பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ரசிகமணியின் ரசிகர்

–-–

எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம். தொண்டைமானுக்குக் கவிச்சக்கரவர்த்தி கம்பனிடத்திலே ஈடுபாடு அதிகமா! இல்லை, ரசிகமணி டி.கே.சியிடத்திலே ஈடுபாடு அதிகமா! என்று. அந்த ஈடுபாட்டை அன்பு என்பதா, அதற்கும் அப்பாற்பட்ட பக்தி என்பதா, இல்லை ரசனை என்பதா? எப்படிச் சொன்னாலும் பொருத்தமாகவே இருக்கிறது. கம்பனை, அவன் காவியத்தை, எவ்வளவோ அனுபவித்தவர்கள் தான் என்றாலும் ரசிகமணியிடத்திலே அவர்களுக்குள்ள ஈடுபாடும் பக்தியும் ஒரு குண்டுமணியளவாவது கூடி நிற்குமே தவிர கம்பனிடம் கொண்ட பக்திக்குக் குறையாது. சிலருக்கு இறைவனைக் காட்டிலும், அந்த இறைவனைக் காட்டிய ஆசார்யனிடத்திலே, பக்தியும் விசுவாசமும் அதிகமாக இருக்குமல்லவா, அப்படித்தான்.

தொண்டைமானவர்கள் பேசுகின்ற எந்த இலக்கியப் பேச்சிலும் சரி, எழுதுகின்ற எழுத்திலும் சரி கம்பன் வராமல் இருக்கமாட்டான். ஒரொரு சமயம் கம்பனாவது தப்பித்துக்கொள்வான். ஐயா டி.கே.சி தப்பித்துக்கொள்ள முடியாது. ரசிகமணியிடத்திலே அப்படி ஒரு அதீத அன்பு பக்தி.

வண்ணார்பேட்டையில் டி.கே.சி ஐயாவின் வீட்டில் வட்டத்தொட்டி (இலக்கிய சங்கம்) ஆரம்பித்த நாள் முதலாய், முளைத்து, கிளைத்து விழுதோடி வேரூன்றி விட்ட ஈடுபாடு அது. ரசிகமணியிடத்திலே தமிழை அனுபவித்தார்கள். கம்பனை அனுபவித்தார்கள். இலக்கியத்தில் பொக்கிஷம், புதையல் என்று எதையெல்லாம் ரசிகமணி கருதுகிறார்களோ அத்தனையையும் கேட்டு அனுபவித்தார்கள். ஏன், இவற்றை எல்லாம் ரசிக்கக் கற்றுக் கொடுத்த அவர்களையே ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.