பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 223

மார்களையும் வேண்டிய மட்டும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் தொண்டைமானுடைய இனிய சுபாவமும், யாருடனும் விகற்பமின்றி அன்பு செலுத்துகின்ற பண்பும், அவர்கள் காட்டுகின்ற அன்பையெல்லாம் மதிக்கின்ற பெருந்தன்மையுமே காரணம்.

தமிழ் அறிஞர் முதலியார், ரசிகமணி டி.கே.சி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இம்முவரிடத்தும் அவர்கள் காட்டிய அன்பை நட்பு என்பதைவிட பக்தி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அவர்களைப் பற்றிப் பேசுகின்ற போதெல்லாம் அவர்கள் உள்ளம் பரவசமாகிவிடும்.

‘பிள்ளைவாள்’ என்று நண்பர்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்ட கானுகோ திரு. சங்கரலிங்கம் பிள்ளையவர்களும், ஹிலால் பிரஸ் அதிபர், ஜனாப் ஹமீது மியாகான் அவர்களும் தொண்டைமான் அவர்களுடைய நீண்ட நாளைய நண்பர்கள். இலக்கியத்தின் துணை இல்லாமலே இதயங்கலந்த நட்பு அது. ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த தேவன் அவர்களுக்கு தொண்டைமானிடத்திலே தனித்த ஈடுபாடு. தீபாவளி மலருக்கு தொண்டைமானவர்களுடைய கட்டுரையைக் கேட்டு வாங்கிக் கொண்ட பின்னரே மற்ற வேலையை ஆரம்பிப்பார் என்று கூடச் சொல்லுவார்கள். தேவனும் தொண்டைமானும் பழகிய காலம் சில வருடங்களே என்றாலும் அந்த நட்பிலே ஆழம் அதிகம்தான். கோவை அன்பர்கள் திரு. கண்ணப்பச் செட்டியார் அவர்களுக்கும், வெள்ளக்கிணறு திரு. சுப்பையாக் கவுண்டர் அவர்களுக்கும் தொண்டைமானிடத்திலே அலாதி அன்பு. தொண்டைமானுக்கு வேண்டிய வசதி எல்லாம் செய்து கொடுத்து, ஓய்வு பெற்றபின் தங்கள் ஊரிலேயே நிரந்தரமாகத் தங்கச் செய்துவிடவேண்டும் என்றெல்லாம் கூடத் திட்டம் இட்டார்கள். ஆனால் அதற்குள் இறைவன் இருவரையுமே, அந்த இரு பக்த மணிகளையும் தன் நிழலில் நிரந்தரமாக இருக்க அழைத்துக்கொண்டுவிட்டான்.

நட்பு கனிந்து, சகோதர பாசமாய் மாறிய அன்பர்களிலே, காலஞ்சென்ற ஏ.சி. பால் நாடார் அவர்கள் தொண்டைமானுக்கு முத்த சகோதரர். இருவரும் ஒருவரையொருவர் பிரதர் என்று அழைத்துக் கொள்கிற அழகே தனி மதம் வேறானாலும் கூட, கம்பனிடத்திலே பக்தியும், தேவார திருவாசகத்திலே மிகுந்த ஈடுபாடும் உடையவர்கள். திரு. பால்நாடார் அவர்கள் தம்பால் காட்டிய பரிவையும் பாசத்தையும் இன்றும் நெஞ்சில் வைத்துப் போற்றுகிறார்கள் தொண்டைமான்.