பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையாகவுள்ள சூழ்நிலை அமையாவிடில் வளர்ச்சி வீதமும் வளர்ச்சிக் கோலமும் பாதிக்கப்பெறும். உணவூட்டம், செயல், ஒய்வு, நல்ல மனநிலை, தேவையான ஒழுங்கு நிலை முதலிய கூறுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. இவை நன்னிலையிலமைந்தால் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

(8) ஒவ்வொரு குழந்தையும் தனக்கே உரிய சிறப்பான முறையில் வளர்கின்றது: சில குழந்தைகள் உயரமாகவும் சில குட்டையாகவும், சில ஒல்லியாகவும், சில தடித்தும் இருக்கின்றன. ஒவ்வொருவருடைய வளர்ச்சியும் ஒவ்வொருவிதமாகவே இருக்கும். இதனால் பெற்றோர்கள் குழந்தை வளர்ச்சியினைத் துரிதப்படுத்துவதற்காக எவ்வித முயற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. குழந்தைக்குக் குழந்தை வளர்ச்சி வேறுபாடுகள் இருக்கும் என்பதை அவர்கள் அறிதல் வேண்டும்.

(9) வளர்ச்சி இயக்கங்களின் ஒருமைப்பாட்டைக் குறிக்கின்றது: சிறுசிறு பகுதிகளின் வேலைகள் ஒருமைப்பாடு[1] பெற்றுப் புதிய செயலாக அமைகின்றன. பெரும்பாலும் நம்முடைய திறனுள்ள செயல்கள் யாவும் முன்னரே அமைந்த துலக்கங்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றுப் புதியவைகள் சிலவற்றுடன் சேர்ந்து திரும்பவும் புதிய கோலங்களாக அமைபவையே.

(10) வளர்ச்சி சிக்கலானது; அதன் எல்லாக் கூறுகளும் நெருங்கிய தொடர்புடையவை: குழந்தையின் உடல் வளர்ச்சி அறிவு வளர்ச்சியோடும், உள்ளக்கிளர்ச்சி வளர்ச்சியோடும், சமூக வளர்ச்சியோடும் தொடர்புடையது. உள்ளக் கிளர்ச்சிகளில் நேரிடும் அமைதிக்கலைவு உண்பதில், அல்லது துரங்கு வதில் குழந்தையின் நடத்தையைத் தீர்மானித்தல் கூடும். குழந்தையின் உறுப்புக்குறை சில மனப்போக்குகளை உண்டாக்கவும், சமூகப் பொருத்தப்பாட்டை ஏற்படுத்தவும் தொடக்க நிலையாக இருத்தல் கூடும். இத் தொடர்புகளைச் சரியாகப் புரிந்துகொண்டால், குழந்தையின் வளர்ச்சியில் நாம் எதனை எதிர்பார்க்கலாம் என்பதை அறியலாம். இதனால் பின்னர் நிகழும் வளர்ச்சி முறைகளை முன்னரே அறிந்து, அதற்கேற்பப் பொருத்தப்பாடுகளை எய்த ஏதுவாகின்றது.

மேற்கூறிய வளர்ச்சிபற்றிய உண்மைகளை ஆசிரியர்களும் பெற்றோர்களும் அறிந்து குழந்தைகளின் வளர்ச்சியில் தக்க சூழ்நிலைகளை நல்கி ஏற்ற பயிற்சிகளையும் அளித்தல்


  1. 29. ஒருமைப்பாடு-Intergration.