பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

கல்வி உளவியல் கோட்பாடுகள்



எங்கனம் துலங்குகின்றான் என்பதைக் கொண்டே அவனுடைய ஆளுமையை அறிதல் கூடும்.


ஆளுமையில் பல கூறுகள் அமைந்துள்ளன என்பதை மேலே கண்டோம். ஆனால், சமூகக் கூறுகள் தனிச் சிறப்புடையவை. சில உளவியலார் மக்களை அகமுகர் என்றும் புறமுகர் என்றும் இரு கூறிட்டுப் பேசுவர். யுங் போன்ற உளவியல் அறிஞர்கள் இவர்களுடைய பண்புகளை ஆராய்ந்து குறித்து வைத்துள்ளனர். அகமுகர் என்போர் உள்நோக்கியவர்: சதா கனவு கண்டு கொண்டிருப்பர்; எதிர்காலத் திட்டம் போடுவதிலேயே உழல்வர்; தம்மைப் பற்றியே ஆராய்ந்து கொண்டிருப்பர்; சமூகத் தொடர்புக்கு அஞ்சுவர்; இவர்கள் எளிதில் ஒரு முடிவுக்கு வாரார். புறமுகர் என்போர் தம் உணர்ச்சிகளை எளிதாக வெளியிடுவர்; நிகழ்கால வாழ்வில் கருத்துடையவர்கள்: கைக்குக் கிடைக்கக் கூடியவற்றில் நாட்டம் செலுத்துபவர்கள். இவர்கள் எளிதில் முடிவுக்கு வருவர்; சமூகத்திலும் நன்றாகப் பழகுவர். ஆனால், உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் அகமுகருமல்லர்: புறமுகருமல்லர். அவர்களை இருமுகர் என்பதே பொருத்தமுடையதாகும்.


அநுபவத்தில் ஆளுமை : இவ்வுலகில் உடலை அடிப்படையாகக்கொண்டு மக்களைச் சிலர் தரமிடுவர். குட்டை, நெட்டை, பருமன், மெலிவு போன்ற உடலமைப்புக்குத் தக்கவாறு மக்களின் மனப்பண்பு அமைந்திருக்கும் என்று கருதுவர். மெலிவாக உள்ளவர் சூழ்ச்சித் திறம் வாய்ந்தவர் என்றும், உடல் பருத்திருப்பவர் நம்பத் தகுந்தவர் என்றும் ஆங்கில நாடக ஆசிரியர் செகப்பிரியர் கூறிப் போந்ததை ஆங்கில இலக்கியம் படித்தோர் அறிவர். சில உளவியலாரும் அங்ஙனமே கருதுகின்றனர். எது எப்படியாயினும் தூம்பிலாச் சுரப்பிகளின் ஆட்சிக்குத் தக்கவாறு மக்களின் மீப்பண்பு அமைந்துள்ளது என்பது மட்டிலும் உண்மை.

ஆளுமையை அளத்தல் : ஆளுமையை அளக்கும்போது மேற்கூறிய பரந்த கூறுகளேயன்றி, தனிப்பட்ட மனப்பான்மைக் கூறுகளையும் கவனிக்கலாம். ஆதிக்கம்-பணிவு. விடாமுயற்சி


4. அகமுகர்-Introvert
5. புறமுகர்-Extrovert
6. யுங் - Jung
7. இருமுகர் - Ambiverts
8. தூம்பிலாச் சுரப்பி - Ductless gland
9. மீப்பண்பு - Temperament