பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 51

இதற்குள் கலெக்டரின் கோபம் தணிந்துவிட்டது. தான் செய்த காரியம் தவறு என்பதை உணர்ந்திருக்கிறார். தாசில்தாருக்கு ஆள் அனுப்பி அழைத்து, தான் ரிவின்யூ இன்ஸ்பெக்டரிடம் மன்னிப்புக் கோரத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார். ஆம், ஆங்கிலேய கலெக்டர், அவரின் இனத்திற்கே உரிய பெருந்தன்மையோடு நடந்து கொள்ள விரைந்திருக்கிறார். தாசில்தாரோ தயங்கித் தயங்கி ரிவின்யூ இன்ஸ்பெக்டர் தன் வேலையை ராஜினாமாச் செய்த விவரத்தைக் கூறி இருக்கிறார். கலெக்டரும் வருத்தப்பட்டு ரிவின்யூ இன்ஸ்பெக்டரை அழைத்துத் தான் செய்த காரியத்திற்கு மன்னிப்புக் கேட்டதுடன், அவர் ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொண்டால், அவரை ஹெட் அக்கவுண்டண்டாக உயர்த்துவதாகச் சொல்லியிருக்கிறார். ரிவின்யூ இன்பெக்டரும் உத்தியோக உயர்வு என்றவுடனே பல்லை இளித்துத் தன் ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொண்டார். உத்தியோக உயர்வையுமே ஏற்றுக்கொண்டார். “இப்படியெல்லாம் நடந்திருக்கும் போது குதிரையைப் பட்டினியாய்ப் போட்டுவிட்டாயா என்று கலெக்டர் கேட்டது ஒன்றும் பிரமாதமில்லை” என்று கிராம முனிசீப் எனக்கு ஆறுதல் கூறினார். பின்னர் சில வருஷங்கள் நான் ரிவின்யூ இன்ஸ் பெக்டராக இருந்தும் எனக்கு ஒரு கலெக்டரும் பாலாபிஷேகம் செய்யவும் இல்லை. அதனால் உத்தியோக உயர்வு கொடுக்கவும் இல்லை.

ரிவின்யூ டிபார்ட்மெண்டில் வேலை பார்த்த எனக்கு படிப்படியாக உத்தியோக உயர்வு கிடைத்தது. ரிவின்யூ இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து முப்பது வருஷங்கள் கழிந்த பின்னரே கலெக்டர் வேலையும் கிடைத்தது. இந்த முப்பது வருஷகாலத்தில் எத்தனை கலெக்டர்களை நான் பார்த்திருப்பேன். அவர்களது வேலைத் திறமை, குணங்கள், குறைகள் எல்லாவற்றையும் உணர்ந்திருப்பேன். அந்நியர் ஆட்சியில் சர்க்கார் சேவகனாக வேலையேற்ற நான் பதினைந்து வருஷ காலம் அநேகமாக வெள்ளைக்காரக் கலெக்டர்களிடமே வேலை பார்த்திருக்கிறேன். இன்னும் பதினைந்து வருஷம் சுதந்தர இந்தியாவில் டிப்டி கலெக்டராகவும் கலெக்டராகவும் பணியாற்றியிருக்கிறேன்.

இன்று அதிகாரிகள் முகாம் போவது குறைந்து விட்டது. என்றாலும் சப்ளை வாங்குவது குறையவில்லைதான். இதற்குக் காரணம் கீழேயுள்ள உத்தியோகஸ்தர்கள் சப்ளை மூலமே மேலதிகாரிகளைத் திருப்தி செய்தல் கூடும் என்று எண்ணுகிறார்கள். அதிகாரிகளும் அதற்கேற்றாப்போலவே நடந்து கொள்கிறார்கள்.