பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 173

என்னால் உணர முடிந்தது. இந்த உணர்வு அவரைப் பற்றி அறிவதில் ஆர்வத்தை வளர்த்தது.

அப்போதெல்லாம் இலங்கை தொழிற்கட்சித் தலைவர் உயர்திரு. தொண்டைமான் அவர்களைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் நிறைய வரக் கண்டிருக்கிறேன். அவரும், இந்தத் தல வரலாறு எழுதுகின்ற அறிஞரும் ஒருவர்தானா? என்ற ஐயம் கூட எனக்கு ஏற்பட்டதுண்டு. ஆனால், பின்னர் ஆனந்தவிகடன் தீபாவளி மலரொன்றில் இலக்கிய மேடை என்ற பகுதியில் வெளிவந்த உயர்திரு தொ.மு.பாஸ்கரத் தொண்டமான் அவர்களது புகைப்படம் என்னுடைய ஐயத்தைப் போக்கிவிட்டது. இருவரும் ஒருவரல்லர் என்பதை நன்கு விளங்கிக் கொண்டேன். ஆனாலும் அவர் என்ன வேலை பார்க்கிறார் என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருந்து வந்தது. நீண்ட நாட்களாக விடை தேடினேன். கிடைக்கவில்லை.

| வட ஆர்க்காடு மாவட்டத்தில், குடியேற்றம் தாலுகா அலுவலகத்தில் வேலை பார்க்க எனக்கு உத்தரவு வந்தது. 16.455 அன்று காலை வேலையேற்க வேண்டி குடியேற்றத்து அலுவலகத்தில் நுழையும்போதே என் கண்களைக் கவர்ந்தது என்.ஜி.ஓவினர் மாநாட்டு விளம்பரம். நெடுநாட்களாக இவர் யார் என்ற கேட்டுக் கொண்டிருந்தேனே அந்தக் கேள்விக்கு விடையிருந்தது அந்த விளம்பரத்தில். உயர்திரு தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், M.A. Personal Assistant to the Collector of Tanjore என்று அதில் இருந்தது. எனக்கு ஒரே மகிழ்ச்சி. அந்த மகிழ்வின் நிறைவிலேயே அன்று நான் வேலையேற்றேன்.

பிறகு கன்னித் தமிழ்ப் பாடும் கவிஞர் திருக்கூட்டம் என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வந்திருந்த அவரது புகைப்படமும், யார் நமக்கு வழிகாட்டி என்ற தலைப்பில் இரவீந்திரரின் அருமையான கவிதையொன்றைக் கவிதை வடிவிலே தமிழாக்கம் செய்திருந்த அவரது நேர்த்தியும் அவரை ஒரு பெருங்கவிஞர் என்று எடுத்துக்காட்டின.

சில நாட்கள் சென்றன. என்னைத் திருப்பத்துருக்கு மாற்றினார்கள். அதன் பின்னர் வெளிவந்தது ஒரு அரசாங்க நியமனம். என்னுள்ளம் கவர்ந்த உயர்திரு தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்களை வட ஆர்க்காடு மாவட்டத்தின் கலெக்டராக நியமித்திருப்பதாக அதில் கண்டிருந்தது. இதைக் கண்டவுடனே என் உள்ளம் விம்மிப்புடைத்துப் புளகாங்கிதமடைந்தது.