பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைக் களஞ்சியம் 31


தமிழ்நாட்டுக் கலைகளில் தொண்டைமான் அவர்களைப் பெரிதும் கவர்ந்தது, தமிழ்நாட்டுச் சிற்பக் கலைதான். அவர் தஞ்சையில் பணியாற்றியபோது, அங்கு தடுக்கி விழும் இடம் எல்லாம் கலைச் செல்வங்கள், சிற்ப வடிவங்கள் கேட்பாரற்றுக் கிடப்பதைக் கண்டு பிடித்து, அவற்றைச் சேகரித்து, தலைநகராம் தஞ்சையில் அற்புதமான ஒரு கலைக்கூடமே அமைத்துவிட்டார். பொறுப்பான அரசுப் பணியிலிருந்த போதும், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தமிழகமெங்கும் சுற்றி அங்குள்ள கோயில்களைக் கண்டு, அவற்றின் வரலாற்றுச் சிறப்பு, கலைநயம் ஆகியவற்றை நுணுகி ஆராய்ந்து, கட்டுரைகள் எழுதி மக்களுக்கு விருந்து படைத்தார். அந்தக் கட்டுரைகளை, வேங்கடம் முதல் குமரி வரை என்ற தலைப்பில் தொடர்ச்சியாக வெளியிட்டுக் கல்கி பத்திரிகை பெருமை அடைந்தது. தொண்டைமானவர்களுடைய திருப்பணியைப் பாராட்டி, வணக்கத்துக்குரிய காஞ்சி முனிவர் ஒரு வித்வத் சதலைக் கூட்டி “கலைமணி” பட்டம் வழங்கி, பொன்னாடை போர்த்தி, சிறப்புச் செய்தார்கள். தொண்டைமானவர்களுடைய மணி விழாவின்போது, காஞ்சி பீடாதிபதி அவர்கள்,

“கலாமணி தொண்டைமான் ஸ்ரீபாஸ்கர சில்ப கல்பக ஷஷ்டி பூர்த்யுத்ஸவே சர்வ மங்களா கருணாஸ்பதம்”

என்ற ஸ்லோகத்தையும் அருளி ஆசி கூறினார்கள்.

தொண்டைமானவர்களுடைய கலைத்தாகம் அதோடு தணிந்து விடவில்லை. வேங்கடத்துக்கு அப்பால் இமயம் வரை உள்ள கோயில்களையும் கண்டு தெளிய வேண்டும் என்ற அவா உந்த, வடநாட்டுப் பயணம் மேற்கொண்டு, பாரதம் முழுவதையும் வலம் வந்தார். அதன் பயனாக வேங்கடத்துக்கு அப்பால் என்ற தலைப்பில், கல்கியில் 56 கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டு, அவை இன்று நூல் வடிவமும் பெற்று விட்டன. இவை தவிர பிள்ளைவாள், தமிழறிஞர் முதலியார், ரசிகமணி டிகேசி என்ற நூல்களும், கலைஞன் கண்ட கடவுள், கல்லும் சொல்லாதோ கவி, அமர காதலர், தென்றல் தந்த கவிதை, இந்தியக் கலைச் செல்வம், தமிழர் கோயில்களும் பண்பாடும் என்ற கலைக்கட்டுரைத் தொகுப்புகளும், மதுரை மீனாட்சி, ஆறுமுகமான பொருள், பிள்ளையார்பட்டிப் பிள்ளையார், கம்பன் சுயசரிதம், கம்பன் கண்ட இராமன், அன்றும் இன்றும், பட்டி மண்டபப் பேருரைகள் என்ற நூல்களும் தொண்டைமான் எழுதியவற்றில் குறிப்பிடத்தக்கவை.