பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊக்குநிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும்

193


தக்க காரணமின்றியே சினத்துடன் வெகுண்டு எழுவதும், அல்லது அச்சத்துடன் வெருண்டோடுவதும், சிறு புகழ்ச்சியால் இறுமாப்பு அடைவதும், எல்லா நிலைகளிலும் களிப்புக் கடலில் மூழ்குவதும், சிறு இடர்ப்பாடுகள் நேரிடினும் உளச்சோர்வு கொள்ளுதலும், விபத்து நேரிடாதிருக்கும்பொழுதே விபத்து நேரிடப் போவதாகத் திகிலடைவதும் தன்னடக்கமில்லாத பண்பினைக் காட்டுகின்றன. ஒருவாறு உள்ளக்கிளர்ச்சிகளை அடக்குவதும் மறைப்பதும் சிறந்த நல்லொழுக்கத்தின் அறிகுறிகளாகும்.

தன்னடக்கத்தில் தனியாள்களிடம் வேற்றுமைகள் காணப் பெறுகின்றன. சிலர் வாழ்க்கையில் நேரிடும் உயர்வு களையோ வீழ்ச்சிகளையோ கண்டு அதிர்ச்சியடையாமல் அமைதியாக உள்ளனர். அவர்கள்தாம் அறிவுள்ள மக்கள்; சிந்தனையுடன் செயற்படுபவர்கள். அவர்கள் தன் முனைப்பால் எதிர்ப்பையும் கொள்வதில்லை; சிறு நிகழ்ச்சிகளால் கொந் தளிப்பையும் அடைவதில்லை. அவர்களிடம் உள்ளக்கிளர்ச்சிகள் மட்டுப்படுத்தப் பெறுகின்றன. மற்றும் சிலர் சிடுசிடுத்த முகத்துடனும், கடுகடுத்த சொற்களை வீசுபவர்களாகவும் இருப்பதைக் காண்கின்றோம். எந்தச் சிறு நிகழ்ச்சியும் அவர் களை நிலைகலக்கித் தடுமாறச் செய்து விடும். இந்த இரு சாராருக்கும் இடைப்பட்ட பல்வேறு நிலையிலுள்ள உள்ளக் கிளர்ச்சிகளைக் கொண்டவர்களும் உள்ளனர். இவர்களைத் தவிர, ஒவ்வொரு சிறு நிகழ்ச்சிக்கும் யோசனை கோராததால் அவமானம் அடைவோரும், எந்த விதமான அவமானத்திற்கும் கடிந்து கொள்வதற்கும் அசையாத உள்ளத்தினரும் உளர். உள்ளக்கிளர்ச்சிகளை அடக்கியாள்வதுதான் நாகரிகத்தின் சின்னம். தன்னடக்கம் என்பது தன்னை நெறிப்படுத்திக் கொள்வதாகும்.

இந்த உள்ளக்கிளர்ச்சிகளை எங்ஙனம் கட்டுப்படுத்துவது: மூன்று முறைகளால் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

முதலாவது : உள்ளக் கிளர்ச்சிகளை நசுக்கி அவற்றிற்கு இடந்தராது செய்தல். முற்காலத்தில் இம்முறையே மேற் கொள்ளப் பெற்றது. இதற்கு முன்னோர்கள் ஒறுத்தல் முறையை (தண்டோபாயம்) கையாண்டனர். அடக்கு முறைக்குச் சிறிது இடம் இல்லாமல் இல்லை. சிறுவன் பள்ளி செல்லல், மருந்து உட்கொள்ளல், பற்களைத் துவக்கல், பள்ளி விதிகளைப் பின்பற்றுதல் போன்ற நற்செயல்களைச் செய்யத் தூண்டுவதில் இவ்வடக்கு முறை பயன்படுகின்றது. இச்செயல்களின் மிக்க இன்றியமையாமையை விளக்கிக் காட்டிய பிறகே

க. உ, கோ.13