பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

121



(4) இப் பருவத்தில் பொங்கி எழும் இயல்பூக்கங்களையும் உள்ளக் கிளர்ச்சிகளையும் தக்க முறையில் தூய்மை செய்ய வேண்டும். இலக்கியக் கழகங்கள், நுண்கலைக் கழகங்கள், சாரணர் இயக்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், சமூகத் தொண்டுக் கழகங்கள், பள்ளி விழாக்கள் போன்றவை இதற்குத் தக்க வாய்ப்புகளை நல்கும். இப் பருவத்தில் இசை, ஓவியம், வண்ணவேலை, கற்பனை வன்மை, தையல், இலக்கியம், சேவை போன்ற ஆக்க வேலைகளில் இளைஞர்களை ஈடுபடுத்தி அவர்களின் ஆற்றலை உயர்மடைமாற்றம் [1] செய்யலாம். சிறுவர்களை மட்டந்தட்டிக் குறைகூறாமல், அவர்கள் பின் நின்று ஏற்ற அறிவுரையும் வாய்ப்புகளும் நல்கிப் பொருத்தமுற உதவுதல் மூத்தோர் கடமையாகும். எவ்விதத்திலும் இளைஞர்களின் தன் மதிப்புக்குக் குறைவான முறையில் மூத்தோர் தடத்து கொள்ளுதல் ஆகாது.

குழந்தைகளை உற்றுநோக்கும் முறைகள்

பயிற்றுதல் திறம்பட அமைய வேண்டுமானால், பயிற்றும் பொருளையும் பயிற்றப் பெறும் குழந்தையையும் நன்கு அறிதல் வேண்டும் என்பது இன்றைய உளவியல் நமக்கு உணர்த்துவது. குழந்தைகளைப்பற்றி நூல்களும் அறிஞர்களும் எடுத்துக் கூறுபவை ஒரளவு வழிகாட்டிகளாகவே பயன்படும்; ஆசிரியர்களே குழந்தைகளை உற்றுநோக்கி எழுதி வைக்கும் குறிப்புகளே நன்கு பயன்படும். நூலில் கூறப்பெறுபவையும் அறிஞர்கள் உரைப்பவையும் சரியா என்பதையும் சோதிக்கலாம். சரியாக இருப்பின் கொள்ளலாம்; இல்லாதவற்றைத் தள்ளலாம்.

குழந்தைகளை உற்று தோக்கும் ஆசிரியர்கள் குழந்தைகள் பால் அன்புடையவர்களாக இருத்தல்வேண்டும், குழந்தைகளைத் தனித்தனியாகவும் குழுக்களிலும் கவனிக்க வேண்டும். பாட நேரம், விளையாடுமிடம், ஒய்வு நேரம், தோட்டம், பூங்கா, கடை, கோவில், வீடு, தெரு, குளக்கரை, நாடகக் கொட்டகை, படக்காட்சி, மகிழ்ச்சிச் செலவு போன்ற பல சூழ்நிலைகளிலும் குழந்தைகளை உற்று நோக்குதல் வேண்டும். குழந்தைகள் உடல்நிலை, அறிவு நிலை, உள்ளக்கிளர்ச்சி நிலை, சமூகப் பண்பு நிலை போன்ற பல கூறுகளை உடையவர்களாதலின், அவையனைத்தையும் அவற்றின் வளர்ச்சிப்படிகளையும் உற்று நோக்க வேண்டும். அவ்வப்பொழுது குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது.


  1. 91. உயர் மடைமாற்றம் - Sublimation.