பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை
திரு. கே. ஆர். மாணிக்கம், எம்.ஏ., எல்.டி.,
முதல்வர் (ஓய்வு)
அரசு கல்வி இயல் கல்லூரி, சைதாப்பேட்டை,
சென்னை - 600015

'கல்வி உளவியல் கோட்பாடுகள்' என்ற நூல் என் அரிய நண்பர் பேராசிரியர் டாக்டர். ந. சுப்புரெட்டியார் அவர்களால் தமிழன்னையின் திருவடியில் சூட்டப்பெற்ற அழகிய அணிகலன்களுள் தலைசிறந்தது. 'இறவாத புகழுடைய புது நூல்கள் இயற்றல் வேண்டும்' என்ற தேசியக்கவி பாரதியாரின் அறை கூவலுக்கு விடையளிக்கும் பாங்கில் அமைந்துள்ளது. இந்நூல் தமிழிலும் உளவியலிலும் பெற்றுள்ள ஒருங்கிணைந்த புலமை யும், பள்ளியிலும் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியிலும் கற்பித்த அநுபவமும் இந்நூலை நன்முறையில் யாத்தற்குப் பெருந் துணை புரிந்துள்ளன. இத்தனைக்கும் மேலாகப் பேராசிரியர் ரெட்டியாரின் ஆற்றொழுக்கான எளிய தமிழ் நடையும், ஆங்காங்கே பொருத்தமாகக் காட்டப் பெற்றுள்ள அநுபவ எடுத்துக்காட்டுகளும் இந்நூலின் தரத்தை மேலும் உயர்த்து கின்றன.

உளவியல் அண்மைக்காலத்தது. சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் மெய்ப்பொருளியலின் ஒருபகுதியாகக் கருதப் பெற்ற உளவியல் துறை சென்ற நூற்றாண்டில் தான் தனியாகப் பிரிந்தது. 'அறிவியல்' என்ற சிறப்பும் பெற்றது. ஆனால், 'கல்வி உளவியல்' இருபதாம் நூற்றாண்டில் தான் அறிவியல் நிலையை அடைந்தது. இன்று இது பொது உளவியலுக்கே சில உண்மைகளை எடுத்தியம்பும் நிலையும் பெற்றுள்ளது. "மக்கள் கற்கக் கூடும்; கற்கத் தான் செய்கின்றனர். எனினும் ஒழுங்காகவும் பயனுடனும் கற்க உளவியல் அறிவு வேண்டும்" (பக். 6) என்ற பேருண்மையினை இந்நூலெங்கும் பரக்கக் காணலாம்.