பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமனதீச்சுரம்

69

இராமாணம்

பதும் மூலக்கூறு அதிர்வின் சக்தி மட்டங்களைப் பொறுத்து உள்ளன. ஆகையால் ஆராயப்படும். பொருளின் இராமன் வரைகள் அதற்குச் சிறப்பியல்பானவை ஒரு மனிதனின் கைரேகைகளைப்போல் ஒரு பொருளின் இராமன் நிறமாலை அப்பொருளைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. இதனால் பகுப்பு ரசாயன முறைகளில் அளவறி சோதனைகளிலும், பண்பறி சோதனைகளிலும் இராமன் விளைவு முக்கியமானதாக விளங்குகிறது.

இத்தகைய பயன்களைத் தவிர இராமன் விளைவு ஆராய்ச்சிகளால் பௌதிகம் வேறு வகைகளிலும் பயனடைந்துள்ளது. இதை ஆராய்வதால் அணுக்கள் கூடி மூலக்கூறுகளாகும்போதும், மூலக்கூறுகள் கூடிப் படிகங்களாகும்போதும் இவற்றைப் பிணைக்கும் விசைகளின் தன்மை விளங்குகிறது. ஏனெனில் அணுக்களிடையே தொழிற்படும் விசைகளே மூலக்கூறுகளின் அதிர்வு வகைகளை நிருணயிக்கின்றன. இத்துடிப்புக்களின் சக்தியை இராமன் விளைவால் எளிதில் அறிய முடிகிறது. ரசாயனக் கூட்டுக்களில் இராமன் நிறமாலையை ஆராய்ந்து, அதன் பல்வேறு விசை மாறிவிகளை மதிப்பிட்டுக் கூட்டுக்களின் ரசாயன அமைப்பை அறியலாம்.

இதைப்பற்றிய சோதனை முறைகளில் அண்மையில் ஒரு முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. 2,537 ஆங்ஸ்ட்ராம் அலகுகள் அலைநீளமுள்ள ரச அனுநாதக் கதிர்ப்பைக்கொண்டு சோதனைகளைச் செய்யும் முறை இப்போது வழக்கத்தில் உள்ளது. படிக ஆராய்ச்சியில் இம்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இத்தகைய ஆராய்ச்சிகளால் வெளியான உண்மைகளால் படிகங்களில் நிகழும் அணு இயக்கம் பற்றிய பல பழங்கருத்துக்கள் முற்றிலும் பிழையானவை எனத் தெளிவாகியுள்ளன. பார்க்க: திடநிலை. சீ. வீ. இரா.

இராமனதீச்சுரம் தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலத்துக்கு 5 மைலில் உள்ளது. இது இராமன் சிவபிரானை வழிபட்ட இடம். திருஞான சம்பந்தரின் பாடல் பெற்றது. இறைவன் பெயர் : இராமநாதேசுரர். அம்மை பெயர் : கருவார் குழலி.

இராமாசாஸ்திரி (?-1789) பேஷ்வாவான பாலாஜி ராவின் சொந்த அலுவலாளராக இருந்தவர். இவரை ஒருமுறை பாலாஜி ராவ் மிகவும் கண்டித்ததன்பேரில் இவர் காசிக்குச் சென்று கல்வி பயின்றார். அங்கிருந்து திரும்பி வந்ததும் இவர் 1751-ல் மகாராஷ்டிர அரசாங்கத்தில் நீதி அதிகாரியாக நியமனம்பெற்றார். மாதவராவ் என்னும் பேஷ்வாவின் ஆட்சியில் இவர் 'நியாயாதீச 'ராக இருந்தார். இவர் கல்விக்கும், சுதந்திரமான கருத்துக்களுக்கும் பெயர்போனவர். இவர் காலத்தில் மகாராஷ்டிர நாட்டு நீதி நிருவாகம் உயர்நிலையை அடைந்தது. 1773-ல் இரகுநாதராவின் தூண்டுதலின்மேல் நாராயணராவ் என்பவர் கொல்லப்பட்டதால், இரகுநாத ராவிற்குக் கீழ்ப்படிந்து, தாம் பதவி வகிக்க இயலாது என்று நீதிபதிப் பதவியை ராஜிநாமா செய்தார். ஆயினும் தாமே பேஷ்வா வமிசத்தைச் சேர்ந்த சதாசிவ ராவ் என்று நடித்த சுகந்தன் என்னும் பிராமணனை விசாரணை செய்து தண்டிக்க ஒரு நீதிக்குழு இராமா சாஸ்திரியின் தலைமையில் நியமனம் செய்யப்பட்டது. இக்குழுவின் தீர்ப்பின்படி 1776-ல் சுகந்தன் மரண தண்டனை யடைந்தான். 1777-ல் நானா பர்னவிஸ் கேட்டுக் கொண்டதால் இராமா சாஸ்திரி மறுபடியும் வேலையை ஏற்றுக்கொண்டார். கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை இராமா சாஸ்திரி ஆதரித்தார் என்று ஒருசிலர் கூறுவர். இவர் உத்தியோகத்திலிருந்து விலகும் முன்பே 1789-ல் இறந்தார். தே. வெ. ம.

இராமாயணம் : வால்மீகி முனிவர் செய்த இராமாயணமும் வேதவியாசர் செய்த மகா பாரதமும் இதிகாசங்கள் எனப்படும். இவ்விரண்டில் இராமாயணம் வட மொழிக் காவியங்களுக்கெல்லாம் ஆதி காவியம் எனத்தகும் சிறப்பு வாய்ந்தது. நான்மறையால் அறியத்தக்க பரம புருஷன் இராமராக அவதரிக்கவே, நான்மறையும் வால்மீகியின் திருநாவிலிருந்து இராமாயண வடிவம் கொண்டு வந்தது என ஆன்றோர் கூறுவர். வேதத்தின் கருத்தைப் பலரும் அறியும்படி விளக்கிக்காட்டுவதே இராமாயணத்தின் பயன் என்று அந்நூலே கூறுகின்றது.

வேதமும் உபநிஷதமும் உபதேசிக்கும் அறநெறிகள் எல்லாம் பிரவிருத்தி மார்க்கம், நிவிருத்தி மார்க்கம் என்ற இரண்டில் அடங்கும் எனப் பெரியோர் கூறுவர். பிரவிருத்தி மார்க்கம் உலக வாழ்க்கையில் இருந்துகொண்டு, அதற்கேற்ற செயல்களைச் செய்வதையும், நிவிருத்தி மார்க்கம் உலக வாழ்க்கையை அடியோடு துறந்து இருப்பதையும் குறிக்கும். வால்மீகி தாம் இயற்றிய இராமாயணத்தில் பிரவிருத்தி மார்க்கத்தையே வற்புறுத்திக் கூறுகிறார். பிரவிருத்திச் செயல்கள் யாவும் சுயநலத்தைக் கருதியோ, உலகத்தை உய்விக்கும் பொருட்டோ நடைபெறுவன. அவற்றில் முதல் வகையை இராவணனும், இரண்டாவதனை இராமரும் கையாளுகின்றனர். இருவரும் அதிமானுஷர்கள். அருளை இலட்சியமாகக் கொண்ட இராமருடைய செயல்களின் உயர்வு தாழ்வுக்கும். ஆட்சியை இலட்சியமாகக் கொண்ட இராவணனுடைய செயல்களின் உயர்வு தாழ்வுக்கும் சீதையாகிய கற்பரசியே சிறந்த உரைகல் ஆகின்றாள். அவளுக்குக் கணவராக இராமரையும் அவளைக் களவாடுகின்றவனாக இராவணனையும் நாயகப் பிரதி நாயகனாக வைத்துப் பிரவிருத்தி மார்க்கத்தின் இருவகைகளையும், காவியச்சுவையனைத்தும் ததும்பும் வண்ணம் வால்மீகி முனிவர் நன்கு எடுத்துக் கூறுகின்றார். அறம் பொருள் இன்பம் என்னும் பொருள்களில் முதலாவதாகிய அறத்தை இராமரும், பின்னுள்ள பொருள், இன்பங்களை இராவண்னும் தங்கள் இலட்சியமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இராவணன் கடுந் தவம் புரிந்து, தேவர்களையும் தலைமிதித்து நிற்கும் ஆட்சிப்பேற்றை வரமாகப் பெறுகின்றான். இராமரோ தம் வாழ்க்கையையே ஒரு பெருந் தவமாகச் செய்து, அறத்தைக் கடைப்பிடித்து, உலகத்தைக் காப்பதே தம்முடைய வாழ்வின் தனிப்பயனாகக் கருதிச் செயல் புரிகின்றார்.

இது தவிர, இராமாயணமானது தந்தை மகன், கணவன் மனைவி, தமயன் தம்பி, நண்பன் பகைவன், குரு சிஷ்யன், அரசன் குடிகள் போன்ற உலக வாழ்க்கைக்கு இன்றியமையாத உறவுகள் யாவும் தூய அன்பின் நலனாலும் தன்னலத் துறவின் நலனாலும் எவ்வாறு விழுமியனவாகின்றன என்பதை விளக்கிக் காட்டுகிறது.

இராமாயணத்தைப் பகவத்கீதை என்ற தத்துவ நூலுக்குப் பிறப்பிடம் எனவும் கூறலாம். கீதையில் சொல்லப்படும் கருமம், ஞானம், பக்தி ஆகிய மூன்றும் இராமாயணத்தில் உதாரணங்கள் மூலம் விளக்கப்படுகின்றன. கருமத்திற் சிறந்த ஜனகரும். ஞானத்திற்சிறந்த வசிஷ்டர் முதலிய முனிவர்களும், பக்தியிற்சிறந்த குகன், அனுமான், விபீஷணன் முதலியவர்