பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 93

ஆண்டவனை நம்பிக்கைக்குரிய பாத்திரங்களாக கொண்டு வந்து நிறுத்தினார்.

அவர் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது லக்ஷ்மி கடாட்சம். அவர் எழுதியதில் எனக்குப் பிடிக்காதது சிஐடி சந்துரு. இதை அப்பட்டமாகவே சொன்னேன். ஆம், அது உங்களுக்குப் பிடிக்காதுதான். அது உங்களுக்காக எழுதப்பட்டது அல்லவே. அதையும் படிப்பதற்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறதே அவர்களுக்காக நான் எழுத வேண்டாமா என்று என்னை மடக்கினார். அவர் எழுதிய எத்தனையோ கதைகள் அமரத்வம் வாய்ந்தவை. அந்தக் கதைகளை, அந்தக் கதைகளில் வரும் பாத்திரங்களை அவர் எப்படிக் கற்பனை பண்ணுகிறார் என்பதை என்னுடன் அவர் தங்கியிருந்த போது அறிந்தேன். வெடுக்கென்று துடுக்காகப் பேசும் கோபிநாத் என்று ஒரு நண்பர், வீட்டுக்கு வரும் நண்பர்களை அன்போடு உபசரிக்கும் இந்திரா என்று ஒரு பெண்மணி, பெரியவர்கள் பேசும்போது இடையிடையே விழுந்து பேசும் தம்பி என்று ஒரு பையன். இத்துணை பேரையும் தன் கதைகளுக்கு உரிய கதாபாத்திரமாக ஆக்கி விடுகிறார். சுடச்சுட அவர்கள் தன் உள்ளத்தில் இருந்து மறையும் முன்பே. ஏன் கும்பகோணத்தை அடுத்த கோட்டுரிலே காவிரி உத்தாவாகினியாக ஓடுகிறது என்று அங்கு ஒரு முழுக்குப் போட்டால், அந்தச் சம்பவத்தையும் கூட, ஒரு கதையில் நிகழும் நிகழ்ச்சியாகவே சித்தரித்து விடுகிறார். தன் முன் நடக்கும் பாத்திரங்கள், தன் கண் முன் நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் தத்ருபமாகக் காட்டும் ஆற்றல் அவரிடம் நிறைந்திருந்தது. இல்லாவிட்டால் ஐந்து நாடுகளில் அறுபது நாள் என்று பன்னிரண்டு மாதம் அழகு அழகாக எழுத முடியுமா என்ன?

எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் எனது நண்பர்கள். எவ்வளவோ பெரிய கதாசிரியர்கள், பத்திரிகையாசிரியர்கள், எல்லாம் எனக்கு வேண்டியவர்கள். இத்தகைய பெருமக்களில் பலர் பழகுவதற்குரிய மனிதப் பண்புடையவர்களாக இருக்கவில்லை. எழுத்தாளனாக, கதாசிரியனாக, பத்திரிகையின் நிர்வாக ஆசிரியனாக இருந்த நண்பர் ஒருவர் நல்ல பண்புகள் நிறைந்தவராகவும் குழந்தை உள்ளம் படைத்தவராகவும் இருக்கிறார் என்பதைத்தான், அவர் என்னுடன் தங்கிய ஏழு நாட்களில் கண்டேன். அவர்தான் அருமை நண்பர் தேவன்.

சென்ற நான்கைந்து மாதமாக, அவர் படுக்கையில் இருக்கும்போதெல்லாம் மாதமொருமுறை சென்னை செல்லும்