பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 83

ஆதலால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாகர்கோயிலில் தங்கிய ஒரு சில மணிநேரத்தில், பக்கத்தில் உள்ள புத்தேரிக்கு நண்பர்களுடன் சென்று, கவிமணியவர்களைக் கண்டு வணங்கினேன். நிரம்பவும் அருமையோடு வரவேற்றார்கள், அளவளாவினார்கள். ரசிகமணி டிகேசிக்கு மிகவும் வேண்டியவன் நான், என்று தெரிந்ததும் இன்னும் மிகவும் அன்போடு ஆரத்தழுவினார்கள். அமுதின் சுவையை ஒத்த அரிசிப்புட்டு, பழம், காப்பி எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள். பத்திரிகைகளில் வெளியான அவர்கள் பாடல்கள் எல்லாம் என் கத்தரிக்கோலுக்குத் தப்பவில்லை என்றும், அந்தப் பாடல்களை எல்லாம் வெட்டிச் சேர்த்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி வைத்திருக்கிறேன் என்று தெரிந்ததும் “இப்படி நீ மலர் மலராகச் சேர்த்து வைத்திருப்பதைத் தானே புதுமைப் பதிப்பகத்தார் மாலையாகத் தொடுத்திருக்கிறார்கள்” என்று நகைச்சுவையோடு மலரும் மாலையும் வெளிவந்ததைக் குறிப்பிட்டார்கள்.

இப்படிப் பேச்சு வளர்ந்து கொண்டே இருந்தது. அப்போது உடன் வந்திருந்த நண்பர் ஒருவர், நானும் பாட்டு எழுதுவேன் என்று சொல்லி, பாரதி பாட்டை மாற்றி எழுதியதையும் குறிப்பிட்டு, இந்தப் பாட்டினால் பாரதமாதா திருவேலாக்கக் காட்சி மிகவும் அனுபவிக்கத் தக்கதாக இருந்தது என்றும் சொல்லிவிட்டார். “சரி தம்பி, அந்தப் பாட்டைச் சொல்லேன்” என்றார்கள். எனக்கோ ஒரே பயம். ஏதோ அந்தரங்கத்தில் நடந்தது அம்பலம் ஆகிவிட்டதே என்று. அதிலும் இன்றைய தமிழ்நாட்டின் தலைசிறந்த கவிஞர் முன்பு என்பாட்டை அரங்கேற்றுவது என்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. ஆதலால் புது மணப்பெண்ணின் நாணத்தோடே பாட்டைப் படித்துச் சொன்னேன். கேட்டுக் கொண்டே வந்தார்கள்.

கன்னித் தமிழ் இன்பப் பாய்ச்சலோடு வையை காவிரி எல்லாம் புரண்டு வரும் எண்ணத்திதிக்கும் தமிழ் நாடே புகழ் ஏறிச் சிறந்திடும் எந்நாடாம். என்ற பகுதியைச் சொன்ன உடனே, “பேஷ் தம்பி பேஷ் ரொம்ப நன்றாயிருக்கிறது பாட்டு” என்று பாராட்டிவிட்டு மேலும் சொன்னார்கள். செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றுதான் பாரதி பாடினார், நீயோ, அவருக்கும் மேலே ஒரு படி சென்று எண்ணத்திதிக்கும் தமிழ் நாடு என்றே பாடிவிட்டாய். ரொம்ப ரொம்ப அழகாயிருக்கிறது பாட்டு”