பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமலிங்க தமிபிரான்

68

இராமன் விளைவு

வந்தது. இச்சாகாக் கலைக்குக் கருவூலங்கள் திருமந்திரமும் ஔவை குறளுமாகும். தாயுமானார், மாணிக்கவாசகர் போன்றார் சாகா நிலையைப் பற்றிப் பேசியதோடன்றி அடைந்தும் காட்டினார்கள். அந்தச் சித்தர் கூட்டத்தின் வழிவந்தவர் வள்ளலார். திருவருட்பாவில் ஆறாந்திருமுறையில் 'அருட்பெருஞ்சோதி அகவல்' உயிர்நிலையாகும். அதில் சாகாக்கலையைப் பற்றிய குறிப்புக்கள் அதிகமுண்டு. வள்ளல் பெற்ற அடைவு அல்லது பெரும்பேறு சாகா நிலையாகும்.

சித்தர் குழுவைப் பின்பற்றிச் செல்லும் அடிகளின் தத்துவக் கருத்துக்கள் எளிய சொற்களில் கூறினாலும் ஆழ்ந்த கருத்துக்கள் அமைந்துள்ளன. இறைவனைத் தலைவனாக்கித் தாம் தலைவியாக அமைந்து பாடும் பாட்டுக்களும் அடிகளாற் பாடப் பெற்றுள்ளன. புராணக் கருத்துக்களுக்கு அடிகள் கொடுக்கும் விளக்கம் இவர் அனுபவத்தோடு கலந்த ஆராய்ச்சி அறிவினை நமக்கு வெளிப்படுத்துகின்றது. சமயக் கருத்துக்களை அள்ளிப் பொழியும் அடிகளின் பாக்களிலே கவிதையும் தலைநிமிர்ந்து நிற்கின்றது. கற்போர் உள்ளமுருகும் வண்ணம் பாடும் வன்மை அடிகள்பால் இயற்கையிலேயே காணப்படுகிறது. எளிய சொற்களால் அமைந்துள்ளன இவர் பாக்கள்.

புலவர் சபாபதி முதலியாரின் வேண்டுகோட்படி அடிகளார் மனுமுறை கண்ட வாசகம் என்னும் அரிய உரைநடை நூலைச் செய்துளார். இந்நூல் இவர் தம்தர்க்க அறிவினைக் காட்டுவதோடு மொழி வளத்தினையும் காட்டுகிறது. எனவே, அடிகளை உயர்ந்த உரைநடையாசிரியராகவும் அருட்பெருங் கவிஞராகவும் கொள்ளலாம். கொன்னூர் ஐயாசாமி முதலியாரவர்களின் விருப்பப்படி தொண்டைமண்டல சதகத்தைப் பார்வையிட்டு வெளியிட்டார். 'ஒழிவிலொடுக்கம்' என்னும் நூலைப் பார்வையிட்டு, அதன் முதற்பாட்டிற்கு அரியதொரு விரிவுரை எழுதி வெளியிட்டார்.

வள்ளற் பெருமான் இந்நிலவுலகில் ஐம்பது ஆண்டும் ஐந்து திங்களும் வாழ்ந்தார். கடைசி மூன்று மாதம் 1874-ல் மோனம் வகித்தார். பின்னர்ச் சித்திவளாகத்தில் ஒரு சிறு குடிலில் திருக்காப்பிட்டுக் கொண்டார். பார்க்க: திருவருட்பா. சி. இ.

இராமலிங்கத் தம்பிரான் : இவரைப் புலிக்குட்டி என்னும் பட்டத்துடன் அழைப்பதுண்டு. ஆசுகவி துறைசைச் சுப்பிரமணிய தேசிகர் காலத்திலே (19ஆம் நூற்.இறுதி) இருந்தவர்.

இராமன் அயோத்தியை ஆண்ட தசரதன் மகன். தன் தந்தையாகிய தசரதன் மொழியைக் காப்பாற்றக் கைகேசியின் சொற்படி தன் மனைவி சீதையுடனும் தன் தம்பி இலக்குமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் காட்டிலே துறவுக் கோலத்துடன் வாழ்ந்தான். சீதையைக் கவர்ந்துசென்ற இராவணனை, வாலியின் தம்பியாகிய சுக்கிரீவன், அநுமான் முதலிய வானர வீரர்களுடன் இலங்கைக்குச் சென்று கொன்றான். கங்கையில் ஓடம்விட்ட வேடனாகிய குகனையும் தோழனாக ஏற்றான். (பார்க்க: இராமாயணம்). இராமன் என்பதற்கு மனத்துக்கினியவன் என்று பொருள். பரசுராமன், பலராமன் என்பவனையும் இராமன் என்று சொல்வதுண்டு (த. க. பார்க்க).

இராமன் பிள்ளை சீ. வீ. (1858-1922) மலையாள எழுத்தாளர். திருவனந்தபுரத்தில் பிறந்து, அங்கேயே கல்வி பயின்றவர்.

இவர் தம் இளம்பிராயத்திலிருந்தே சுதந்திரச் சிந்தனையாளராகவும் பல

துறைகளிலும் திறம்பட எழுதும் எழுத்தாளராகவும் விளங்கினார். இவரே முதன்முதலில், சர். வால்ட்டர் ஸ்காட்டின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று நாவல்களை மலையாளமொழியில் எழுதியவர். இவர் எழுதிய நூல்களில், மார்த்தாண்ட வர்மா (1891), தர்மராஜா (1913). ராம ராஜ பஹதூர் (1920) குறிப்பிடத்தக்கவை. பிரேமாமிருதம் என்னும் சமூக நாவலும் இவர் எழுதியுள்ளார்; சில பிரகசனங்களும் எழுதியிருக்கிறார். இவர் மலையாள உரைநடை இலக்கியத்திற்குப் பெரிதும் சேவை செய்தவர். எஸ். கே. நா.

இராமன் விளைவு (Raman Effect) : ஒளி கடத்தும் ஊடகங்கள் அவ்வாறு கடத்தும் ஒளியைச் சிதற அடிக்கும் (பார்க்க: ஒளிச் சிதறல்). இத்தகைய சிதறல் நிகழும்போது சில அலை நீள ஒளிகள் மற்றுஞ் சிலவற்றைக் காட்டிலும் அதிகமாகச் சிதறலாமாயினும், படும் ஒளியும் (Incident Light), சிதறொளியும் (Scattered Light) ஒரே தன்மையனவாக இருக்கின்றன. சிதறும் ஒளியானது படும் ஒளியினின்றும் நிறத்தில் (அதாவது அலை நீளத்தில்) மாறுபடுவதில்லை. 1928-ல் வேறொரு வகைச் சிதறலைச் சர். சீ. வீ. இராமன் கண்டுபிடித்தார். இது இராமன் விளைவு என வழங்குகிறது. குறிப்பிட்ட அலை நீளமுள்ள ஒளியை ஒரு திரவத்திற்குள் விழும்படி செய்ததனால் சிதறிய ஒளியில் ஒரு பகுதியின் அலைநீளம் படும் ஒளியின் அலைநீளத்தினின்றும் மாறியிருப்பதை அவர் கண்டார். ஒளியானது திரவ மூலக்கூறுகளுடன் வினைப்பட்டு, அதன் சக்தியில் ஓரளவை மூலக்கூறுகளுக்கு அளிக்கலாம்; அல்லது அவற்றிலிருந்து சக்தியைப் பெறலாம். இவ்வாறு ஒளியின் சக்தி மாறுபடுவதால் இவ்விளைவு தோன்றுகிறது என விளக்கலாம். ஒளியின் அலைநீளம் சக்தியைப் பொறுத்துள்ளது. சக்தி அதிகமானால் அலைநீளம் குறைவாகவும், அது குறைந்தால் அலைநீளம் அதிகமாகவும் இருக்கும். ஆகையால் மூலக்கூறுகளுக்குத் தன் சக்தியை அளித்துச் சிதறும் ஒளியின் அலைநீளம் அதிகமாகும்; மூலக்கூற்றின் சக்தியை ஏற்கும் ஒளியின் அலைநீளம் குறையும். ஆகையால் சிதறலின்போது அதன் அலைநீளத்தில் நிகழும் மாற்றத்தை அளவிட்டு, மூலக்கூற்றின் சக்தி மட்டங்களைக் கணக்கிட்டு விடலாம். சில சமயங்களில் இதை வேறுமுறைகளில் இவ்வளவு எளிதாக அளவிட இயலாது.

திட, திரவ, வாயு என்ற மூன்று நிலைகளில் உள்ள பொருள்களிலும் இராமன் விளைவு நிகழ்கிறது. ஒரு பொருளில் இவ்விளைவைக் காணவேண்டுமாயின், அது ஒளி கடத்தும் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். ரச மின்வில் விளக்கை ஒத்த ஒரு சாதனத்திலிருந்து வரும் குறிப்பிட்ட அலைநீளமுள்ள ஒளியைப் பொருளினுள் செலுத்திச் சரியான கோணங்களில் சிதறும் ஒளியின் நிறமாலை ஆராயப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் நிறமாலையில் சிதறும் ஒளியில் உள்ள வரைகளைத் தவிரச் சில புதுவரைகளும் காணப்படும். இவை இராமன் வரைகள் எனப்படும். இந்த வரைகளின் அமைப்பும், சிதறும் ஒளியின் நிறமாலையின் வரைகளிலிருந்து அவை எவ்வளவு விலகியுள்ளன என்-