பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருப்புநிலைக் குறிப்பு

81

இருபருவத் தாவரம்

தைக் குறிக்கும் சொத்துக்கள் எவ்வளவுக்கெவ்வளவு தாவர சொத்தாய் இருக்கின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு மூலதனம் சிதைவுறாமல் இருக்கும், ஒரு குறித்தகால இறுதியில், நிகர ஆஸ்தி அதிகரித்திருக்கின்றது என்றால் மூலதனம் அதிகரித்திருக்கிறது என்று பொருள். புதிய மூலதனம் சேர்க்கப்படாமல், தொடக்கத்தில் இருந்த மூலதனம் அதிகரித்திருக்குமாயின், அம்மூலதனம் எவ்வளவு அதிகரித்துள்ளதோ, அவ்வதிகரிப்பு அனைத்தும், அக்குறித்த கால முடிவுமட்டும் அந்நிலையத்திற்குக் கிடைத்த இலாபத்தைக் காட்டும். ஆஸ்தியை மதிப்பிடுவதில், ஒரு குறிப்பிட்ட முறையைப் பின்பற்றி மதிப்பிடவேண்டும். நிலைத்த சொத்துக்களின் மதிப்பை அவற்றின் அடக்க விலையிலிருந்து தேய்மானத்தைக் (Depreciation) கழித்துக் கணக்கிடவேண்டும். அடக்கவிலையோ அல்லது நடப்பு விலையோ, இவற்றுள் எது குறைவோ அதைக் கொண்டு நடப்பு ஆஸ்திகளை மதிப்பிடவேண்டும். இவைகளை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மதிப்பிடின் மூலதனத்தையும் இலாபத்தையும் தவறாக அளவிட நேரும். இருப்புநிலைக் குறிப்பின் கடன் தலைப்பின்கீழ்க் காட்டியுள்ளவைகளின் மொத்தத்தை, ஆஸ்தித் தலைப்பின்கீழ்க் காட்டியுள்ளவைகளின் மொத்தத்தோடு சரிக்கட்டுவதற்கு, மூலதனக் கணக்குப் பாக்கிகளையும், இலாப நஷ்டக் கணக்குப் பாக்கிகளையும், கடன் தலைப்பின்கீழ் வருவனவற்றோடு சேர்க்கவேண்டும். ஆதலின் இருப்புநிலைக் குறிப்பானது ஒரு வியாபாரி கையாளும் பல சிட்டாக்களின் பாக்கிகளைத் தொகுத்து, ஆஸ்திகளையும் செலவு பாக்கிகளையும் ஒரு புறமாகவும், கடன் பொறுப்புக்களையும் வரவு பாக்கிகளையும் மற்றொரு புறமாகவும் பாகுபடுத்திச் சமன்படுத்தி வகுக்கப்பட்ட ஒரு திரட்டு என்று விளக்கம் கூறலாம்.

இலாப நஷ்டக் கணக்கு: ஒவ்வொரு வாணிக நிலையமும் குறிப்பிட்ட ஒரு கால அளவில் ஏற்பட்டிருக்கக்கூடிய மொத்த இலாப நஷ்டத்தையோ, அல்லது நிகர லாப நஷ்டத்தையோ ஆராய்ந்தறியும் பொருட்டு இலாப நஷ்டக் கணக்குத் தயாரிப்பது வழக்கம். இது இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஒன்று வியாபாரக் கணக்கு ; மற்றொன்று இலாப நஷ்டக் கணக்கு. ஒரு பொருளின் விற்பனை விலைக்கும், அதன் தொழிற்சாலை உற்பத்திச் செலவு உட்பட வரும் அடக்க விலைக்கும் உள்ள வித்தியாசமே, மொத்த இலாபம் அல்லது நஷ்டமாகும். மொத்த இலாபம் அல்லது நஷ்டம் இலாப நஷ்டப் பிரிவின் கீழ்க் கொண்டுவரப்படும். வியாபாரப் போக்கில் ஏற்படும் பலவகையான செலவுகளும், அப்போக்கில் கிடைக்கும் ஏனைய வருமானமும் இலாப நஷ்டப் பிரிவிற் சேர்க்கப்படும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் மொத்த இலாபமும் வருமானங்களும் சேர்ந்த தொகை, அச்சமயத்தில் உண்டான மொத்தச் செலவைக் காட்டிலும் மேற்படின், அம்மேற்பட்ட தொகையே நிகர இலாபமாகும். நாம் எடுத்துக்கொண்ட ஒரு கால அளவிற்கு உரிய எல்லா வருமானங்களையும் செலவுகளையும் தவறாது கணக்கிட்டாலன்றி, அக்கால அளவில் ஏற்பட்ட சரியான இலாபத்தையோ நஷ்டத்தையோ கண்டுபிடிக்க இயலாது. அதாவது, கைக்கு வந்த வருமானங்களையும், கைவிட்டுச் செய்த செலவுகளையும் மட்டுமன்றி, கைக்கு வரவேண்டியுள்ள வருமானங்களையும், செலுத்த வேண்டியுள்ள செலவுகளையும் இலாப நஷ்டக் கணக்கில் சேர்ப்பது அவசியம். சுருக்கமரகக் கூறுவோமானால், பிழையற்ற இலாப நஷ்ட மிச்சத்தை நாம் அடையவேண்டுமாயின் நமக்கு வரவேண்டியதும், நாம் கொடுக்க வேண்டியதுமான எல்லா வரவு செலவுகளும் கணக்கிற்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஜீ. சௌ

இருபருவத் தாவரம் : தாவரங்கள் உயிர் வாழ்ந்திருக்கும் கால அளவிற்கேற்ப ஒருபருவத் தாவரம் (Annuals), இருபருவத் தாவரம் (Biennials), பலபருவத் தாவரம் (Perennials), பலவாண்டுத் தாவரம் (Multiennials) எனப் பகுக்கப்படுகின்றன. கீரைத்தண்டு, வெண்டை, கடுகு, கொள்ளு பயறு, நெல், கேழ்வரகு, தும்பை போன்றவை முளைத்து, விரைவாக வளர்ந்து, பூத்துக் காய்த்து விதைகளை யுண்டாக்கி வீட்டு ஓராண்டுக்குள்ளேயே பட்டுப்போய்விடுகின்றன. இவை ஒருபருவத் தாவரங்கள். தென்னை, மா, எலுமிச்சைபோன்ற மரங்களும், குற்றுச் செடிகளும் முளைத்துச் சில ஆண்டுகள் வளர்ந்து, முதிர்ச்சியுற்றுப் பிறகு பூத்துக் காய்த்து விதையுண்டாக்கத் தொடங்கும். அப்பால் ஆண்டுதோறும் வளர்ந்து வளர்ந்து ஒரு முறையோ இரு முறையோ உரிய பருவந்தோறும் பூத்துக் காய்த்து விதை கொடுத்துக் கொண்டே பல ஆண்டுகள் வாழும். இவை பலபருவத் தாவரங்கள். மரம், குற்றுமரம், புதர் ஆகியவை யெல்லாம் இவ்வகையின, பூண்டுகளிலும் பலபருவத் தாவரங்களுண்டு. ஓரிலைத்தாமரை (அயொனிடியம்), பற்படகம் (மொல்லுகோ), மூக்கிரட்டை (போயர்ஹாவியா) பருப்புக்கீரை (போர்ட்டுலக்கா) இஞ்சி, மஞ்சள், புல் போன்றவை ஆண்டுதோறும் விடும் கிளைகள், விதை உண்டானவுடன் மடிந்துபோகும். ஆயினும் தரையின் கீழே வேர்த்தண்டும் (Rootstock), மட்டத்தண்டும். கிழங்கும் நிலைத்திருந்து, அடுத்த ஆண்டு புதுக்கிளைகளைவிடும். இவை பலபருவ பூண்டுகள், நார்க்கற்றாழை (அகேவ்). தாளி அல்லது குடைப்பனை (Corypha), சிலவகை மூங்கில்கள் பல ஆண்டுகள் பூவாமலே வாழ்ந்திருந்து, கடைசியாகப் பெரிய பூக்கொத்து ஒன்றை விடுத்து, ஆயிரக்கணக்கான விதைகளை உண்டாக்கிவிட்டு மடிந்துபோகும். இவை பலவாண்டுத் தாவரங்கள் எனப்படும்.

முள்ளங்கி, முட்டைக்கோசு, டர்னிப்பு, அக்காரக் கிழங்கு (பீட்டு), மஞ்சள் முள்ளங்கி (காரட்டு) முதலிய பூண்டுகள் இருபருவச் செடிகள் எனப்படும். இவற்றை ஈராண்டுச் செடிகள் என்றும் சொல்வதுண்டு. இவற்றில், முதல் ஆண்டில் அல்லது பருவத்தில் செடி முளைத்து வளர்ந்து, வேரும் தண்டும் இலைகளும் தோன்றும். இலைகளில் உண்டாகும் உணவுப் பொருள் மா, சர்க்கரை முதலிய வடிவில் வேரிலோ கிழங்கிலோ, தண்டின் வேறு பாகங்களிலோ, இலைகளிலோ சேமித்து வைக்கப்படும். இந்தச் சேமவுறுப்புக்கள் பொருள் நிறைந்திருப்பதால் பருத்துத் தோன்றும். செடி அடுத்த ஆண்டிலே அல்லது பருவத்திலே, சேமித்துவைத்த உணவுப்பொருளைப் பயன்படுத்திக் கொண்டு, பூக்கொத்துக்களையும், அவற்றிலிருந்து விதைகளையும் உண்டாக்கும். பிறகு செடி செத்துப் போகும். சேர்த்து வைத்திருந்த பொருள் செலவாகிப் போகவே, சேமிப்பு உறுப்பும் சிறுத்து, வெறும் பைபோலச் சுருங்கிச் சாரமற்றுச் சக்கைபோலாகிவிடும். அதனால்தான் நாம் காய்கறியாகப் பயன்படுத்த வேண்டுமானால், முள்ளங்கி முதலியவற்றை அவை பூக்கத் தொடங்குமுன்பே பிடுங்கிவிடுகிறோம். ஆகவே இருபருவத்தாவரங்களின் வாழ்க்கையில் இரண்டு காலங்கள் காண்கின்றன. ஒன்று, முந்தியது,

11