பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

தன்மையைக் கொண்டு இருவகைப்பட்ட நூல்களையும் ஒரு புலவனே இயற்றியிருக்கிறான் என்று அறிஞர்கள் அறிந்து கொள்ளக்கூடும். அப்படிப் பார்க்கும்போது, நளவெண்பாவுக்கும் அல்லி அரசாணி மாலை போன்ற அம்மானைப் பாடல்களுக்கும் பா நயத்திலோ, சொல் அமைப்பிலோ பொருள் வளத்திலோ எவ்விதத்திலும் ஒற்றுமையிருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, நள வெண்பாவை இயற்றியவரும் அம்மானைப் பாட்டுக்களைப் பாடியவரும் ஒருவராயிருக்க முடியாது. ‘நளவெண்பா’ பாடிய புகழேந்திப் புலவரின் பெயரால் பின் வந்த யாரோ ஒரு புலவன் அம்மானைப் பாடல்களைப் பாடி உலவ விட்டிருக்கிறான் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது. ஏனென்றால், தமிழ் மொழியை வளம்படுத்திய அகத்தியர் என்னும் பெரும் புலவரிலிருந்து ஒளவையார் வரை ‘Duplicate’ புலவர்கள் பலர் இருந்து பிற்கால இலக்கியத்தில் சொல்லுடாட்டம் பல செய்திருக்கின்றனர் என்பது ஆராய்ச்சியறிவுடையோர் அறிவர்.

‘நள வெண்பா’ இயற்றிய புகழேந்திப் புலவரின் பெயர்த் தன்மையைப் பார்க்கையில் இது இயற்பெயராயிருந்திருக்க முடியாது; புகழுக்குரியவர் என்ற பொருளுடைய காரணப் பெயராய்த்தான் இருக்கவேண்டும் என்று தெரிகிறது. புகழேந்திப்புலவர் வாழ்ந்ததற்குரிய சரித்திரச் சான்றுகள் சரியாகக் கிடைக்கவில்லையாயினும் இரண்டாவது குலோத்துங்கச்சோழன் காலத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. எப்படியென்றால், குமார குலோத்துங்கச் சோழனின் ஆஸ்தானப் புலவரான ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்திப் புலவருக்கும் புலமைப்போர் நடந்திருக்கிறது என்ற வரலாற்றிலிருந்து இது அறியக் கிடக்கிறது. ஆனால், நம் நாட்டில் இவ்விரு பெரும் புலவர்களைக் குறித்து உலவும் கதைகளைப் பார்த்தால் இவ்வளவு பெரிய புலவர்களா பேதமையே உறவாகவுடைய சாதாரண மக்களைப் போல், பொறாமையால் பூசல் விளைத்திருப்பார்கள்? என்று எண்ணத் தோன்றுகிறது. இக்கர்ண பரம்பரைக் கதைகள் உண்மையாயிருக்க நியாயமில்லை. பிற்காலத்திலிருந்த சாதாரணப் புலவர்கள் தங்கள்பால் குடி கொண்டிருந்த சிறுமைக் குணங்களை இப்பெரும் புலவர்கள் மேலேற்றிச் சித்திரித்திருக்கிறார்கள். பிற்காலப் புலவர்களுக்குத் தங்கள் கற்பனா சக்தியைக் கொண்டு இது போன்ற பொய்க் கதை