பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


களைச் சிருஷ்டிப்பதில் ஒருவித உற்சாகமிருந்திருக்கிறது என்பது ‘புலவர் புராணம்’, ‘தமிழ் நாவலர் சரிதை’ ‘விநோதரச மஞ்சரி’ போன்ற நூல்களைப் பார்க்கையில் தெரிகிறது. ‘தக்கயாகப் பரணி’ போன்ற உயர்ந்த நூலை இயற்றிய ஒட்டக்கூத்தரைச் சாதாரணப் பொறாமைப் புலவனாகச் சித்திரித்திருப்பது சிறிதும் அடாது என்பதே என் அபிப்பிராயம். எனவே, இது போன்ற பொய்க்கதைகளை மறந்துவிட்டுத்தான், மேற்குறித்த பெரும் புலவர்களின் அரும் பெரும் காவிய நூல்களை நாம் படித்து மகிழ்ந்து நல்லறிவு பெறவேண்டும்.

நண்பர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி புகழேந்திப் புலவரைக் குறித்துக் கர்ண பரம்பரையாக வழங்கிவரும் கதைகளைப் பெரிதும் தழுவியே இந்நாடகத்தை இயற்றியிருக்கிறார்; ஆயினும் சரித்திர நாயகரான புகழேந்திப் புலவருடைய நற்குணப் பண்புகள் நாடகத்தில் நன்கு விளங்குவதற்காகக் கதைப்போக்கில் சிற்சில மாறுதல்களைப் பொருத்தமாகச் செய்திருக்கிறார். அத்துடன் ஒட்டக்கூத்தரையும் நாடக முடிவில் உயர்ந்த குணச் சித்திரமாக்கியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நாடக உலகில் நீண்டகால அனுபவமுள்ள ஆசிரியர் கு. சா. கி. புகழேந்திப் புலவர் போன்ற ஒரு சாதாரணப் புலவருடைய கதையை நாடக அரங்குக்கு ஏற்ற முறையில் கவர்ச்சிகரமாக அமைத்திருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனாலும் காட்சிகளின் அமைப்பையும் வசன அமைப்பையும் மிக அழகாக அமைத்திருக்கிறார் என்பதை இங்கு குறிப்பிட்டுப் பாராட்டாமலிருக்க முடியவில்லை.

தமிழில் நல்ல நாடகங்கள் அதிகமாக இல்லை என்ற குறையை நண்பர் கு. சா. கி. இது போன்ற பல நல்ல நாடகங்களை எழுதி உதவுவதன் வாயிலாகப் போக்குவாராக.

‘கலைவாணர்’ நாடகத்துக்கு அணிந்துரை எழுதுவதற்கு வாய்ப்பளித்த நண்பர் கு. சா. கி. அவர்களை நான் என்றும் மறக்கமுடியாது.

நாடகக் கலைஞர்கள் இக்“கலைவாணன்” நாடகத்துக்கு நல்வரவேற்பு அளிப்பார்களாக.

நாரண துரைக்கண்ணன்