பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் - 103

நெல்லையப்பர். அந்த ஞாபகார்த்தமாக அன்வர்டிகான் ஒரு லிங்கப் பிரதிஷ்டை செய்திருக்கிறான். அன்வர்டிகானால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர், இன்று நல்ல தமிழில் அனவரத நாதனாகவே விளங்குகிறார் கோயிலின் தென்கிழக்கு மூலையில்.

இந்த நெல்லையப்பர் கோயில், ஐந்து கோபுரங்களோடு விளங்கும் ஒரு பெரிய கோயில். ஊருக்கு நடுவில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட ஒரு விரிந்த இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இறைவன் சந்நிதிக் கோபுரத்தை விட, இறைவி சந்நிதிக் கோபுரமே அழகு வாய்ந்தது. கோயிலுள் இருக்கும் பொற்றாமரைக் கரையில் நின்று பார்த்தால் அதன் காம்பீர்யம் தெரியும். இக்கோயிலின் சிற்பச் சிறப்புக்கள் எல்லாம் பிரசித்தம். நாயக்கர் காலச் சிலா வடிவங்கள் அனந்தம். மகா மண்டபத்திலே வீரபத்திரன், அர்ச்சுனன், கர்ணன் முதலியோர் சந்நிதி வாயிலையே அணி செய்கின்றனர். ஆண்மைக்கு எடுத்துக்காட்டாக வீரபத்திரன் சிலை அமைந்திருக்கிறது. பெண்மைக்கு எடுத்துக்காட்டாகக் குழந்தையை ஏந்தி நிற்கும் தாயொருத்தி ஒரு துணை அலங்கரிக்கிறாள்.

இக்கோயிலில் உள்ள கற்சிலைகளைவிடச் செப்புச் சிலைகள் மிக மிக அழகானவை. இங்குள்ள நடராஜரும் சிவகாமியும் உருவிலே பெரியவர்கள். ஏன்? திருவிலேயும் பெரியவர்கள்தான். அவர்கள் இருக்குமிடம் பெரிய சபை, கிட்டத்தட்ட ஆறு அடி உயரத்திலே நடராஜர் என்றால் ஐந்து அடி உயரத்திலே சிவகாமி. இருவரும் இருக்க வேண்டியது, தலத்துக்கே சிறப்பான தாமிர சபையில். ஆனால் எடுக்க வைக்க இருக்கும் சிரமம் கருதித் தனிக் கோயிலிலே மூல மூர்த்திகளாகவே இவர்கள் செப்புச் சிலை வடிவில் இருக்கிறார்கள். விரித்த செஞ்சடையோடு ஆடவில்லை இந்த நடராஜர். பாண்டிய மன்னர்கள் வடித்த நடராஜர் சிலாவடிவங்கள் எல்லாவற்றிலுமே கட்டி முடித்த சடைதான். இன்னும் ஓர் அதிசயம் இக்கோயிலிலே. வேணுவனநாதனின் கருவறையை அடுத்த வட பக்கத்திலே நெல்லைக் கோவிந்தர் நன்றாகக் காலை நீட்டிப் படுத்திருக்கிறார். அவர் பக்கத்திலே கரகம் ஏந்திய கையராய் மகாவிஷ்ணு நின்று கொண்டிருக்கிறார். தங்கையை மணம் முடித்துக் கொடுக்கும்போது தாரை வார்த்துக் கொடுக்க வந்த அவசரம் போலும். நல்ல அழகான வடிவம், இந்த நெல்லை கோவிந்தரின் செப்புச்சிலை. இன்னும் ஆறுமுகனுக்கு ஒரு பெரிய சந்நிதி. அவனைச் சுற்றி வந்து ஆறுமுகங்களையுமே கண்டு களிக்க வசதி செய்திருக்கிறார்கள் நிர்வாகிகள்.