பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 231

“அவருடைய தமிழைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உணர்ந்ததை உணர்ந்தபடி எல்லாம் தமிழில் எடுத்துக்கூறும் சித்து அவருக்குக் கை வந்திருக்கிறது. கல்கி ரா. கி. அவர்களுக்குப் பின் தமிழை இப்படிச் சுகமாகக் கையாளுகிறவர் தொண்டைமான்தான் என்று இன்று பல அன்பர்கள் கருதுகிறார்கள். அவருடைய தமிழ்நடை முதலிலிருந்து கடைசிவரை துள்ளி விளையாடிக்கொண்டே செல்கிறது. பம்முவதும், பாய்ச்சல் காட்டுவதும், கர்ணங்கள் போடுவதும், பல்டி அடிப்பதும், ஹாஸ்யங்களை உதிர்ப்பதும், பக்தி வெள்ளத்தில் வாசகர்களை முக்கி முக்கி எடுப்பதுமாக இந்தப் பாஸ்கரத் தமிழ் செய்கிற ஜாலவித்தைகள் பலப்பல,” என்று வெகு அழகாக தமக்கேயுரிய முறையில் பாராட்டியிருக்கிறார்கள்.

தொண்டைமான் கவிதை எழுதுகிறார், கட்டுரை எழுதுகிறார் என்றால் ஆச்சர்யமில்லை. நாடகமும் எழுதி அதில் நடித்தும் இருக்கிறார் என்று அறியும்போது, பலருக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கும். வேலூரிலே கலெக்டராகப் பணியாற்றிய போது ‘பாலாற்றின் மருங்கிலே’, ‘அன்றும் இன்றும் என்று இரண்டு சிறு நாடகங்கள் எழுதி, அவற்றை அரங்கேற்றவும் செய்தார்கள். அரசாங்க ஊழியர்கள் சிலரை ஒன்று சேர்த்து நடிக்க வைத்தார்கள். தாமுமே அதில் பங்கு கொண்டு நடித்தார்கள்.

‘அன்றும் இன்றும் நாடகத்துக்குத் தலைமை வகித்தவர் திரு. காமராஜ் அவர்கள். நாடகம் ஆரம்பமாகியது. அரசாங்க ஊழியர்களிடையே நிலவும் பல குறைபாடுகளையும் விளக்கியது நாடகம். அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்சி பலத்தாலும், மந்திரிகளின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டும், எப்படி அரசாங்க உத்தியோகஸ்தர்களை மிரட்டிக் காரியம் சாதிக்க முயல்கிறார்கள் என்பதை எல்லாம் தெளிவாகவும், நையாண்டியாகவும் விளக்கியது நாடகம். விழாத் தலைவர் காட்சிக்குக் காட்சி அனுபவித்து, விழுந்து விழுந்து சிரித்தார். தம் கட்சியிலுள்ள பலருடைய பொதுவான போக்கைக் கண்டிக்கும் முறையிலே நாடகத்தை அமைத்து நடித்துக் காட்டியவர், தம் கீழ் பணியாற்றும் கலெக்டர் என்பதைக் கூட மறந்துவிட்டார். உண்மையான திறமையெனில் போற்ற வேண்டும் என்பதை உணர்ந்து “இந்த மாதிரி நாடகம் போட்டு உண்மையை உரைப்பதற்கு மிகவும் தைரியமும் திறமையும், துணிச்சலும் வேண்டும். அது நிறைய இருக்கிறது நமது எழுத்தாளர் கலெக்டர் திரு. தொண்டைமானிடம்” என்று உளமாரப் பாராட்டினார் என்றால் அதிகம் சொல்வானேன்.