பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பாஸ்கர தரிசனம் —–

சிந்தனா

சிறுவயது முதற்கொண்டே எனக்குக் கோயில், குளம் இவற்றிலெல்லாம் மிக்க ஈடுபாடு உண்டு. ஏதோ, நல்ல பக்தியில் திளைக்கும் குடும்பத்தில் பிறந்தவனாகையால் இப்பண்பு என்னோடு சிறிது ஒட்டிக் கொண்டிருந்ததில் ஆச்சரியப்படுவதற்கில்லை. கோயில்களைப் பற்றியக் கட்டுரைகளைக் கண்டாலே மிக்க ஆர்வமுடன் படிப்பேன். சமயம் வாய்க்கும்போதெல்லாம் தலங்களைக் கண்டு தரிசிப்பதோடு, கோயில்களிலுள்ள கலைச் செல்வங்களைப் பற்றியும் நுணுகி ஆராய்வேன். கல் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வடிவங்களுக்கு விளக்கம் தேடிக் கண்டுபிடித்துவிட்டால் எனக்குத் தலைகால் தெரியாது. நண்பர்களிட மெல்லாம் இதைப் பற்றிச் சொல்லிச் சொல்லிப் பெருமையடித்துக் கொள்வேன். கோயில்களைப் பற்றி நான் கண்டதையும் கேட்டதையும் எழுதி அவர்களிடையே சுற்றுலா கூடச் செல்வதுண்டு.

கோயில்களைக் குறித்துக் கட்டுரை எழுதுவதிலே எனக்கு நன்கு அறிமுகமானவர்கள் உயர்திரு. எம்.கே. ரங்கசாமி ஐயங்கார், உயர்திரு. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஆகியோர்தான். இவ்விருவருடைய எழுத்தோவியங்கள்தான் எனக்குக் காணக் கிடைத்தனவே ஒழிய அவர்களைப் பற்றிய வாழ்க்கை விவரங்கள் நான் அறியாதவையே. அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கூட எனக்குத் தெரியாது.

தொடர்ந்து படித்து வந்ததில் முன்னவரது கட்டுரைகளே எண்ணிக்கையில் அதிகமாகிக் கொண்டு வந்தன. பின்னவரது கட்டுரைகளோ பெரும்பாலும் ஆண்டு மலர்களிலோ அல்லது சிறப்பு மலர்களிலோதான் காணக் கிடைத்தன. என்றாலும் பின்னவரது கட்டுரைகளிலே ஏதோ ஒருவிதக் கவர்ச்சி இருப்பதை மட்டும்