பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

துணியைக் கட்டிக் கொண்டிருப்பவனிடம் எந்தச் சமயப் பிரச்சாரமும் எடுபடாது’ என்றான் விவேகானந்தன். அவன் வழியிலே வந்த பாரதி அதையும் எண்ணிப் பார்க்கிறான். உணவுப் பிரச்சினை தீர்ந்து விடுவதோடு பொதுவுடைமை வந்து விடுவதில்லை. மனித இதய வளர்ச்சியும் பெறவேண்டும். கலாச்சார மேம்பாடும் அடைய வேண்டும். இதய வளர்ச்சியைக் கருதிய நமது நாடு மனிதர்களை யெல்லாம் ஆண்டவனின் அவதாரங்களாகப் பார்த்தது. இதனை நினைவு கூர்கிறான் பாரதி.

“எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன்”

என்றுரைத்தான் கண்ணபெருமான்.

இந்தக் கீதாசாரியனின் கூற்று உண்மையானால், இந்த உலகத்தில் பிறந்த எல்லோரும் கண்ணன் அவதாரங்கள்தான். ஆனால், அந்த அவதாரங்கள், அந்தக் கடவுளர்கள் பசியாலும் பிணியாலும் வாடலாமா? எனவே அவர்களைக் கடவுள் நிலைக்கு, அமர நிலைக்கு உயர்த்த வேண்டுமானால், முதலில் அவர்களை ஈனக் கவலை இருளிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும். அதற்குப் பொதுவுடைமை முதற்படி. எனவே அமரநிலை, தெய்வத்தன்மை பெறுவதற்கு, மிருகமாக வாழும் மனிதன் மனிதநிலைக்கு வருவதோடு மட்டுமல்லாமல், தேவநிலைக்கு உயர்வதற்கும் பொதுஉடைமை தேவை என்று காண்கிறான் பாரதி. இதிலிருந்து அடுத்த அடிகள் பிறக்கின்றன.

எல்லாரும் அமரநிலையை எய்தும் நன்முறையை

இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் இந்தியா உலகிற் களிக்கும் - ஆம், ஆம் இந்தியா உலகிற் களிக்கும்.

இவ்வாறு ஆம், ஆம், ஆம் என்று முக்காலும் கூறிப் பொதுவுடைமைத் தத்துவம் இந்திய நாட்டு மரபுக்கும் பண்பாட்டிற்கும் உகந்ததுதான் என்று உறுதி கூறுகிறான் பாரதி. இறுதியில் அவன் தனது பாட்டில் தான் வகுக்கின்ற இந்தப் புதிய பாரத சமுதாயம் எப்படிப்பட்டது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் விதத்தில் பாடத் தொடங்குகிறான். -

தம்பி! உனக்கு இனம், குலம் என்று சொன்னால்தான் புரியுமா? ஜாதி, சமயம் என்றால்தான் புரியுமா?