பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 வேங்கடம் முதல் குமரிவரை


நான்காம் பதிப்பின் முன்னுரை

ராஜேஸ்வரி நடராஜன்

வேங்கடம் முதல் குமரி வரை என்ற பொதுத்தலைப்பில் ஏற்கனவே வெளியாகியுள்ள நான்கு தொகுப்புக்களின் நான்காவது பதிப்பு இது. எங்கள் தந்தையார் திரு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் மேற்கொண்ட திருப்பணி, தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றிக் கட்டுரை எழுதத் தொடங்கியதுதான். அந்தத் துறையில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உணர்ந்த கல்கி ஆசிரியர் திரு. சதாசிவம் அவர்கள் தொண்டைமான் அவர்களை மேலும் ஊக்குவித்து அவர்கள் எழுதிய கட்டுரைகளையெல்லாம் தொடராகக் கல்கியில் வெளியிட்டு உற்சாகம் ஊட்டினார்கள்.

மகாகவி பாரதி பாடியது போன்று, “காவிரி தென் பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வைகை பொருநை நதி’ தீரங்களிலே, என்றோ நமது முந்தையோர்களால் எழுப்பப்பட்ட திருக்கோயில்களுக்கெல்லாம் தொண்டைமானவர்கள் காமிராவும் கையுமாகச் சென்று, அந்தக் கோயில்களின் வரலாற்றுப் பின்னணி, இலக்கியப் பெருமை, சிற்பச் செல்வங்கள் ஆகிய சிறப்புக்களை யெல்லாம் கண்டு, தெளிந்து, அவற்றை, படங்களுடன் கட்டுரைகள் வாயிலாகத் தமிழ் மக்கள் முன் வைக்கத் தலைப்பட்டார்கள். கல்கி இதழில் வாராவாரம் கட்டுரைகள் வெளிவரத் தொடங்கிய போது நல்ல வரவேற்பும் கிடைத்தது. மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றில் நம்பிக்கையும் நாட்டமும் உடையவர்கள் கட்டுரையைப் படித்த சூட்டோடு அந்தந்த ஊர்களுக்கு யாத்திரை கிளம்பியதும் உண்டு. பக்தர்கள், கலை அன்பர்கள் எல்லோருக்கும் இந்தத் தொகுப்பு வழிகாட்டியாகவும், கையேடாகவும் உதவியது என்றால் அது வெறும் புகழ்ச்சியில்லை.