோர்) என்பவர்களை அனுப்பிக் கடவுளுடைய இராச்சியத்தைப் பற்றி நாடெங்கும் கூறி வரும்படி செய்தார். இதைக் கேட்ட மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்து, இயேசுவையே அரசராக்க முயன்றார்கள். ஆனால் அதிகாரிகளும் சமயத் தலைவர்களும் பெரிதும் கலக்கமுற்று இவரை வெறுக்கலாயினர். இயேசுவும் கலகம் ஏற்படும் என்று எண்ணி, யூதநாட்டுக்கு அப்பால் பிலிப்பு என்னும் சிற்றரசன் ஆண்டுவந்த செசரியா நாட்டுக்குச் சென்றார். இவருடைய சீடர்கள் இவரையே மேசியாவாக ஏற்றுக் கொண்டார்கள். அதன் மேல் இயேசு தம்மை மேசியாவாகப் பிரகடனம் செய்யும் பொருட்டுப் பாலஸ்தீனத்தின் தலைநகராகிய எருசலேமுக்குச் செல்ல ஆயத்தமானார்.

இயேசு கி.பி.32-ல் தமது வருகையை அறிவிக்குமாறு எழுபது சீடர்களை எருசலேமுக்கு அனுப்பிவிட்டு, ஞானோபதேசச் சுற்றுப்பிரயாணம் செய்தார். கி.பி. 33-ல் தம் சீடர்களுடன் வெற்றிக் கோலத்துடன் நகருக்குச் சென்று, தேவாலயத்தைத் தம்வசமாக்கிக்கொண்டு மக்களுக்கு ஞானோபதேசம் செய்தார்.

சமயத் தலைவர்கள் இவரை வெளிப்படையாகச் சிறை செய்தால் கலகம் நேரிடும் என்பதை உணர்ந்து, வஞ்சகமாகச் சிறை செய்து, யூதர் நீதி மன்றத்தில் தெய்வ நிந்தைக்காகவும், மேசியா உரிமை கொண்டாடியதற்காகவும் குற்றவாளி என்று தீர்ப்பளித்தனர். அதன்பின் அரச நீதி மன்றம் இவர் தேசத்துரோகி என்று முடிவு செய்து, சாதாரணக் குற்றவாளியைப்போல் இவரைச் சிலுவையில் அறைந்தது.

இவருடைய வரலாற்றை ஆழ்ந்து கவனித்தால் தோன்றக்கூடிய முக்கியமான உண்மைகள்: (1) இயேசுநாதர் எதைப் போதித்தாரோ அதன் வண்ணமே தம் வாழ்க்கையை நடத்தியவர். இவருடைய பகைவர்கள்கூட இவர் தவறிழைத்ததாக ஒருபோதும் கூறியதில்லை. ஒழுக்கத் தவறு என்னும் கறையில்லாத உண்மை ஊழியர்.

(2) சாதாரணமாக மக்கள் போற்றும் நூலறிவு இல்லாதவராயினும், கடவுள் உலகத்தை நலம் பெற இயக்கும் ஒப்பற்ற முறையை நன்கு அறிந்தவர். அதை இவருடைய உவமைகளிலும் தியாகத்தைப் பற்றிய உபதேசங்களிலும் காணலாம்.

(3) இயேசுநாதர் இவ்வாறு பரிசுத்தமான மகானாகவும் இணையற்ற ஞான குருவாகவும் இருந்தார் என்று கூறினால் மட்டும் போதாது. இவர் மானிடரேயாயினும், மானிடப் பண்புக்கு மேம்பட்டவர் என்றே கூறவேண்டும். "நான் உங்கட்குச் சொல்லுகிறேன்" என்று தொடங்கி, இவர் கூறும்பொழுது இவர் மானிடர்க்கும் அதீதமான அதிகாரம் ஒன்றை வகிப்பதாகவே காணப்படுகின்றது.

(4) இந்தத் தன்மதிப்பும் அதிலிருந்து பிறக்கும் உரிமையுணர்ச்சியும் இவர் கடவுளுடன் கொண்ட விசேஷ உறவின் உணர்ச்சியினின்று எழுந்தவையாகும். கடவுளோடு நெருங்கிப் பூரணமாய் ஒன்றுபடும் இவ்வுரிமை இவருடைய வாழ்க்கை முழுவதிலும் காணப்படுகிறது. பிற்காலக் கிறிஸ்தவர்கள் மட்டும்