பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 62 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

பழமைக்கும் புதுமைக்கும் பாலமாகத் திகழ்ந்த பண்புள்ள தமிழ்க் கலைஞர் பாஸ்கரன். -

பேச்சு, எழுத்து ஆகியவற்றுடன் சிற்பம், சித்திரம், கட்டிடக்கலை, புகைப்படக் கலை ஆகியவற்றில் எல்லாம் அவருக்கு மிகுந்த பிரேமை.

அது யுத்தகாலம். தமிழ் இலக்கிய உலகத்தில் சி.என். அண்ணாதுரையும், அவரது திராவிட இயக்கத்தாரும் கம்பனோடு போர் தொடுத்த காலம்.

அப்பொழுதுதான் கம்பரசம், தீபரவட்டும் போன்ற நூல்களை சி.என்.ஏ. எழுதிய காலம். அப்பொழுது பாஸ்கரன் அவர்கள் அரசாங்க அதிகாரியாக இருந்து கொண்டே, கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்த்தார்.

சா. கணேசன் அவர்களுடன் தோளோடு தோள் நின்று, ஆண்டுதோறும் காரைக்குடியில் கம்பன் விழாவை நடத்தி வரத் தொடங்கினார். தமது இறுதி மூச்சு உள்ள அளவும் அவர் கம்பன் காதலராகவே இருந்துவந்தார்.

இன்றைய தலைமுறையிடையே கம்பன் புகழ் பரப்ப ஒரு மகத்தான இயக்கம் கண்டு அதனை நெஞ்சு உறதியோடும், ஆழ்ந்து அகன்ற தமிழ் உறவோடும், ரஸ்னையோடும், பண்பாட்டோடும் வழிநடத்தி தமிழ் மக்களின் நன்றி அறிதலுக்குப் பாத்திரமான தமிழ்த்தாயின் நற்றவப் புதல்வன், பாஸ்கரன்.

பாஸ்கரன் அவர்கள் நல்ல கவியை, பாவமும், உருவமும், தாளமும் லயமும் செறிந்த கலையை, எங்கிருந்தாலும் இனம் கண்டு எல்லோருக்கும் தெளிவாக எடுத்துரைக்க வல்லவர். கவிச்சக்கர வர்த்தி கம்பனிலிருந்து கவிமணி தேசிக விநாயகம்பிள்ளைவரை கற்றுத் தேறியவர் பாஸ்கரன். வள்ளுவனின் அறநெறி முதல், கிருஷ்ணாபுரம் சிற்பங்களின் கலைக்கோலம் வரையில் கவினுற விளக்கக் கூடியவர் பாஸ்கரன். நந்திக்கலம்பகம் முதல் அப்பரடிகளின் தேவாரம் வரை நாவினிக்கப் பேசக் கூடியவர் பாஸ்கரன்.

அவரது பேச்சிலும் எழுத்திலும் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு எல்லாம் வெகு நயமாக இருக்கும். எதாவது மேற்கோள் அல்லது நிகழ்ச்சி வருணனையுடன் துவங்கி, சொல்ல வந்த பொருளை வெகு ரஸ்மாக மனதில் பதிய வைக்கும் திறன் பெற்றவர் அவர்.