பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s ” : நம்ம டைரி குறிப்பு

என். சுப்பிரமணியன் (சாந்தி நிகேதன் ஆசிரியர்)

பிள்ளையார் சுழி போட்டுத்தான் எதையும் ஆரம்பிப்பது நம் வழக்கம். எதைக் கொண்டு, எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, என் கைக்கு ஒரு நூல் வந்து சேர்ந்தது. “பிள்ளையார் பட்டிப் பிள்ளையார்” தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய அருமையான நூல். அவர் பெயரால் நடக்கும் நினைவு அறக்கட்டளை வெளியிட்டிருக்கும் அரியக் கலைப் படைப்பு. -

நம்மைப் பற்றிய பாரம்பரியக் கலை உணர்வுகளைப் பற்றித் தமக்கேயுரிய பாணியில் முத்திரை பதித்துச் சென்றவர் அவர். அந்தக் கட்டுரையை முதன்முதலில் (அதாவது 1956 இல்) படிக்கும்போது பிள்ளையார்பட்டிக்குப் போகும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின் போனபோது அவரைப் போன்ற இலக்கிய கர்த்தாக்கள் தங்கள் பேனாவால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்தேன்.

நிழற்படம் பிடித்துக் காண்பிப்பது போல், தன் எழுத்தில் உங்கள் முன் ஒரு காட்சியைக் கொண்டு வர அவரால் முடியும். இது எல்லோருக்கும் எளிதில் முடிகிற காரியம் அல்ல. சிலருடைய எழுத்துக்கு அத்தகைய சக்தியைக் கொடுத்திருக்கிறான் இறைவன்.

கவிதை எப்படி எல்லோருக்கும் புரிவதில்லையோ, அதே போன்றதுதான் கலைகளைப் பற்றிப் பேசுவதும். சிலைகளையும், ஓவியங்களையும் பற்றிப் பேசுவதில் தொண்டைமானுக்கு இணை அவரேதான். மணிக்கணக்கில், நாட்கணக்கில் அவரால் பேச முடியும். தக்க ஆதாரங்களுடன், நுணுக்கமாகப் பேசுவார். ஆங்காங்கே இலக்கியமும் கல்வெட்டுக்களும் ஆதாரமாய் நிற்கும்.