பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

கல்வி உளவியல் கோட்பாடுகள்


காட்சிகள், கேட்கும் ஒலிகள், இவை போன்ற பிறது.ாண்டல்கள் ஆகியவை குழந்தையின் பாடத்திட்டத்தில் அமைந்துள்ளன. இவற்றைத் தக்க முறைகளில் கையாண்டு கற்பிப்பதினாலேயே பையனது குணத்தை அமைக்கும் பல அநுபவங்கள் உண்டாகின்றன. குழந்தையின் திறமைகள் முதிர்ந்தால் அவனது கல்விக்குரிய செயல்களும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. இவை அதிகப் பயனளிக்க வேண்டுமாயின் எல்லா நிலைகளிலும் குழந்தையின் கல்வி அவன் வளரும் முறைகளுக்கேற்ப அமைதல் வேண்டும். இனி, குழந்தையின் வளர்ச்சிபற்றிய சிறப்பியல்புகளைக் காண்போம்.

வளர்ச்சியின் சிறப்பியல்புகள்

கற்றலையும் கற்பித்தலையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் வளர்ச்சியின் இயல்பினைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கூறுகளைப்பற்றிய ஆராய்ச்சிகளையெல்லாம் இச்சிறு நூலில் சுருக்கியுரைத்தல் என்பது இயலாத செயல். எனினும், வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் ஒரு சில சிறப்பியல்புகளை[1] ஆசிரியர்கள் அறிந்து கொள்ளுதல் சாலப் பயன் தரும்.

(1) ஓர் உயிரியின் வளர்ச்சி அதன் குடிவழி[2] சூழ்நிலை[3]: ஆகிய இரண்டும் இடையறாது இடைவினை[4] இயற்றுவதன் விளைவினால் ஏற்படுவதாகும்: குடிவழி என்பது பிறவியிலேயே உயிரிக்குக் கிடைத்த இயற்கை ஆற்றல்[5] சூழ்நிலை என்பது பள்ளியிலும் வெளியிலும் குழந்தைக்குக் கிடைக்கும் அநுபவங்கள்; ஆசிரியர், பெற்றோர், மற்றோர் அளிக்கும் ஊக்கம். குழந்தைக்குக் கிடைக்கும். வெற்றி, தோல்விகள் ஆகியவை அனைத்தும் அடங்கியதொரு நிலை. இவற்றுள் ஒன்றில்லாமல் பிறிதொன்றால் மட்டிலும் வளர்ச்சி ஏற்பட முடியாது. இஃது என்போலவோ எனின், விதையும் மண்ணும் இணங்குவது போல என்க. விதையின்றி மண், செடியை உண்டாக்க முடியாது; அங்ங்னமே மண்ணின்றி விதை வளராது.

(2) வளர்ச்சி, அளவிலும் பண்பிலும் நடைபெறுகின்றது: வளர்ச்சியில் இரு கூறுகள் அடங்கியுள்ளன. ஒன்று, அளவில்

  1. 16. சிற்ப்பியல்புகள்-Characterstics.
  2. 17. குடிவழி-Heredity.
  3. 18. சூழ்நிலை-Environment.
  4. 19, இடைவினை-Interaction.
  5. 20. நான்காம் இயலில் காண்க.