பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

தொண்டைமானவர்கள் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றதும் வேலையும் தேடிவந்தது. முதன்முதலில், இப்போது வனவளத்துறை என்று அழைக்கப்பெறும் காட்டிலாகாவில் உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர் வருவாய்த்துறைக்கு மாறி, வருவாய்த்துறை ஆய்வாளராகப் பணியேற்றார். அதிலிருந்து படிப்படியாக முன்னேறி தாசில்தார், முதல் வகுப்பு நடுவர், உதவி மாவட்ட ஆட்சியாளர் என்று பல்வேறு பதவிகளை வகித்து, ஐஏஎஸ் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக ஓராண்டுக்கும் மேலாக பதவி வகித்த பின்னர், 1959 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். முப்பதாண்டு கால அரசுப் பணியின் முடிவில், நேர்மையானவர், திறமையானவர் என்ற நல்ல பெயரும் அவரை வந்தடைந்தது. ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் திருநெல்வேலிக்கே வந்து பரம்பரை வீட்டில் தங்கி, இலக்கியப் பணியை மேற்கொண்டார்.

தொண்டைமானவர்களை இளமைப் பருவத்தில் கவர்ந்தவர் சொல்லின் செல்வரான திரு. ரா.பி. சேதுப்பிள்ளையவர்கள். அவருடைய தூண்டுதலின் பேரில் கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்டு கல்லூரி நாட்களிலேயே ஆனந்த போதினி பத்திரிகையில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். பின்னர்த் தமிழறிஞர், முதுபெரும் புலவர் வெள்ளகால் திரு. சுப்பிரமணிய முதலியார் அவர்களுடனும், குற்றால முனிவர் ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் அவர்களுடனும் தொடர்பு ஏற்பட்டு அவர்கள் அன்புக்குப் பாத்திரமாகி, அவர்களால் ஆட்கொள்ளப்பட்டார். தமிழறிஞர் வெள்ளக்கால் முதலியார் அவர்கள் மறைந்த பின்னர், முழுக்க முழுக்க ரசிமகணி டிகேசியின் பிரதம சீடராகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். அப்போது புத்தேரியில் வாழ்ந்து வந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களிடத்தும் தொண்டைமானுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. ரசிகமணி அவர்களையும், கவிமணியவர்களையும் ஒருங்கே வரவழைத்து, கலைதெரி கழகம் என்ற அமைப்பின் மூலம் பெரிய பாராட்டு விழாவை நெல்லையில் நடத்திப் பெருமை கூட்டினார்.

தொண்டைமானவர்களுடைய ரசிக உள்ளம், கம்பன் கலை, கவிதை இவற்றில் தோய்ந்து நின்றது. கம்பன் பக்தி ரசிகமணியின் கூட்டுறவில் மேலும் வளர்ந்தது. காரைக்குடி கம்பன் விழாவில் அவர் பங்கு பெரிது. கம்பன் அடிப்பொடி திரு. சா. கணேசன் அவர்களும், தொண்டைமான் அவர்களும் உடன்பிறவா சகோதரர்களாகவே பழகி வந்தனர். பிரபல எழுத்தாளர், திரு. தொ. மு. சிதம்பர ரகுநாதன் அவருடைய உடன் பிறந்த தம்பி.