பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

என்றாலும் அவைகளைப் பற்றி இக்கட்டுரையில் ஒன்றும் கூறுவதாக இல்லை. நான் ஓய்வு பெறவதற்கு ஒன்றிரண்டுமாதங்களுக்கு முன்னே நான் நடத்திய ஒரு நாடகத்தைப் பற்றி மட்டும் ஒரு சில வார்த்தைகள் சொல்லிவிட்டு நிறுத்திக் கொள்கிறேன்.

ஆண்டுக்கொரு முறை சர்க்கார் சேவகத்தில் உள்ளவர்களுக் கெல்லாம் ஒரு விளையாட்டு விழா நடக்கிறதுண்டு. அந்த விழாவுடன் சேர்ந்து ஒரு கலை நிகழ்ச்சி நடத்துவதும் உண்டு. நான் கலெக்டராக இருந்த காலத்தில் ஒரு நாடகம் நடத்த ஏற்பாடு செய்தேன். நாடகத்திற்குத் தலைமை தாங்க முதலமைச்சரை அழைத்தேன். நாடகத்தை நானே எழுதினேன். சர்க்கார் சேவகம் அன்றும் இன்றும் என்று நாடகத்திற்குப் பெயர் சூட்டினேன். அன்று அதிகாரிகள் எல்லாம் மக்கள் பேரில் அதிகாரம் செலுத்தி ஆண்டார்கள் என்பதை விளக்கிய தோடு, இன்று மக்கள் எப்படி அதிகாரிகள் பேரில் குதிரை ஏறுகிறார்கள், அதற்கு அரசியல்வாதிகள் எப்படி எப்படி எல்லாம் உதவுகிறார்கள், நிர்வாகத்தில் அவர்கள் தலையிட்டு எப்படி குட்டையைக் குழப்பு கிறார்கள் என்றெல்லாம் காட்டினேன். ஏன்? சொல்லப்போனால், நானே ஒரு ரிட்டயர்டு தாசில்தார் வேடம் தாங்கி நடித்தேன்.

நாடகம் இரண்டு மணி நேரம் நடந்தது. வந்திருந்த மக்கள் எல்லாம் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாயினர். கடைசியில் நான் பேசும் போது “நாங்கள் எல்லாம் வருஷம் 365 நாளும் ஆபிஸ் பேப்பர்களையே கட்டிக்கொண்டு அழுகிறவர்கள். அப்படி அழப் பிறந்தவர்கள் ஒரு நாளாவது சிரித்து மகிழலாமே என்று எண்ணினோம். நாங்கள் சிரிப்பதுடன் உங்களையும் சிரிக்க வைக்கலாமே என்றுதான் விரும்பினோம். எங்கள் எண்ணம் எவ்வளவு தூரம் நிறைவேறி இருக்கிறது என்பதை நீங்கள் சிரித்துச் சிரித்து எங்களுக்கு உற்சாக முட்டியதிலிருந்து தெரிந்து கொண்டேன். நாடகத்தில் நல்ல நடிப்பு இருந்தது என்றால் பாராட்டுகளை நடித்த நண்பர்களுக்குக் கொடுத்து விடுங்கள். ஏதாவது குறையிருந்தால் அதை எனக்குத் தள்ளுங்கள். நான்தான் இந்த நாடகம் எழுதியவன்’ என்று கூறினேன். தலைமை வகித்த முதலமைச்சர் நடிகர்களை எல்லாம் பாராட்டி விட்டுச் சொன்னார். “தொண்டைமான் சிறந்த ஒரு எழுத்தாளர், பேச்சாளர் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் அவர் ஒரு சிறந்த நடிகரும் கூட என்பது எனக்குத் தெரியாது. மிகவும் நன்றாக நடிக்கிறார். மற்றவர்களையும் நடிக்கப் பழக்கியிருக்கிறார். இப்படி ஒரு நாடகத்தை எழுதி அதை நடிக்க வெறும் திறமை மட்டும் போதாது. மிக்க துணிச்சலும் வேண்டும்.