பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாஸ்கரத் தொண்டைமான்


திரு. தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள், ‘திக்கெலாம் புகழும் திருநெல்வேலி’ என்று ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற நெல்லை மாநகரில் 1904 ஆம் ஆண்டு, ஜூலைத் திங்கள் 22 ஆம் நாள் (22.7.1904) திரு. தொண்டைமான் முத்தையா அவர்களுக்கும், திருமதி. முத்தம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர் ஐவர். பரம்பரையாகவே நல்ல தமிழ்ப் புலமையும், கலைஞானமும் செறிந்த குடும்பம் அது. தந்தையார், திரு. தொண்டைமான் முத்தையா, தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்றவர். சிறந்த ஓவியக் கலைஞர். புகைப்பட வல்லுநர். தந்தை வழி பாட்டனார், திரு. சிதம்பரம் தொண்டைமான் நல்ல தமிழ்ப் புலவர். வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளிடத்தில் முறையாகத் தமிழ் பயின்றவர். நெல்லைச் சிலேடை வெண்பா, நெல்லைப் பள்ளு ஆகியவற்றை எழுதிய கவிஞர். ஆகவே தொண்டைமான் அவர்களுக்கு, கலை, இலக்கியம் ஆகிய இரண்டிலும் இயல்பாகவே பற்றும், ஆர்வமும், தேர்ச்சியும் ஏற்பட்டதில் வியப்பில்லை.

பாஸ்கரத் தொண்டைமானவர்களுடைய மாணவப் பருவம் திருநெல்வேலி, இந்துக் கல்லூரியில் கழிந்தது. அவர் கல்லூரியில் பயின்ற காலத்தில் அவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே திருமணமும் நடந்தேறியது. முறைப் பெண்ணாக பாலம்மாள் என்பவரே அவருக்குத் துணைவியாக வாய்த்தார். இனிய இல்வாழ்க்கையின் பயனாக நான்கு மக்கள் பிறந்தனர். இளையவர் இருவரும் இளமையில் மறைந்து போக, மூத்த இருவரும் உள்ளனர்.