பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

119


கின்றனர். இரு பாலாரும் தமக்குள் சரியான, பெருந்தன்மையான, ஏற்ற மனோபாவங்களைக் காட்டிக் கொள்ளுகின்றனர். இந் நிலையில் பால்கல்வி [1] கற்பித்தல் இன்றியமையாதது என்பர் அறிஞர்.

உடல் மாற்றங்களுக்கேற்பப் பொருத்தப்பாடு : இப் பருவத்தில் உடலில் ஏற்படும் மாறுபாடுகள் வியக்கத் தக்கவை. இளைஞன் தன் உடல் வளர்ச்சி மாற்றத்தைத் தானே உணர்ந்தவனாகி, உடல் வலிமையையும் ஆண்மையையும் பெறுவதில் ஊக்கங் கொண்டு பலவகை விளையாட்டுகள், போட்டிப் பந்தயங்கள், வேலைகள் ஆகியவற்றில் ஈடுபடுகின்றான். அதனால் தொழில் புரிகிற திறமையும் செம்மையும் மிகுகின்றன. ஆதலால்தான் பள்ளிகளில் நற்பயன் விளைக்கும் பலவகை வேலைகள், விளையாட்டுகள், சாரணர் இயக்கம், குடிமைப் பயிற்சி, மகிழ்ச்சிச் செலவு முதலியவைகளில் சிறுவர் சிறுமியரைக் கலந்து கொள்ளுமாறு செய்கின்றனர். ஆயினும், அளவுக்கு மீறின வேலையளிப்பது தீங்கு பயக்கும். போதிய அளவு ஒய்வு, நல்ல உணவு, உடல்நலம் இவை தேவையாகும்.

மகளிரிடத்திலும் இத்தன்னுணர்வு தோன்றி, உடலைப் பற்றிய ஊக்கம் ஓரளவு காணப்படும். அவர்கள் தங்கள் உடல் தோற்றத்தில் மிக்க கவனம் செலுத்துவர். உடல் நலத்தையும் உடலழகையும் வளர்க்குமெனத் தாங்கள் கருதும் உடற் பயிற்சிகள் அவர்களது மனத்தைக் கவரும். வடிவழகிலும் ஆடையிலும் அவர்கள் காட்டும் கவனத்தைப் பெற்றோர் உள்ளவாறு உணர்தல் இன்றியமையாததாகும். தங்களுடைய பெண் மணிக்கணக்கில் கண்ணாடியின் முன் நிற்பதைக் கொண்டு அவள் கெட்டுவிட்டாள் என்று கருதுதல் ஆகாது. உதடுகளுக்கு நிறமூட்டி, இரு சடைகள் போட்டு ஆடையணி முதலியவற்றால் பகட்டுச் செய்து கொள்ளுதலோ அல்லது அதற்கு நேர்மாறான நாகரிகமற்ற முறையில் ஆடையணிந்து இருத்தலோ இவ்விரண்டும் தவிர்க்க வேண்டியவையாகும். விருந்து, விழா போன்ற நாட்களுக்குத் தகுந்த ஆடைகள் தனக்கு இல்லையென்றோ, மற்றப் பெண்கள் அணிந்திருக்கும் ஆடைகளைப் போல் தனக்கு இல்லையென்றோ ஒரு பெண் வருந்தக்கூடும்.

இளைஞனும் இப் பருவத்தில் தன் தோற்றத்தில் கவனம் செலுத்தக் கூடும். குறுகிவிட்ட கால்சட்டைகளை அணிய மறுப்பான். அவ்வாறு அணிந்து கொண்டு வெளியில் செல்ல நேரும்போது வருந்துவான். மற்ற இளைஞர்கள் உயர்ந்த


  1. 89. பால்கல்வி -Sex education.