பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊக்குநிலையும் உள்ளக் கிளர்ச்சிகளும்

185


கூடாது. அவற்றைப் பேய் ஒட்டுவது போல் ஒட்டி ஒழித்தல் வேண்டும். நேரே அச்சம் வேண்டாம் என எரிந்து விழுந்து தடுப்பது அச்சத்தை மேலும் வளர்க்கும் வழியாகும். குழவியின் அச்சத்தை ஊன்றி உற்று நோக்கி ஆராய்தல் வேண்டும். மேலே நாம் அச்சம் தோன்றும் வகைகளாகக் கூறியவற்றில், குறிப்பிட்டதொரு குழவியிடத்தே, எந்த வகையால் அச்சம் தோன்றுகிறது என உணர்தல் வேண்டும். அந்த நிலைக்கேற்ப மாற்று நிலை ஒன்று அமைத்தல் வேண்டும். அச்சப் பேயினை ஒட்ட அறிஞர்கள் பல வழிகளை வகுத்துள்ளனர். கொடிய விலங்குகளைக் கூண்டில் அடைத்தலும் கட்டி வைத்தலும் வேண்டும். அந்த நிலையில் வைத்துப் பழகி வந்தால் அச்சம் நீங்கும். தீங்கு பயக்காத முயல் முதலிய விலங்குகளைப்பற்றி எழுகின்ற அச்சத்தைச் செயற்கை மறிவினையை[1]' எழுப்பும் வகையாலேயே மாற்றுதல் வேண்டும். நாயைக் கண்டும் பிச்சைக்காரனைக் கண்டும் வெருண்டோடும் குழந்தையை, அவர்கட்குக் குழந்தையைக் கொண்டு உணவு அளிக்கச் சொல்லியும், பிச்சைக்காரனைப் பாடச்செய்தும் பயத்தைத் தெளிவிக்கலாம். இருட்டறையில் பயந்து நடுங்கும் குழந்தையை, இருட்டறையில் விளக்கேற்றியும், அங்கே தங்கி அவனைப் பிடித்துக் கொண்டும், கதை சொல்லியும் அச்சத்தைக்களையலாம். குழி முயலைக் கண்டு அஞ்சிய குழந்தையின் பயத்தையொழிக்க வாட்சன் என்ற ஆய்வாளர் இவ்வாறு செய்தார்: குழந்தை மேசையின் ஓர் ஒரத்தில் மகிழ்ச்சியுடன் உண்டுகொண்டிருக்கும் பொழுது மற்றோர் ஒரத்தில் குழிமுயலை வைத்தார். முதலில் குழந்தை சிறிது திடுக்கிட்டது; ஆனால், மகிழ்ச்சிதரும் உண்ணுதலுடன் இயைபு பெற்றதால் அச்சம் குறைவாகவே இருந்தது. நாடோறும் இங்ங்னம் செய்யப்பெற்று, ஒவ்வொரு நாளும் முயல் அண்மையில் சிறிது சிறிதாகக் கொண்டுவரப் பெற்றது. சின்னாட்கள் கழிந்ததும் குழந்தை முயலுடன் விளையாடிக் கொண்டே உணவை உண்டது. குழந்தைகளிடம் நயமாகப் பேசுதல் அவசியம். மூத்தோர் ஆதரவு தனக்கு இருப்பதையும் அதை எப்பொழுது வேண்டுமானாலும் பெறலாம் என்பதையும் குழந்தை உறுதியாக அறிந்தால் குழந்தையிடமிருந்து பலவித அச்சங்கள் அகலும். சற்று வளர்ந்தவர்களிடம் சிந்தனையை யும் அறிவையுங் கொண்டு அச்சத்தைத் தெளிவிக்கலாம். பாடங்களை அவற்றின் கடினத்துக்கேற்றவாறு நிரல்படுத்தி னால், பாடங்களைப்பற்றிய அச்சம் அகலும்; தன் மதிப்பும் துணிச்சலும் உறுதிப்படும். நிலைமையைச் சமாளிக்கும் செய-


  1. 40...மறிவினை-Reflex action.