பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 127

முடியவில்லை. “இப்படி வாய்க்காலில் கிடந்தால் சிலை அழிந்து போகுமே” என்று விவாதம் செய்து ஒரு வழியாக அவர்களுடைய சம்மதத்தைப் பெற்று, பிரும்மாவை அழைத்துக்கொண்டு தஞ்சை அரண்மனையில் சரஸ்வதி மகாலுக்கு அருகில் பாழடைந்து கிடந்த மண்டபத்தில் பத்திரமாக ஓர் ஒதுக்கான இடத்தில் அவரை அமர்த்தி வைத்தார்கள். இந்த வரலாற்று வேடிக்கை நிறைந்த சம்பவம் அப்படியே காலப்போக்கில் மங்கி மறைந்து போயிருக்க வேண்டும்.

ஆனால், அன்றைய அதிகாரக் கூட்டத்துக்குள் அரசாங்க அதிகாரி என்ற போர்வைக்குள் ஒரு கலைஞன் ஒளிந்திருந்தான். சிற்பியின் உளி பட்டதும் கல்லுக்குள் கிடந்த உருவம் வெளி வருவதுபோல, இந்தச் சம்பவம் அதிகாரப் போர்வைக்குள்ளே கிடந்த கலைஞனை வெளிக் கொணர்ந்தது. இந்தத் தமிழகத்தில்தான் எத்தனை எத்தனை அழகிய சிலைகள் கேட்பாரற்றுப் பார்ப்பாரற்று தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் சிந்திச் சிதறிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் பக்குவமாகக் கொண்டு வந்து இந்த அரண்மனைக்குள்ளே சேர்த்துவிட்டால்...! இப்படி இழையோடியது அந்தக் கலையுள்ளம். கலையும் அதிகாரமும் கலந்தன. எங்கெங்கோ கிடந்த சிற்பக் கலை வடிவான சிலைகள் எல்லாம் அங்கங்கு இருந்து வந்து சேர்ந்தன. ஒவ்வொன்றையும் அன்புடன் வரவேற்று அன்னை போல் நெய் நீராட்டி, இங்குத் தங்கு தங்கு என்று உபசரித்து, மணியான பீடத்தில் அமர்த்தி வைத்தார் அந்தக் கலைஞர். அவர்தான் கலைமணி தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள். கலைகளைப் பற்றியும், சிறப்பாக தஞ்சைக் கலைக்கூடச் சிற்பங்களைப் பற்றியும் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே என்ற எண்ணமுடையவர். அத்தகைய கலைமணியின் கைவண்ணம் தோய்ந்து அங்கு வந்தெய்திய சிலைகளெல்லாம் புதிய பொலிவு பெற்றன. புதிய விளக்கம் பெற்றன. புதிய வாழ்வு பெற்றன. சிலைத் தெய்வம் எல்லாம் கலைத் தெய்வமாயின. எல்லாரும் கண்டு களித்துக் கண் பெற்ற பயன் பெறுதற்குத் தக்க முறையில், அத்தெய்வங்கள் எல்லாம் வெளிவந்து காட்சி கொடுக்கிறார்கள். ஆனால் அன்று 1951 ஆம் ஆண்டிற்கு முன்னால் ஆயிரக்கணக்கில் செலவு செய்து காடு மேடெல்லாம் இரவு பகலாக அலைந்தாலும் அவர்கள் தரிசனம் சித்திக்குமா? நாம் அலைந்துபட வேண்டிய அத்தனைத் துன்பத்தையும் கலைமணி அவர்கள் அன்றே நமக்காக அனுபவித்துவிட்டார்கள். கலைக்கூடத்தில் காட்சி தருகின்ற தெய்வங்கள் என்ன சாமானியமாக வருகிறோம் என்றா சொன்னார்கள்? எத்தனை பேர் வருந்தி அழைக்க வேண்டியிருந்தது.