பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

அந்தப் பிள்ளையாண்டான்தான் வெள்ளகால் எண்பதாண்டு விழாக் குழுவின் காரியதரிசியான திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான். ஐயரவர்கள் வாய் மணக்கக் கூறிய தம்பி என்பதைப் பிற்காலத்தில் தமது புனைப்பெயராகக் கொண்டு எத்தனையோ கட்டுரைகள், கவிதைகளை தொ.மு.பா எழுதியுள்ளார்.

திரு. தொண்டைமான் வருமானத்துறையில் வருமானச் சோதனையாளராகச் சேர்ந்தார். படிப்படியாக மேலேறி, இந்திய நிர்வாகப் பணியாளர்களுள் ஒருவராகி மாவட்டக் கலெக்டர் வரை உயர்ந்து ஓய்வு பெற்றார்.

இவர் பாட்டனார் சுவையான சிறு பிரபந்தங்களையும் வண்ணக் கவிகள் பலவற்றையும் தந்தவர். இவர் தந்தையாரோ வண்ணக் கலவைகளால் மாந்தரை மகிழ்விக்கும் ஓவியம் பல படைத்தவர். இவருக்குக் குருவாகக் கிடைத்த ரசிகமணி டிகேசி ரஸாநுபவ மேதை என்பதை யாரே அறியாதார்? இந்த முப்பெருந் தொடர்பே பாஸ்கரத் தொண்டைமானை வளமாக்கியது என்று சொன்னால் அது மெய்யேதான்.

கலையும் தமிழும் தொ.மு.பாவுக்கு இரு கண்கள். தமிழ் வழியே கலையைக் காண்பார், துய்ப்பார், மனம் பறிகொடுத்து நிற்பார். தமிழை, தமிழ்க் கவியை ரசிப்பார், சுவைப்பார். இரண்டையும் பற்றித் தெளிவாகவும் கவர்ச்சியாகவும் பேசுவார், எழுதவும் எழுதுவார்.

இவருக்கு வாய்த்த பேறு இரண்டு. ஒன்று இவர் தமிழனாய்ப் பிறந்தது, மற்றொன்று இவர் முன்னோர்கள் நெல்லைக்குக் குடியேறியது. இல்லாவிட்டால் ரசிமகமணி என்று தமிழ் கூறும் நல்லுலகம் எல்லாம் ஒருமுகமாய்ப் பாராட்டும் டிகேசியின் உறவு இவருக்குக் கிட்டியிருக்குமா? அவர் உறவின்றி இவர் தமிழோடு ஒட்டி உறவாடி இப்படி எல்லாம் விளையாடத்தான் முடியுமா?

மகாத்மா காந்தியடிகளுக்குச் சத்தியமும் அஹிம்சையும்போல இவருக்குக் கலையும் தமிழும். காந்தியடிகள் கூறுவார், தமக்குச் சத்தியந்தான் லட்சியம், அகிம்சை அச்சத்தியத்தை அடைய வாய்த்த வழிதான் என்று. ஆனால் அத்துடன் விட்டுவிட மாட்டார். லட்சியம் எவ்வளவுக்கு விழுமியதோ அவ்வளவுக்கு, லட்சியத்தை அடைய மேற்கொள்ளும் வழியும் விழுமியதாக இருக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்துவார். அப்படித்தான் தொண்டைமானுக்குக் கலையும் தமிழும். கலை இவர் லட்சியம். கலையைக் கண்டு துய்க்கவும்,