பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

தம்பியர் வரிசையிலே இன்று அக்ரஸ்தானம் வகிப்பவர்கள் திரு. சா. கணேசன். தொண்டைமான் குடும்பத்திலே ஒருவராகி விட்டவர்கள் உண்மையான சகோதரர்களுக்குரிய இலக்கண மரபு வழுவாமல், இருவரும் மோதிக் கொள்வதுமுண்டு. இலக்கியம், கலை விஷயங்களிலே இருவருக்கும் முரண்பட்ட அபிப்பிராயங்களுண்டு. “இரண்டு கற்கண்டுப் பர்வதங்கள் மோதிக்கொண்டால் உதிர்வதும் கற்கண்டுப் பொடிகளாகத் தானே இருக்க முடியும்” என்றார் ஒரு அன்பர். உண்மையான வார்த்தை.

அடுத்து நீதிபதி மகராஜன், சிவ வடிவேல் உடையார், கிரிதாரி பிரசாத், அ. ச. ஞானசம்பந்தம், கோதண்டராம கவுண்டர், மீ.ப.சோமசுந்தரம், ராமராஜன் என்று சகோதரர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும். மீ. பா. சோமசுந்தரம் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், தம்பி சோமு என்றே அருமையாகக் குறிப்பிடுவார்கள். சிவ வடிவேல் உடையார், கிரிதாரி பிரசாத், கோதண்டராம கவுண்டர் முதலியோருடைய ஊர்களுக்கு அடிக்கடி செல்லவேண்டிய சந்தர்ப்பங்கள் தொண்டைமானுக்கு ஏற்படுவதுண்டு. அப்போதெலலாம், இந்தச் சகோதரர்கள் மட்டுமல்ல அவர்கள் மனைவி மக்களுமே தொண்டைமானுக்கு ஓடியாடி உபசாரம் செய்வதைப் பார்த்தால் இந்த சகோதர பாசம்தான் எத்தனை வலிமை உடையது என்று எண்ணத் தோன்றும். இந்த சகோதரர்களுக்கெல்லாம், தொண்டைமான் புதல்வியான நானும் புதல்விதான். என் துணைவரும் மாப்பிள்ளைதான். தொண்டைமானுக்கு சகோதரர்கள் மட்டுமல்ல, சகோதரிகளுமே உண்டு. மதறாஸ் திருமதி நீலாவதி ராமசுப்பிரமணியம், கும்பகோணம் இந்திரா நாகராஜன் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த சகோதர பாசத்துக்கெல்லாம் கட்டுப்படாமல் விலகி நின்று, அத்தான் உறவு கொண்டாடிக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிற ஒருவரும் உண்டு. அவர்தான் பேராசிரியர் கு. அருணாசலக் கவுண்டர் அவர்கள். இன்று இந்த விழாவை முன் நின்று நடத்துகிறவர்களுமே அவர்கள்தாம்.

இதுபோலவே, சகோதராக இருப்பதைவிட நண்பராக இருக்க விரும்பும் அன்பர்களும் உண்டு. பேராசிரியர் ரீநிவாசராகவன், திருச்சி நண்பர் பட்டாபிராம், மதுரை நண்பர் கோபிநாத் முதலியோர் நண்பர்களாகவே இருப்பவர்கள்.