பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 73

அமையும்படி கட்டில்கள் கட்டுவது என்பதில் எல்லாம் இவர்களுக்கு ஒரு தனி உத்சாகம். இப்படிக் கட்டிய கட்டில்கள்தான் இவர்களிடம் நிற்குமா? அது ஏது? ஒரு ஊரிலே முகாம். கூடவே முகாம் செய்வார் ஒரு தாசில்தார். இவர்கள் கட்டிலில் ஒருநாள் இரவு படுத்துப் பார்ப்பார். விடிந்ததும், “சார் முதலியார்வாள்! ரொம்ப நன்றாகச் செய்திருக்கிறீர்களே! எந்த ஊர் வேலை” என்று கேட்பார் தாசில்தார். அவ்வளவுதான். கட்டில் அவர் கியாம்புச் சாமான்களுடன் புறப்பட்டு விடும். இப்படியே எத்தனை எத்தனை கட்டில்கள் எத்தனை நண்பர்களுக்கு இனாம் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு முதலியார் அவர்களிடம் இன்று கணக்கில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாகத்தான் அகலிகைக்குக்கூட ஒரு கல்லாகிய கட்டிலை ஆக்கிக் கொடுத்து, அவளை அதில் அமைதியுடன் தூங்கும்படி செய்து இருக்கிறார்களே!

6

இவற்றையெல்லாம் விட அவர்கள் தமிழர்களுக்கும், அதிலும் என்போன்ற தமிழ் மாணவர்களுக்கும் செய்துள்ள ஒரு பெரிய உபகாரம் என்றும் மறக்க முடியாதது. தமிழர்கள் பொக்கிஷம், தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்யும் ஒரு காவியம். உலக மகா இலக்கியத்தில் ஒன்றாக வைத்து, எண்ணப்பட வேண்டிய ஒரு நூல், கம்பராமாயணம். கம்பராமாயணம் என்றாலே தமிழ் மாணவர்களுக்கு ஒரு பெரிய பயம், “எத்தனை ஆயிரம் பாட்டு, ஐயா! பாட்டுக்களாவது படித்தால் லேசாக அர்த்தமாகக் கூடியதாகவா இருக்கிறது. இதைப் படிப்பது என்பதெல்லாம் நமக்குச் சாத்தியமா? என்றெல்லாம் மலைத்தார்கள் தமிழ் மாணவர்கள். இவர்களுடைய மலைப்பை எல்லாம் போக்கி “நண்பர்களே! கம்பராமாயணத்தின் அளவைக் கண்டாவது அல்லது, புத்தகம் அச்சடித்திருக்கும் ரீதியைக் கண்டாவது நீங்கள் மிரண்டுபோக வேண்டாம். நான் பொறுக்கித் தரும் பாக்களை மட்டும் படியுங்கள். வேண்டுமானால் நான் சொல்லும் உரையையும் கேளுங்கள். கம்பனை அனுபவிக்க முடிகிறதா இல்லையா பாருங்கள்” என்ற அபயப்பிரதானம் கொடுத்தவர்கள் நமது முதலியாரவர்கள். அவர்களது கம்பராமாயண சாரம் அப்படியே பருகத்தக்கது. பருகிப் பருகிக் களிக்கத்தக்கது. இதுவரை ஐந்து காண்டங்களே அச்சாகியிருக்கிறது. ஆறாவது காண்டமாகிய யுத்த காண்டத்தின் சாரத்தை இந்த எண்பத்தி நான்காவது வயதிலே வடித்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நூல்தான் அவர்கள் புகழை இவ்வுலகமுள்ளளவும் நிலைநிறுத்தும் என்று நான் கருதுகிறேன்.