பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 185

என் சொற்கள் அவருடைய உள்ளத்தை மாற்றிவிட்டன. “கவிதையை வெளியிடலாம். என் கவிதைகள் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. பல காணாமலும் போயின. கிடைத்தமட்டும் வெளியிடலாமெனக் கூறினார்கள். தொண்டைமானார்கள் அன்று பகர்ந்த சொற்கள் இன்று அவரின் திருமகளார் இராஜேஸ்வரி அவர்களாலும் மருமகனார் திரு வி.கே.சி. நடராசன் ஐஏஎஸ் அவர்களாலும் நிறைவேறுகிறது.

நம் தொண்டைமானவர்கள் பொருநைத் தண்புனலை நுகர்ந்தவர்கள். நெல்லைத் தென்றலை அனுபவித்தவர்கள். எப்போதும் திக்கெலாம் புகழும் திருநெல்வேலியை நினையாமலிருக்க மாட்டார்கள். ஆதலால் இவர் கவிதை பொருநையைப் போன்று சவியுறத் தெளிந்து தண்ணென்று செல்கிறது. தென்றலைப் போன்று கிளர்ச்சியூட்டுகிறது. சிந்துபூந்துறை போன்று எண்ண எண்ண உவகையூட்டுகிறது.

தொண்டைமானவர்களின் கவிதையை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் சுவை தெரியாது. குற்றால நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு முன்பு சற்று மருட்சி தோன்றுகிறது. ஒருமுறை அவ்வருவிக்குள் புகுந்துவிட்டால் வெளிவரவே மனமிராது. அதுபோலத் தொண்டைமான் கவிதைக்குள் நாம் புகுந்துவிட்டால், நம்முள் தொண்டைமான் கவிதை புகுந்துவிட்டால் நாம் பெறும் இன்பம் அலாதிதான் உள்ளம் ஆனந்தப் படும். கும்மாளம் போடும், இனி உள்ளே நுழைவோம்!

இதுவரை நம் கவிஞர்கள் கோவிலில் இருக்கும் சிற்பங்களை எவ்வெவ்வாறோ சிறப்பித்துப் பேசினார்கள். ஆனால் நம் தொண்டைமானவர்கள் அச்சிற்பங்களை கல்லுக்குள் கனி என்கிறார். நாம் மரத்திலிருக்கும் கனியைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கல்லுக்குள் கனி தெரியாமற் போயிற்று. நம் கலைமணியவர்கள் சங்கீதத்தை நாதக்கனல் என்பார். கற்றுத் தெரிவதுவோ கன்னி தருவதெலாம் என்று இயல்பாக உண்டாகும் காதலைச் சிறப்பித்துப் பேசுகிறார். தென்றலை, தென்றல் சிலுசிலுப்பில் தெய்வ ஒளி கண்டேன்’ என்பார். கவிதையைப் பற்றிச் சொல்லும் போது, ‘கற்ற கவிதையெலாம் கனிந்த கனியலவோ?’ என்று கவிதையின் இலக்கணங்கூறிக் கவிதையைச் சுவைக்கும் முறையையும் விளக்கியுள்ளார்.

மேலே காட்டியவை சில சொற்கள்தாம். அவற்றின் சுவையும் ஆழ்ந்த பொருளையுங் கண்டீர்களா? இங்ஙனம் இவர் கவிதையில் நம்மை மறக்க வைக்கும் பகுதிகள் பல உண்டு.