பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


வருணிக்கும் ‘காலமே செயல்; செயலே காலம்’ என்ற அடிப்படைக் கொள்கைக்கு அவன் மட்டும் உடன்படாமல் இருக்க முடியுமா? எது எப்படியிருந்தாலும், விரிந்த வானை முட்டுகிற அளவுக்கு, விரிந்த கனாக்களை விரிய விட்டான் அவன். ‘இளமைப் போதில் நாம் எவற்றை விரும்புகிறோமோ, அவை நம் முதுமைப் பிராயத்தில் நம்மை அணையும்’ என்கிறான் மேதை கோத்தே (Goethe). இவ்வுண்மை நிலை அரவிந்தனையும் சாலப் பொருத்தும், ஆனால்...பாவம், அவன்!...சரி, கதையைக் கவனிப்போம்!

பிறிதொரு நிகழ்ச்சி:

பூரணிக்கும் அப்போது ஒரே கசப்பான மனநிலை. ‘உலகத்தில் அத்தனை பேரும் ஏமாற்றுபவர்கள்; அத்தனை பேரும் பிறருக்கு உதவாதவர்கள்’ என்கிற மாதிரி விரக்தியும் வெறுப்பும் கொதித்துக் கொண்டிருந்த சமயம். புது மண்டபத்துப் புத்தக வெளியீட்டாளரின் மேலிருந்த கோபம் அவளிடமிருந்து விடைபெறாத சமயத்தில், அங்கே வந்து சேர்ந்தான் அரவிந்தன். தமிழ்ப் பேராசிரியரின் புத்தகங்களை வெளியிட வேண்டுமென்ற ஆர்வத் துடிப்புடன் வந்த அவனுக்கு பூரணி உரிய வரவேற்பைக் கொடுக்கவில்லை. கசப்பைக் கக்கவும் தவறவில்லை அவள். கன்னி மனத்தைக் கண்டறிந்த நிலையில் அவன், “இன்னொரு சமயம் வருகிறேன். நீங்கள் தெருவில் மயங்கி விழுந்து விட்டால், அதற்கு உலகமெல்லாம் புணை என்று நினைத்துச் சீறவேண்டியதில்லை,” என்று சொல்லிப் புறப்பட்டு விட்டான். அவன் அங்கிருந்து புறப்பட்டானேயொழிய, அவனுடைய நோட்டுப் புத்தகம் அவனுடன் வழி நடக்கவில்லை. அதை மட்டும் அவள் படித்திருக்காமற் போயிருந்தால், அவள் அவனைப் படித்திருக்க வாய்த் திருக்குமா?

55