பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

கிராமத்துக்கு தாசில்தார் வருவாரல்லவா? அதுமாதிரி இருந்தார்

அப்போ. -

ரசிகமணி டிகேசி அவர்களுடைய பரம சீடர்களில் இவரும் ஒருவர். ஆனால் டிகேசிக்கும் இவருக்கு அநேக வகையில் வித்தியாசம் கண்டிருக்கிறேன். டிகேசி சிவப்பு, இவர் கருப்பு என்ற வித்தியாசத்தைச் சொல்லவில்லை நான்.

உதாரணமாக டிகேசி பாடல்களைப் பாடித்தான் காட்டுவார். இவர் எதுகை மோனைகள் தொனிக்க, வசனம் போலத்தான் சொல்லுவார்.

டிகேசி சிலைகளை அணுகும்போது பாவத்துக்குத்தான் முதல் இடம் கொடுப்பார். இவர் பக்திக்காகவும், சிற்ப நுணுக்கங்களுக்கும் முதல் இடம் தருவார். தன் வாழ்நாள் பூராவும் சிலைகளைப் பற்றியே தமிழர்களுக்கு எழுதுவதில் பொழுதைக் கழித்தார்.

மேடையில் சரளமாகப் பேசுவார், எழுத்து நடையும் அப்படியே.

அதிகாலையில் எழுந்துவிடும் பழக்கம் உண்டு. இந்த நேரம் தான் எழுதுகிறதுக்கு சொகம் என்று சொல்லுவார்.

வீடுகளுக்கு அருமையாக பெயர் வைப்பதில் மன்னன். தன்னுடைய இரண்டு வீடுகளுக்கும் கீழ்க்கண்டவாறு பெயர் வைத்திருந்தார். கூத்தர் குடில், சித்திரக் கூடம்.

பட்டு விசிறி மடிப்பு அங்கவஸ்திரத்தைக் கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொள்வதில் விருப்பம்.

கம்பை ஊன்ற அவசியம் இல்லாதுபோனாலும் சந்தனக் கம்பில் வேலைப்பாடுகள் அமைந்த கைத்தடியை சதா தன்னோடு வைத்துக் கொள்வதில் பிரியம்.

காலர் இல்லாத வெண்ணிற முழுக்கைச் சட்டை சட்டையின் திறப்பில் மேலிருந்து கீழ்வரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளும்படியான பித்தான்கள். மல்பீஸ் ஒற்றைத்தட்டு வேஷ்டி, செழுமையான கருத்த மேனி, தடித்த கண்ணாடி, வெண்மையான அசல் பற்கள். திருநீறும் குங்குமமும் அணிந்த நெற்றி. பக்க வகிடு எடுத்த சுருண்ட கிராப். மனம் திறந்த குலுங்கும் சிரிப்பு.