பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

83



முயற்சியின்மை போன்ற கூறுகளில் தரமிடலாம். ஒருவருடைய உடலமைப்பு, மனநிலை, ஒழுக்கம், வழக்கம், எண்ணங்கள்: மனப்போக்கு, மீப்பண்பு, இயல்பு, பண்பு, மனப்பான்மை, மனப் பாங்கு, நாப்பழக்கம், மனப்பழக்கம், கைப்பழக்கம் முதலிய அனைத்தும் ஒருங்கு திரண்டு எந்தெந்த அளவில் அமைந்து எந்தெந்த வகையில் இயைபு பெற்று விளங்குகின்றன என்பதனைக் காணல்வேண்டும். இத்தகைய கூறுகள் அனைத்தையும் காட்டும் படம் ஆளுமைப் படம் எனப்படும். இவற்றினை அளப்பதற்கு (1) தனியாள் முறை; (2) தரமிடல்; (3) பென்சில்-தாள் ஆளுமை அளக்கும் உதிரிகள்; (4) நடத்தைச் சோதனைகள்; (5) கண்டு பேசல் அல்லது பேட்டி நிலைமைச் சோதனைகள் ; (7) புறத்தேற்று முறைகள் என்ற முறைகளை மேற்கொள்ளலாம். இவற்றைப்பற்றிய விவரங்களை உளநூல்களில் கண்டு கொள்க. ஒருவருடைய ஆளுமையை அளப்பதற்கு குழவிப்பருவமே சிறந்தது என்று அறிஞர்கள் அனைவரும் கருதுவர்.

ஆளுமை வளர்ச்சிக்குக் குடிவழியும் சூழ்நிலையும் அடிப்படைக் கூறுகளாகும். குடும்பம், விளையாட்டுக்குழு, உறவினர், பள்ளித் தோழர்கள், சங்கம் போன்ற சமூக நிலையங்கள் யாவும் ஆளுமை வளர்ச்சியில் பங்கு பெறுகின்றன. வீட்டில் மட்டுக்கு மிஞ்சிய செல்வம் கொடுத்தல், மாணாக்கர்களைப் புறக்கணித்தல், உட்குறைபாடுகள் முதலிய காரணங்களால் ஒருவருடைய ஆளுமை பாதிக்கப் பெறலாம். ஆசிரியர் இத்தகைய பழங்குறைகளைக் கண்டறிதல் வேண்டும். பள்ளியில் இத்தகைய நோயூட்டும் நிலைகள் ஏற்படாதவாறு கண்காணிக்கவும் வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி உள்ளக் கிளர்ச்சி எதிர்வினைகள் உண்டென்றும், அவற்றை அவரவரே கண்டறிந்து வாழவேண்டும் என்றும் நாம் அறிதல் வேண்டும். இதுவே ஆளுமை வளர்வதற்குச் சிறந்த வழியாகும்.

ஒரு குழந்தையின் கல்வி அது பிறந்தவுடனேயே தொடங்கி விடுகின்றது. குழந்தை மூத்தோருடன் கொண்டுள்ள தொடர்பு, அவர்கள் அதனைப் பாதுகாக்கும் விதம், குழந்தை காணும்


10. ஆளுமைப் படம்-Personality profile.
11. தரமிடல்-Rating.
12. நடத்தைச் சோதனைகள்-Behaviour tests.
13. கண்டு பேசல்-Interview.
14. நிலைமைச் சோதனைகள்-Situation tests.
15. புறத்தேற்று முறைகள்-Projective procedures.